Last Updated : 21 Aug, 2021 07:00 AM

 

Published : 21 Aug 2021 07:00 AM
Last Updated : 21 Aug 2021 07:00 AM

கூட்டுறவு வங்கி நகை கடன்தாரர்கள் பட்டியல் தயாரிப்பு: கடன் தள்ளுபடிக்கு கடும் நிபந்தனைகள் விதிக்க முடிவு

மதுரை

தமிழகம் முழுவதும் கடன் தள்ளுபடி திட்டத்துக்காக கூட்டுறவு வங்கி நகை கடன்தாரர்கள் பட்டியல் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலின் போது கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை பெறப்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. திமுக ஆட்சி அமைத்து 100 நாட்களை கடந்த நிலையில், தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிலையில் கூட்டுறவு சங்க நகை கடனை தள்ளுபடி செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில் அரசின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு பல்வேறு நிபந்தனைகளை விதித்து கடன் தள்ளுபடி பெறுவோரின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் வரை நகை அடமானம் வைத்தவர்கள் பட்டியல் கடந்த 3 நாட்களாக இரவு, பகலாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

நகை அடமானம் வைத்திருப்பவர்கள் இரு சக்கர வாகனம், கார் வைத்திருக்கிறார்களா என கணக்கெடுக்கப்படுகிறது. இது தொடர்பாக உண்மை நிலையை அறியவட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் சரிபார்க்கப்படுகிறது.

மேலும், கடன்தாரர் ஏற்கெனவே வழங்கப்பட்ட கடன் தள்ளுபடியால் பலன் அடைந்துள்ளாரா? அரசு ஊழியரா? கூட்டுறவு சங்க ஊழியரா? அரசு மற்றும் கூட்டுறவு சங்க ஊழியர்களின் உறவினரா? அவரது குடும்பத்தில் வேறு நபர்கள் கடன் பெற்றுள்ளார்களா? சிறு, குறு, பெரு விவசாயியா? எவ்வளவு கடன் பெற்றுள்ளார்? என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் சேகரிக்கப்பட்டு தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்படுகிறது.

இந்த விவரங்கள் முழுமையாக சேகரிக்கப்பட்ட பிறகு கூட்டுறவு சங்க கடன் தள்ளுபடி பயனாளிகளுக்கான நிபந்தனைகள் அறிவிக்கப்படும். அதன்படி அரசு ஊழியர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள், இரு சக்கர வாகனம், கார்வைத்திருப்பவர்கள், ஏற்கெனவே நகை கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி வழங்கப்படாது என அறிவிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

இது குறித்து கூட்டுறவு வங்கி அலுவலர்கள் கூறுகையில், இதற்கு முன் செய்யப்பட்ட நகை கடன் தள்ளுபடிகளால் கூட்டுறவு வங்கிகள் ஏற்கெனவே நிதி நெருக்கடியில் உள்ளன.

இந்நிலையில் 5 பவுன் வரை நகை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பால், பெரும்பாலானோர் வட்டியையும் கட்டவில்லை. பணத்தையும் திருப்பித் தந்து நகையை மீட்கவில்லை.

இதனால் கூட்டுறவு சங்கங்களில் வரவு, செலவு முடங்கிபணியாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் ரூ.85 ஆயிரம் கோடி வரை நகை கடன் தள்ளுபடி செய்யப்பட இருப்பதால், பயனாளிகளை தேர்வு செய்வதில் கடும்நிபந்தனைகளை விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது என்றுகூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x