Published : 20 Aug 2021 02:07 PM
Last Updated : 20 Aug 2021 02:07 PM

ஓபிஎஸ்ஸுடன் தொடர்பில் இருக்கும் ஒப்பந்த நிறுவனங்களை விசாரியுங்கள்: மநீம

புளியந்தோப்பு தரமற்ற கட்டுமான விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் ஒப்பந்த நிறுவனங்களுக்கும் உள்ள தொடர்புகள் விசாரிக்கப்படவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''நமது மாநிலம், ”குடிசையில்லாத் தமிழ்நாடு" என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கிறது என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால், தரமற்ற கட்டுமானப் பணிகளால், உச்சபட்ச ஊழலால் ஏழை மக்களின் நம்பிக்கை நொறுங்கிப் போயுள்ளது. உயிராவது மிச்சமாகுமா என்ற அச்சமும் அவர்களிடம் எழுந்துள்ளது.

சமீபத்தில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு வீடுகள், மக்கள் வசிக்கப் பாதுகாப்பானது அல்ல என்பது குறித்து வெளியான ஆதாரங்கள் அதிர்ச்சியடையச் செய்கின்றன. இச்சம்பவம் குறித்து, அரசியல் களத்தில் முதல் குரலாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் குரல் ஒலித்தது. சட்டப்பேரவையிலும் இவ்விவகாரம் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை, எழும்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட புளியந்தோப்பு, கே.பி.பார்க் பகுதி 1-ல் குடிசை மாற்றுவாரியத்தின் சார்பாக ரூ.112.6 கோடி செலவில் 864 வீடுகள் கட்டித் தருவதற்குக் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் (2016-ல்) திட்டமிடப்பட்டு 2019-ல் கட்டி முடிக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் ’பி.எஸ்.டி எம்பயர் கன்ஸ்ட்ரக்ஷன்’ என்ற நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்டதாகவும், ஏற்கெனவே இந்நிறுவனத்தின் மூலம் செய்து முடிக்கப்பட்ட கட்டுமானங்கள் குறுகிய காலத்திற்குள்ளாகவே உடைந்து விழுந்துள்ளன என்ற தொடர் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையிலும் இந்நிறுவனத்திற்குத் தமிழக அரசின் பல்வேறு டெண்டர்கள் தொடர்ந்து வழங்கப்பட்டது எப்படி என்ற கேள்வியை ஆதாரங்களின் மூலமாக ஊடகங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.

தென்பெண்ணை ஆற்றில் 25 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு, மூன்று மாதங்கள்கூட நிறைவடையாத நிலையில் அதன் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது. இதை ஆய்வு செய்ததில், ஒப்பந்ததாரர் தரமில்லாமல் அணையைக் கட்டியதால்தான் தடுப்பணையின் சுவர் உடைந்து, மதகு அடித்துச் சென்றிருக்கிறது என்று பொதுப்பணித் துறை பதிலளித்தது. இதேபோல காஞ்சிபுரத்தில் ரூ.60 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணையின் அடித்தளம் மோசமாக இருந்தது; செங்கல்பட்டு வாயலூர் பாலாற்றில் கட்டப்பட்ட தடுப்பணையிலிருந்து நீர்க் கசிவு எனத் தரமில்லாத பணிகளின் பட்டியல் விரிகிறது.

புளியந்தோப்பு சம்பவம் போன்ற தருணங்களில், இவ்விஷயமானது பொதுவெளியில் பரபரப்பாகப் பேசப்படும். ஆனால், இதுபோன்ற முறைகேட்டிற்குப் பின்புலத்தில் இருந்த அமைச்சர், உயர் அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் ஆகியோர் மீது பெரும்பாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இந்த மூவர் கூட்டணி செய்யும் “முக்கோண ஊழலால்” பாதிக்கப்பட்டு தெருவில் நிர்க்கதியாய் நிற்பது பொதுமக்களே.

கமல்ஹாசனுடன் செந்தில் ஆறுமுகம்

இதில் மூன்று தரப்பினர் மீதும் நடவடிக்கை அவசியமாகிறது. நடவடிக்கைகளின் முதற்கட்டமாக, கடந்த 10 ஆண்டுகளில் பி.எஸ்.டி. நிறுவனம் கட்டி முடித்த பணிகள் அனைத்தையும் தரப் பரிசோதனை செய்ய வேண்டும்; சோதனைகளில் தரக்குறைவு உறுதி செய்யப்படும் பட்சத்தில், ”பி.எஸ்.டி எம்பயர் கன்ஸ்ட்ரக்சன்” நிறுவனத்தைத் ”தடை செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்” (Blacklisted) பட்டியலில் சேர்க்க வேண்டும். இந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதுபோல் சர்ச்சைக்குள்ளாகியுள்ள அனைத்து ஒப்பந்ததாரர்களின் பணிகளும் மறு ஆய்வு செய்யப்படவேண்டும்.

கட்டப்பட்ட ஓரிரு ஆண்டிற்குள் பாழடைந்த கட்டிடமாய் இடிந்துவிழும் புளியந்தோப்பு கட்டுமானம் என்பது துறையின் அமைச்சர் என்ற முறையில் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் நேரடிக் கண்காணிப்பில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சரின் கண்ணசைவு இல்லாமல் இதுபோன்ற மாபெரும் முறைகேடுகள் நடப்பதற்குச் சாத்தியமே இல்லை. ஆகவே, முன்னாள் அமைச்சர் வேலுமணியோடு தொடர்புடைய ஒப்பந்ததாரர்கள் விசாரிக்கப்பட்டதுபோல் ஓ.பன்னீர்செல்வத்துடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் ஒப்பந்த நிறுவனங்கள் குறித்தும் விசாரிக்கப்படவேண்டியது அவசியமாகிறது.

அமைச்சர் ஆதரவளித்தாலும், ஒப்பந்ததாரர் அச்சுறுத்தினாலும் உயர்மட்ட அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் ஊழல், முறைகேடு நடப்பதில்லை. ஒப்புக்குக் கீழ்மட்டத்தில் உள்ள ஓரிரு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வழக்கமான கண்துடைப்பு நடவடிக்கையைத் தாண்டி, உயர்மட்ட அதிகாரிகளையும் விசாரித்து மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஊழலின் முக்கோணங்களான அமைச்சர்-அதிகாரி-ஒப்பந்ததாரர் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்?''.

இவ்வாறு செந்தில் ஆறுமுகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x