

புதுச்சேரி லாஸ்பேட்டையில் திருமண வீட்டில் தாய், மகளைக் கட்டிப்போட்டு 36 பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள், பணத்தை கத்தி முனையில் கொள்ளைடித்துச் சென்ற 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டை நேருவில் நகரைச் சேர்ந்தவர் பிரேமா(32). மடுகரை பேட் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவரது தாய் புஷ்பலதா(56). இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். பிரேமாவுக்கு வரும் 20-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
இதற்காக 36 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவற்றை பிரேமா வீட்டில் வைத்திருந்தார். இதனிடையே அடிக்கடி தாய், மகள் இருவரும் திருமண வேலை சம்மந்தமாக வெளியே சென்றுவிட்டு வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு தாய், மகள் இருவரும் சாப்பிட்டுவிட்டு வீட்டில் ஒரு அறையில் தூங்கிக்கொண்டிருந்தனர்.
இன்று(ஆக. 17) அதிகாலை அவர்களது அறைக்குள் திடீரென நுழைந்த 2 முகமூடி அணிந்த நபர்கள் தாய், மகள் இருவரையும் கத்தி முனையில் மிரட்டி கயிற்றால் கை, கால்களை கட்டி போட்டுள்ளனர். மேலும் சத்தம் போடாத வகையில் இருவரது வாயிலும் துணியை திணித்தனர்.
பின்னர் பீரோ சாவியை பறித்த அவர்கள் அதனை திறந்து அதிலிருந்த 36 பவுன் நகை, 4 கிலோ வெள்ளி மற்றும் ரூ.12 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். பின்னர் வாயில் அடைத்திருந்த துணியை அகற்றிய பிரேமா இதுபற்றி தனது சசோதரர் குமரனுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து அங்கு வந்த அவரும், அக்கம் பக்கத்தினரும் தாய், மகள் இருவரையும் மீட்டனர். உடனே இது குறித்து லாஸ்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர்.
அதில், மர்ம நபர்கள் வீட்டினுள்ளேயே பதுங்கியிருந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. கொள்ளையர்களின் அடையாளங்கள் குறித்து தாய், மகளிடம் போலீஸார் விசாரித்த நிலையில், அதில் ஒருவரின் குரல் மட்டும் ஏற்கனவே தாங்கள் கேட்ட குரல்போல் இருப்பதாக போலீஸாரிடம் அவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர். இது சம்மந்தமாக லாஸ்பேட்டையைச் சேர்ந்த அய்யனார் (22) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் பிரேமா வீட்டில் கொள்ளையில் ஈடுபட்டதை அவர் ஒப்புக்கொண்டார்.
கட்டிடத்தொழிலாளியான அய்யனார் அவ்வப்போது பிரேமா வீட்டில் ஏதேனும் வேலைகள் இருந்தால் அங்கு சென்று செய்வது வழக்கம். அதுபோல் சென்றபோது தான் பிரேமாவின் திருமணத்துக்கு நகை வாங்கி வைத்திருப்பது அவருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து கோட்டக் குப்பத்தைச் சேர்ந்த அபினாஷ்(23) என்பவருடன் சேர்ந்து பிரேமா வீட்டில் கொள்ளையடித்துள்ளார் என்பது தெரியவந்தது.
பின்னர் இருவரையும் கைது செய்த போலீஸர் அவர்களிடம் இருந்து 36 பவுன் நகை, 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.12 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். இருவரையும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
கொள்ளை சம்பவம் நடந்த 3 மணி நேரத்துக்குள் கொள்ளையர்களை உடனே கைது செய்த லாஸ்பேட்டை போலீஸாரை தொகுதி எம்எல்ஏ வைத்தியநாதன் பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் ஆகியோர் காவல்நிலையம் சென்று சால்வை அணிவித்து பாராட்டினர். மேலும் சீனியர் எஸ்.பி. பிரதிக்ஷா கொடாராவும் பாராட்டினார்.