Published : 19 Aug 2021 06:16 PM
Last Updated : 19 Aug 2021 06:16 PM

யார்‌ தவறு செய்தாலும்‌ திமுக அரசு வேடிக்கை பார்க்காது: அமைச்சர்‌ தா.மோ.அன்பரசன்

யார்‌ தவறு செய்தாலும்‌ திமுக அரசு வேடிக்கை பார்க்காது. அனைவர்‌ மீதும்‌ நடவடிக்கை எடுக்கும்‌ என்று ஊரகத்‌ தொழில்துறை அமைச்சர்‌ தா.மோ.அன்பரசன் உறுதிபடத் தெரிவித்தார்.

சட்டப்‌பேரவையில்‌ இன்று (19.08.2021) சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்‌ மீது ஊரகத்‌ தொழில்துறை அமைச்சர்‌ தா.மோ.அன்பரசன் பேசியதாவது:

’’எழும்பூர்‌ சட்டப்பேரவை உறுப்பினர்‌ பரந்தாமன்‌, கே.பி. பார்க்‌ ஒன்றாவது திட்டப்‌ பகுதியில்‌ கட்டப்பட்டுள்ள கட்டடங்கள்‌ மிகவும்‌ மோசமான நிலையில்‌ அதிமுக ஆட்சியில்‌ கட்டப்பட்டுள்ளன என்றும், அதற்கு நீங்கள்‌ ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்றும்‌, அதைப் போல்‌ தமிழகத்தில்‌ இருக்கின்ற கடந்த ஆட்சியில்‌ கட்டப்பட்டிருக்கின்ற ஒட்டுமொத்தக் கட்டடங்களையும்‌ ஆய்வு செய்து அவற்றின்‌ தரத்தை உறுதி செய்திட வேண்டுமென்ற கருத்துகளையும் அரசின்‌ கவனத்திற்குக் கொண்டுவந்திருக்கிறார்‌.

எழும்பூர்‌ சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட புளியந்தோப்பு கேசவபிள்ளை திட்டப்‌ பகுதியில்‌ 1977-1978ஆம்‌ ஆண்டில்‌ கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய 864 குடியிருப்புகள்‌ சிதலமடைந்த நிலையில்‌ இருந்ததால்‌, அந்தக்‌ குடியிருப்புகளை இடித்துவிட்டு மறு கட்டுமானம்‌ செய்ய 2016ஆம்‌ ஆண்டு அதிமுக ஆட்சியில்‌ ஒப்புதல்‌ பெறப்பட்டு அனைவருக்கும்‌ வீடு கட்டும்‌ திட்டத்தின்கீழ்‌ கே.பி. பூங்கா பகுதி-1-ல்‌ தாங்கும்‌ தளம்‌ மற்றும்‌ ஒன்பது அடுக்குமாடி கொண்ட வகைப்பாட்டில்‌ ரூ.112.60 கோடி செலவில்‌ 864 குடியிருப்புகள்‌ ஜனவரி 2018ஆம்‌ ஆண்டு கட்டுமானப்‌ பணிகள்‌ தொடங்கப்பட்டு, 2019ஆம்‌ ஆண்டு மே மாதம்‌ கட்டி முடிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சியின்‌ வேண்டுகோளின்படி, இக்குடியிருப்புகள்‌ 2020ஆம்‌ ஆண்டு மே மாதம் முதல்‌ 2021ஆம்‌ ஆண்டு மார்ச்‌ மாதம்‌ வரை கரோனா சிகிச்சை மையமாகப் பயன்பாட்டில்‌ இருந்து வந்தன. இந்த நிலையில்‌, அங்கு குடியிருந்த மக்கள்‌, "வீடுகள்‌ கட்டி முடிக்கப்பட்ட பின்னரும்‌ எங்களுக்கு வீடுகள்‌ வழங்கப்படவில்லை" என்று செய்தித்தாளில்‌ அளித்த பேட்டியை அறிந்து, நானும்‌, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்‌ சேகர்பாபுவும், தொகுதியினுடைய உறுப்பினர்‌ பரந்தாமனும்‌ நேரில்‌ சென்று அன்றைக்கே ஆய்வு செய்தோம்‌.

அடையாளம்‌ தெரியாத சில நபர்களால்‌ அங்கிருந்த குடிநீர்க்‌ குழாய்‌ இணைப்புகள்‌, கழிவு நீர்க்‌ குழாய்கள்‌, மின்தூக்கிகள்‌ ஆகியவை சேதப்படுத்தப்பட்டதை அறிந்து, அவற்றையெல்லாம்‌ உடனே சரி செய்ய வேண்டும்‌ என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இதற்கிடையே பழுது நீக்கம்‌ செய்யும்‌ பணிகள்‌ நிறைவடைவதற்கு முன்பாகவே, கடந்த மாதம்‌ மழை பெய்த காரணத்தால்‌, கே.பி.பூங்கா அருகில்‌ தற்காலிகக் குடியிருப்பில்‌ இருந்தவர்களெல்லாம்‌ அந்தக்‌ குடியிருப்புகளுக்குச்‌ சென்று குடியிருந்து வருகிறார்கள்‌.

இதற்கிடையே கட்டிடங்களின் தரம், உறுதி குறித்து ஊடகங்களில்‌ வெளியான செய்தியின்‌ உண்மைத்‌ தன்மையை தெரிந்துகொள்ள நானும்‌, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்‌ சேகர்பாபுவும் குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குநர்‌ ஆகியோருடன்‌ நேற்று மாலை நேரடியாகச்‌ சென்று ஆய்வு மேற்கொண்டோம்‌. தரம்‌ மற்றும்‌ உறுதித்‌ தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிக்க இந்திய தொழில்நுட்பக்‌ கழகத்திற்கு ஏற்கெனவே கடிதம்‌ அனுப்பப்பட்டிருக்கிறது.

அவர்கள்‌ ஆய்வு செய்து தரும்‌ அறிக்கையில்‌ கட்டுமானப்‌ பணிகளில்‌ தவறு உள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டால்‌, அந்தக்‌ குடியிருப்பைக்‌ கட்டிய ஒப்பந்ததாரர்‌ மற்றும்‌ சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது இந்த அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும்.‌

இந்தத்‌ திட்டம்‌ ஏழைகளுக்காக உருவாக்கப்பட்ட திட்டம்‌. முன்னாள் முதல்வர் கருணாநிதி‌ 1970ஆம்‌ ஆண்டு குடிசைகளே இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டுமென்று, முதன்முதலாக இந்தியாவிலேயே குடிசை மாற்று வாரியத்தைக்‌ கொண்டுவந்தார். ஆயிரக்கணக்கான குடிசைகளை அகற்றி, அடுக்குமாடி வீடுகளைக்‌ கட்டித்‌ தந்த பெருமை திமுகவுக்கு உண்டு, கருணாநிதிக்கு உண்டு.

ஏழைகள்‌ வாழ்வதற்காகக் கட்டப்படுகிற வீடுகள்‌ தரம்‌ உள்ளதாக திமுக ஆட்சியில்‌ இருக்கும்‌. அதில்‌ யார்‌ தவறு செய்தாலும்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌. தமிழ்நாடு முழுவதும்‌ அனைத்துப்‌ பகுதிகளிலும்‌ இந்தத்‌ திட்டத்தின்‌ மூலமாக வீடுகள்‌ கட்டப்பட்டு வருகின்றன. இரண்டு நாட்களுக்கு முன்பாகவே, இந்தச்‌ செய்தி வந்த பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தின்‌ மூலமாக தரக்‌ கட்டுப்பாட்டுக் குழுக்களை எல்லாப் பகுதிகளுக்கும்‌ அனுப்பி, அதை ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டுமென்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறோம்‌. அந்தப்‌ பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

ஆக, இந்த அரசு யார்‌ தவறு செய்தாலும்‌ திமுக அரசு வேடிக்கை பார்க்காது; அனைவர்‌ மீதும்‌ நடவடிக்கை எடுக்கும்‌. முதல்வர்‌‌ 3 நாட்களுக்கு முன்பாகவே இதுகுறித்து பத்திரிகைகளில்‌ செய்தி வந்தவுடன்‌ எங்களை அழைத்து உடனே இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்று தெரிவித்துவிட்டார். யார்‌ தவறு செய்தாலும்‌, அது அரசு அதிகாரிகளாக இருந்தாலும்‌ சரி, ஒப்பந்ததாரர்களாக இருந்தாலும்‌சரி, அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்’’.

இவ்வாறு அமைச்சர்‌ தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x