Published : 23 Aug 2021 03:13 AM
Last Updated : 23 Aug 2021 03:13 AM

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிக்கு உழைத்த மாவட்ட தலைவர்களுக்கு கார் பரிசு

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கோவைதெற்கு, நாகர்கோவில், மொடக்குறிச்சி, திருநெல்வேலி ஆகிய 4 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அவர்கள் வெற்றி பெற காரணமாக இருந்த 4 மாவட்ட தலைவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கார் பரிசாக வழங்கப்படும் என்று அப்போதைய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், மாவட்டத் தலைவர்களுக்கு கார் பரிசளிக்கும் நிகழ்ச்சிநேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் தொகுதி அடங்கிய கன்னியாகுமரி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ், திருநெல்வேலி தொகுதி அடங்கிய திருநெல்வேலி மாவட்டதலைவர் மகாராஜன், கோவை தெற்கு தொகுதி அடங்கிய கோவை நகர் மாவட்ட தலைவர் நந்தகுமார், மொடக்குறிச்சி தொகுதி அடங்கிய ஈரோடு தெற்கு மாவட்டதலைவர் சிவ சுப்பிரமணியன் ஆகிய 4 பேருக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ.க.தலைவர் கே.அண்ணாமலை ஆகியோர் இணைந்து காரை பரிசாக வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “திமுக தேர்தல் வாக்குறுதியில் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 தருவதாக சொன்னார்கள். ஆட்சிக்கு வந்து 100 நாட்களாகியும் அந்த ரூ.1000 என்ன ஆனது என்பது தெரியவில்லை?. நாம் எதைச் சொன்னாலும் செய்வோம் என்பதற்கு உதாரணமாக இன்று கார் பரிசாக அளிக்கப்படுகிறது” என்றார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசும்போது, “தேர்தல் பணியாற்றிய தொண்டர்களின் உழைப் புக்கு அங்கீகாரமாக இன்று கார் பரிசளிக்கப்படுகிறது. தமிழக பாஜக கட்சி ரீதியாக 60 மாவட்டங்களில் இருக்கிறது. இன்று 4 மாவட்டங்களுக்கு இந்த கார் செல்கிறது. மற்ற மாவட்ட பாஜக தலைவர்களும் தங்கள் உழைப்பின் மூலம் காரை பரிசாக பெறும் சூழ்நிலையை உருவாக்கி தர வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x