Published : 20 Aug 2021 06:39 AM
Last Updated : 20 Aug 2021 06:39 AM

மரவள்ளியில் மாவுப்பூச்சி தாக்குதல்; பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2 ஆயிரம் இழப்பீடு: வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேரவையில் அறிவிப்பு

மரவள்ளிப் பயிரில் மாவுப்பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2ஆயிரம் வழங்கப்படும் என்று பேரவையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று வேளாண் துறை நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து, வேளாண் துறைஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:

வாழை விவசாயிகளுக்கு ரூ.3கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும். தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில், திசு வளர்ப்புக் கூடம்ரூ.2.50 கோடியில் அமைக்கப்படு கிறது. வாழைத்தார்களில் கருப்புப்புள்ளி வரக்கூடாது என்பதற்காக, 1,000 ஹெக்டேர் பரப்புக்கு ரூ.1.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருச்சியில் வாழை பழத்தைபதப்படுத்தும் மையம் அமைக்கப்படும். கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரம்பரிய ரகமான மட்டி வாழைப்பழத்துக்கு புவிசார் குறியீடு பெறநடவடிக்கை எடுக்கப்படும். குடிமராமத்து என்று கூறி, பனை மரங்களை அழித்துவிட்டார்கள். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

அப்போது பேரவைத் தலைவர் அப்பாவு, "பனை விதைகள் தருவதாகச் சொல்லியுள்ளீர்கள். நான் ஆண்டுதோறும் ஒரு லட்சம் பனை விதைகளை உங்கள் துறைக்கு வழங்குகிறேன்" என்றார்.

மீண்டும் வேளாண் அமைச்சர்எம்ஆர்கே.பன்னீர்செல்வம் பேசும்போது, "நாமக்கல், கள்ளக்குறிச்சி, தருமபுரி, சேலம், கடலூர், ஈரோடு,திருவண்ணாமலை, கரூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் மாவுப்பூச்சி தாக்குதலின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு, விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.

மாவுப்பூச்சி பாதிக்கப்பட்ட இடங்களில் 8,945 ஹெக்டேருக்கு ரூ.1.78 கோடி நிதி, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்.

கடந்த ஆண்டு குறுவைப் பருவத்தில் காப்பீட்டுக் கட்டணமாக ரூ.152கோடி பிரிமியம் செலுத்தப்பட்டுள்ளது. மாநில அரசின் கட்டணமாகரூ.20 கோடி, காப்பீடு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதுவரை இழப்பீட்டுத் தொகையாக 34 மாவட்டங்களைச் சேர்ந்த 1.65 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.107 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மீதிமுள்ள திருவாரூர், நாகை,மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு இன்னும்10 நாட்களில் வழங்கப்படும். கடந்த ஆண்டு சம்பா பருவத்தில் காப்பீட்டுக் கட்டணமாக ரூ.2,500கோடி பிரிமியம் கணக்கிடப்பட்டுள்ளது. மாநில அரசின் காப்பீடுக் கட்டண மானியமாக ரூ.1,550 கோடிவழங்கப்பட்டுள்ளது. இத்தொகை கடந்த 4 ஆண்டுகளில் வழங்கப்பட்ட மானியத் தொகையைவிட அதிகமாகும். மத்திய அரசின் காப்பீட்டுக் கட்டண மானியம் பெறப்பட்டவுடன், விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

2020-21-ம் ஆண்டு சம்பா பருவத்தில் இழப்பீட்டுத் தொகை ரூ.2 ஆயிரம் கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிலக்கடலை, துவரை, உளுந்து,பாசிப்பயறு, நெல், கம்பு, சோளம்,ராகி, பருத்தி, சாமை, கொள்ளு, மக்காச்சோளம் ஆகிய பயிர்களுக்கு விவசாயிகள் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை காப்பீடு செய்யலாம். மேலும், வாழை, மரவள்ளி, வெங்காயம், மஞ்சள், இஞ்சி, உருளைக்கிழங்க, பூண்டு, காரட், தக்காளி, சிவப்பு மிளகாய், தக்காளி, வெண்டை, கத்தரிக்காய், முட்டைக்கோஸ் ஆகிய தோட்டக்கலைப் பயிர்களுக்கும் விவசாயிகள் காப்பீடு செய்யலாம்.

கரும்பு நிலுவைத் தொகை

பொதுத்துறை மற்றும் கூட்டுறவுசர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலைவைத் தொகையை, உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு சார்பில் ரூ.182 கோடி வழிவகைக் கடன் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x