Published : 21 Aug 2021 10:46 AM
Last Updated : 21 Aug 2021 10:46 AM

சுங்கக்கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

சுங்கக்கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், கட்டுமான செலவு, வருவாய் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் எனவும், பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஆக. 21) வெளியிட்ட அறிக்கை:

"தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 23 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படவிருப்பதாக, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறைந்தபட்சம் 8% கட்டணம் உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. எந்தவிதமான வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் சுங்கக்கட்டணத்தை தொடர்ந்து உயர்த்துவது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் சுங்கச்சாவடிகளைக் கொண்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். தமிழகத்திலுள்ள 48 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 24 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.

அவை தவிர்த்து, மீதமுள்ள விக்கிரவாண்டி, ஓமலூர், தருமபுரி, சமயபுரம் உள்ளிட்ட 24 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சுங்கக் கட்டண உயர்வு ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்தப்படுவது வழக்கமான ஒன்று தான்; இதில் புதிதாக எதுவும் இல்லை என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கூறியுள்ளது. இது மக்களின் மனநிலை, நாடும் நாட்டு மக்களும் எதிர்கொண்டு வரும் சூழல் ஆகியவற்றை பொருட்படுத்தாத கருத்து ஆகும்.

கரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அரசின் பொருளாதாரம் முதல் அடித்தட்டு மக்களின் பொருளாதார நிலை வரை அனைத்தையும் நிலை குலையச் செய்திருக்கிறது. நெடுஞ்சாலை சுங்கக்கட்டண உயர்வு என்பது காரில் பயணிக்கும் பணக்காரர்களை மட்டும் தான் பாதிக்கும் என்று கருதக்கூடாது.

சரக்குந்துகளுக்கு கூடுதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் போது, அதன் விளைவாக அத்தியாவசியப் பொருட்களின் விலை கண்டிப்பாக உயரும். பேருந்துகளுக்கான சுங்கக் கட்டணம் உயர்த்தப்படும் போது தனியார் பேருந்துகளின் கட்டணம் உடனடியாகவும், அரசு பேருந்துகளின் கட்டணம் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகும் உயர்த்தப்படும். இதனால் ஏழைகள், நடுத்தர மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

அந்த வகையில், சுங்கக்கட்டண உயர்வு என்பது அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கும் நடவடிக்கையாகும். அப்படிப்பட்ட செயலை பொருளாதார சூழல், மக்களின் வாழ்நிலை ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் மத்திய அரசு செய்யக்கூடாது.

தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் அல்லது அதற்காக செய்யப்பட்ட முதலீடு திரும்ப எடுக்கப்படும் வரை மட்டுமே முழுமையான சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்; அதன்பின்னர், பராமரிப்புக்கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்பது தான் விதியாகும்.

ஆனால், தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பெரும்பாலானவை அமைக்கப்பட்டு, 15 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. அதேபோல், பெரும்பாலான சாலைகளுக்கு செய்யப்பட்ட முதலீடு எடுக்கப்பட்டு விட்டதாக தெரிகிறது. அத்தகைய சாலைகளில் பராமரிப்புக்காக 40% கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும்.

ஆனால், எந்தக் காரணத்தையும் கூறாமலேயே அனைத்து நெடுஞ்சாலைகளிலும் முழுமையான சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுவது மட்டுமின்றி, ஆண்டுக்கு ஆண்டு கட்டண உயர்வு செய்யப்படுவது மக்கள் மீது நடத்தப்படும் பொருளாதாரத் தாக்குதல் ஆகும். இதை ஏற்கவே முடியாது.

அறத்தின்படியும், விதிகளின்படியும் பார்த்தால் தமிழகத்தில் பெரும்பான்மையான நெடுஞ்சாலைகளுக்கு பராமரிப்புக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், ஏற்க முடியாத காரணங்களைக் கூறி முழுமையான கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்கிறது.

உதாரணமாக, சென்னை தாம்பரம் - திண்டிவனம் இடையே பயணிப்பதற்கான 45 எண் கொண்ட தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டை அடுத்த பரணூரிலும், திண்டிவனத்துக்கு முன்பாக ஆத்தூரிலும் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தாம்பரம் - திண்டிவனம் இடையிலான 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் 1999-ம் ஆண்டில் தொடங்கி 2004-ம் ஆண்டில் முடிக்கப்பட்டு 2005-ம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இச்சாலை சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த சாலை அமைக்க ஆன செலவு ரூ.536 கோடி மட்டுமே. ஆனால், கடந்த 16 ஆண்டுகளில் இச்சாலையில் வசூலித்ததாக கணக்கில் காட்டப்பட்ட தொகை மட்டும் ரூ.1,500 கோடிக்கும் அதிகம். ஆனாலும் இன்னும் முழுக்கட்டணத்தை வசூலிப்பது எவ்வகையில் நியாயம்?

தாம்பரம் - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் வசூலிக்கப்பட்ட சுங்கக் கட்டணத்தில் 63 விழுக்காடு தொகை பராமரிப்பு மற்றும் இயக்கச் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டு விட்டதாகவும், மற்றொருபுறம் பணவீக்கம் காரணமாக முதலீட்டுத் தொகை அதிகரித்து விட்டதாகவும் கூறியுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், முதலீட்டை எடுக்க இன்னும் பல ஆண்டுகள் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி எழுப்பப்பட்ட கேள்விக்கு விடையளித்துள்ளது.

இது முழுக்க முழுக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கூறியுள்ள காரணம் தான். இதில், எந்தவிதமான வெளிப்படைத் தன்மையும் இல்லை. மக்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதில் வெளிப்படைத் தன்மை அவசியமாகும்.

தமிழகத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்க ஆன செலவு, அவற்றில் இருந்து வசூலிக்கப்பட்ட கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட வேண்டும். அதுவரை சுங்கக்கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x