Published : 20 Aug 2021 06:40 AM
Last Updated : 20 Aug 2021 06:40 AM

‘தலைநிமிரும் தமிழகம் - நூற்றாண்டின் திசையில் நூறு நாட்கள்’: தமிழரசு இதழின் சிறப்பு மலரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை

‘தலைநிமிரும் தமிழகம் - நூற்றாண்டின் திசையில் நூறு நாட்கள்’ என்ற தமிழரசு இதழின் சிறப்பு மலரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பொறுப்பேற்று 100 நாட்களில் ஆற்றிய மக்கள் நலப் பணிகளைத் தொகுத்து, செய்தித் துறையின் சார்பில், ‘தலைநிமிரும் தமிழகம் - நூற்றாண்டின் திசையில் நூறு நாட்கள்’ என்ற தமிழரசு இதழின் சிறப்பு வெளியீட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை வெளியிட்டார். முதல் பிரதியை தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு பெற்றுக்கொண்டார்.

இச்சிறப்பு மலரில், முதல்வர் அறிவித்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் நலத் திட்டங்கள், மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று மேற்கொண்ட களப் பணிகள், ஆய்வுப் பணிகள் மற்றும் அமைச்சர்களுடன் மேற்கொண்ட துறை வாரியான ஆய்வுகள், முக்கிய நிகழ்வுகளின் உரைகளின் தொகுப்புகள் ஆகியவற்றுடன், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறை தொடர்பான செய்திகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளின் புகைப்படங்கள் மற்றும் செய்திகள் இடம்பெற்றுள்ளன.

இந்த வெளியீட்டு நிகழ்ச்சியில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலர் மகேசன் காசிராஜன், செய்தித்துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் மற்றும் செய்தித்துறையின் அலுவலர்கள் கலந்துகொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x