Published : 21 Aug 2021 04:21 PM
Last Updated : 21 Aug 2021 04:21 PM

மதுரை மாநகராட்சியில் 2,500 தூய்மைப் பணியாளர்கள் பற்றாக்குறை: காலிப் பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல்

மதுரை

மதுரை மாநகராட்சியில் 2,500 தூய்மைப் பணியாளர்கள் பற்றாக்குறையால் தினமும் 20 சதவீதம் குப்பை தேங்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கரோனாவால் வருவாய் குறைந்ததால் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் மொத்தம் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் வேலை பார்க்கின்றனர். இவர்களில் வெறும் 50,000 பேர் மட்டுமே நிரந்தரப் பணியாளர்களாக உள்ளதாகக் கூறப்படுகிறது. மற்ற பணியாளர்கள் எப்போதாவது பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற எதிர்பார்ப்பில் சொற்ப ஊதியத்திற்குப் பணிபுரிகிறார்கள். மதுரை மாநகராட்சியில் தற்போதுள்ள மக்கள்தொகை, வீடுகள் அடிப்படையில் 6 ஆயிரம் தூய்மைப் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால், 3,500 பேர் மட்டுமே பணிபுரிகிறார்கள்.

இதில், 800 தூய்மைப் பணியாளர்கள் மட்டுமே நிரந்தரப் பணியாளர்களாக உள்ளனர். மற்றவர்கள் அனைவரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், தினக்கூலிப் பணியாளர்களாக உள்ளனர். 2,500 பணியிடங்கள் நிரப்பப்படாமலே உள்ளன. மாநகராட்சி கடந்த 2013-ம் ஆண்டு வரை 72 வார்டுகளாகவே இருந்தது. அதன்பிறகு அருகில் நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராமப் பஞ்சாயத்துகள் இணைக்கப்பட்டு வார்டுகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்த்தப்பட்டது. ஆனால், தூய்மைப் பணியாளர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை. அதனால், நகரில் தினமும் உருவாகும் குப்பையில் 80 சதவீதம் மட்டுமே சேகரிக்கப்பட்டு உரக்கிடங்கிற்குச் செல்வதாகவும், மற்ற குப்பைகள் தேங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து மதுரை மாநகராட்சி சிஐடி சங்கப் பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:

’’ஒப்பந்தப் பணியாளர்களுக்கு, கான்டிராக்டர்கள் முறையாக ஊதியம் வழங்குவதில்லை. ஒப்பந்தப் பணியாளர்களுக்கான ஊதியம், அவர்களுக்கான பிஃஎப், இஎஸ்ஐ கட்டப்படுவதை மாநகராட்சி நகர் நல அதிகாரிகள் கண்காணிப்பதில்லை. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளையும் அமல்படுத்துவதில்லை. ஒப்பந்த முறை (அவுட் சோர்ஸிங்) என்பது ஊதியத்தைக் குறைத்து சிக்கனத்தைக் கையாளுவதாகும். ஆனால், இந்த நடைமுறையால் நிர்வாகத்திற்கு ஏதவாது நன்மை இருக்கிறதா? இது லஞ்ச முறைகேடுகளுக்குதான் முக்கியக் காரணமாகிறது.

அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் கைகோத்து, தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய பணத்தைப் பல வகைகளில் முறைகேடு செய்வதுதான் நடக்கிறது. அதனால், நிரந்தரமாகவே குப்பை பராமரிப்பில் ஒப்பந்த முறையைக் கைவிட வேண்டும். தற்போது நிரப்பப்படாமல் உள்ள 2,500 பணியிடங்களுக்கு, ஏற்கெனவே பணிபுரியும் ஒப்பந்தப் பணியாளர்களையே நியமித்துப் பணி நிரந்தரம் செய்யலாம். வாரிசுப் பணியாளர்கள் 500 பேர் விண்ணப்பித்து அவர்களுக்கு இதுவரை பணி வழங்கப்படவில்லை. நிதிப் பற்றாக்குறை இருப்பதாக மாநகராட்சி நிர்வாகத்தினர் காரணம் சொல்கின்றனர்.

மாநகராட்சியின் மொத்த வருவாயில் ஊழியர்களின் ஊதியம் 49 சதவீதத்திற்கு மேல் செல்லக்கூடாது என்று அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. ஆனால், மக்கள்தொகை பெருக்கம், தொழில்துறை வளர்ச்சி அடிப்படையில் வருவாயைப் பெருக்க வேண்டியது மாநகராட்சி அதிகாரிகளின் கடமை. ஆனால், அவர்கள் வருவாயைப் பெருக்குவதற்கு வழி செய்யாமல் 10 ஆண்டிற்கு முன்பிருந்த வருவாயையே தற்போது வரை ஈட்டுவது எந்த விதத்தில் நியாயம்? தமிழக அரசும் சென்னை மாநகராட்சிக்குக் கொடுக்கும் முக்கியத்துவம், ஒதுக்கப்படும் நிதியை இதர மாநகராட்சிகளுக்குச் செய்வதில்லை’’.

இவ்வாறு பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பணி நிரந்தரம் செய்வது என்பது அரசின் கொள்கை முடிவு. ஆனால், காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது’’ என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x