Last Updated : 16 Feb, 2016 10:28 AM

 

Published : 16 Feb 2016 10:28 AM
Last Updated : 16 Feb 2016 10:28 AM

சென்னையில் உ.வே.சா வாழ்ந்த இடத்தில் நினைவு இல்லத்தை அரசு கட்டுமா? - தமிழறிஞர்கள் எதிர்பார்ப்பு

பழந்தமிழ் இலக்கியங்களை தன் வாழ்நாள் முழுவதும் தேடித்தேடி சேகரித்து, அவற்றை நூல்களாக வும் வெளியிட்டவர் உ.வே.சாமி நாத ஐயர். ’தமிழ்த் தாத்தா’ என்று அழைக்கப்படும் உ.வே.சாமிநாத ஐயர் சென்னையில் வாழ்ந்த வீட்டில் அவரது 161-வது பிறந்த நாளில் தமிழக அரசு நினைவு இல்லம் கட்டுவதற்கான அறிவிப்பை வெளி யிட வேண்டுமென்று தமிழறிஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கும்பகோணம் அருகேயுள்ள உத்தமதானபுரத்தில் 1855-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி உ.வே.சா. பிறந்தார். அன்றைய நிலையில் அழிந்து கொண்டிருந்த 90-க்கும் மேற்பட்ட தமிழ் நூல்களையும், 3000-க்கும் அதிகமான ஏட்டுச் சுவடி களையும் ஊர் ஊராக அலைந்து கண்டெடுத்து ஆவணப்படுத்தி யதில் உ.வே.சா. மிகப் பெரிய பங்களிப்பினை ஆற்றினார்.

சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழாசிரியராக பணியாற்ற 1903-ல் அவர் சென்னைக்கு வந்தார். அப்போது திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன்பேட்டையிலுள்ள ஒரு வீட்டில் 20 ரூபாய் வாடகையில் வசித்தார். சில காலத்துக்கு பிறகு, அந்த வீட்டை அவரே விலைக்கு வாங்கினார். அந்த வீட்டுக்கு தனது ஆசிரியர் நினைவாக ‘தியாகராச விலாசம்’ என்று பெயர் வைத்தார். இந்த இல்லத்துக்கு வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் வந்திருக்கி றார். இரண்டாம் உலகப் போரின் போது 1942-ல் சென்னையிலிருந்து வெளியேறி, திருக்கழுக்குன்றத் திலுள்ள திருவாவடுதுறை ஆதீனத் துக்குச் சொந்தமான இடத்தில் வசித்தார்.

பிறகு, அவரது உறவினர்களின் பராமரிப்பில் இருந்த வீடு விற்பனை செய்யப்பட்டு, 2012 செப்டம்பரில் வீட்டின் உள்பகுதியை இடித்தனர். உடனே, இது குறித்து பத்திரிகைகள், தமிழறிஞர்கள் கண்டனம் தெரி விக்க, கட்டிட இடிப்புப் பணி தடை செய்யப்பட்டது. ஆனால், அரசிடமிருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், 2014 டிசம்பரில் அந்த வீட்டை மொத்தமாய் இடித்துவிட்டனர். இப் போது காலிமனையாய் கிடக்கும் அந்த இடத்தில், உ.வே.சா. நினைவு இல்லம் அமைக்க வேண்டுமென்று தமிழறிஞர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இதுகுறித்து மூத்த தமிழறிஞர் களுள் ஒருவரான உதயை மூ.வீரையன் கூறியதாவது:

சங்க இலக்கியங்கள், காப்பியங் கள், புராணங்கள் அழிந்துவிடாமல் தொகுத்து அச்சிட்டு நூல்களாக்கிய உ.வே.சா. சென்னையில் வாழ்ந்த வீட்டை, அவரது நினைவு இல்ல மாக்க வேண்டும் என்ற கோரிக் கையை அரசிடம் பல்லாண்டு களாக வலியுறுத்தி வருகிறோம். நமது பழந்தமிழ் இலக்கி யங்களான புறநானூறு, குறுந் தொகை, சிலப்பதிகாரம் உள்ளிட்ட காப்பியங்கள் அவர் தேடி கண்டெ டுத்து நமக்குத் தந்தவை. போக்கு வரத்து வசதிகள் எதுவுமில்லாத அந்த காலத்திலேயே அவர் செய்தி ருக்கும் அரும்பணிக்காக அவரது நினைவைப் போற்றிட வேண்டியது நமது கடமையாகும்.

உ.வே.சா. பிறந்த உத்தமதான புரம் வீட்டை நினைவு இல்லமாக முன்பே ஆக்கியிருப்பதாக அரசு சொல்லலாம். பாரதி பிறந்த எட்டயபுரம் வீட்டை நினைவு இல்லம் ஆக்கியிருப்ப தோடு, அவர் வாழ்ந்த திருவல் லிக்கேணி வீட்டையும் அரசு நினைவு இல்லமாக ஆக்கியிருக்கிறது. அதே போல், திருவல்லிக்கேணியில் வாழ்ந்த உ.வே.சா. வாழ்ந்த வீட்டி லும் இடிக்கப்பட்ட இடத்தில் அவரது நினைவு இல்லம் கட்டப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

‘தமிழ் தாத்தா’ உ.வே.சா.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x