Published : 21 Aug 2021 07:01 AM
Last Updated : 21 Aug 2021 07:01 AM

வானகரத்தில் கூவம் ஆற்றை ஆக்கிரமித்து மீன் சந்தை?- ஆய்வு குழு அமைத்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில், தியாகராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: வானகரம் பள்ளிக்குப்பம் பகுதியில் கூவம் ஆற்றின் கரையோரப் பகுதியை ஆக்கிரமித்து மீன் சந்தை அமைப்பதற்காக, விதிகளை மீறி கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், அந்தப் பகுதியில் கட்டிடக் கழிவுகள் அதிக அளவில் கொட்டப்பட்டுள்ளன. இது, கூவம் ஆற்று நீர் சீராக செல்ல தடையாக உள்ளது. ஏற்கெனவே கூவம் ஆறு மாசுபட்டுள்ள நிலையில், இந்தப் பகுதியில் இருந்து ஆற்றில் கழிவுநீர் கலந்து மேலும் மாசுபடுத்தப்படுகிறது.

எனவே, விதிகளை மீறி கூவம் ஆற்றின் கரையோரம் கட்டப்பட்டுள்ள கட்டுமானத்தை அகற்ற உத்தரவிட வேண்டும். ஆற்றில் கழிவுநீர் கலப்பதையும் தடுக்க வேண்டும். விதிமீறலில் ஈடுபட்டோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் கடந்த 17-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், "மனுதாரின் புகார் தொடர்பாக ஆய்வு செய்ய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட வருவாய் அதிகாரி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மூத்த அதிகாரி, பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளர் ஆகியோரைக் கொண்ட கூட்டுக் குழு அமைக்கப்படுகிறது.

இந்தக் குழு கூவம் ஆற்றை ஆக்கிரமித்து மீன் சந்தை கட்டப்பட்டுள்ளதா? கூவம் ஆற்றில் தண்ணீர் சீராக செல்வதை தடுக்கும் வகையில் கட்டிடக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதா? சுத்திகரிக்கப்படாமல் கழிவுநீர் கூவம் ஆற்றுக்குள் விடப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x