Published : 20 Aug 2021 06:39 AM
Last Updated : 20 Aug 2021 06:39 AM

தமிழகத்தில் செப்.1-ம் தேதி முதல் 14 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது

சென்னை

தமிழகத்தில் செப்.1-ம் தேதி முதல் 14 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. 8 சதவீதம் வரை கட்டண உயர்வு இருக்கும் என தேசியநெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் சாலைகளில் உள்ள 14 சுங்கச்சாவடிகளில் செப்.1-ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

அதன்படி, திண்டிவனம் - உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ளவிக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை - பாடலூர் சாலையில் உள்ள திருமாந்துறை, சென்னை - தடா சாலையில் உள்ள நல்லூர், சேலம் - உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள மேட்டுப்பட்டி, சேலம் - குமாரபாளையம் சாலையில் உள்ள வைகுந்தம், திருச்சி - திண்டுக்கல் சாலையில் உள்ள பொன்னம்பலப்பட்டி, தஞ்சாவூர் - திருச்சி சாலையில் உள்ள வாழவந்தான்கோட்டை உள்ளிட்ட 14 சுங்கச் சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

8 சதவீதம் வரை கட்டணம் உயரும்

இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தேசிய நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தப்படி, ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். இது புதிய விதிமுறை அல்ல. அதிகபட்சமாக 8 சதவீதம் வரைகட்டணம் உயரும்என எதிர்பார்க்கிறோம். கட்டணஉயர்வு குறித்த அறிவிப்பை தேசியநெடுஞ்சாலைத் துறை அடுத்த வாரம் வெளியிடும்’’ என்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மணல்லாரி உரிமையாளர்கள் நலச்சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் கூறும்போது, ‘‘சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்துவதால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வதோடு, வாகன ஓட்டிகள், வாகன உரிமையாளர்களும் அவதிப்படுகின்றனர்.

எனவே, தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருக்கும் சுங்கச்சாவடிகளை இழுத்து மூட வேண்டும், நெடுஞ்சாலைகளில் கட்டமைப்பு பணிகளை மேம்படுத்த வேண்டும், சுங்கச்சாவடிகளில் தமிழர்களையும் பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசிடம் விரைவில் மனு அளிக்கவுள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x