Published : 16 Aug 2021 03:21 AM
Last Updated : 16 Aug 2021 03:21 AM

மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில் ஓதுவார் பணிக்கு பெண் நியமனம்: பஞ்ச புராணம், தேவாரப் பாடல்களை பாடி பணியை தொடங்கினார்

தமிழகத்தில் முதல் பெண் ஓதுவாராக அரசால் நியமிக்கப்பட்ட சுகாஞ்சனா மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் நேற்று திருமுறைகளை ஓதி தனது பணியை தொடங்கினார்.படம்: எம்.முத்துகணேஷ்

மாடம்பாக்கம்

தாம்பரம் அருகே மாடம்பாக்கத்தில் உள்ள பழமை வாய்ந்த தேனுபுரீஸ்வரர் கோயிலுக்கு பெண் ஒருவர் ஓதுவார் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்வு பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழக கோயில்களில் ‘அன்னைதமிழில் அர்ச்சனை திட்டம்’ தொடங்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். 58 பேருக்கு அர்ச்சகர்களாக பணி ஆணை வழங்கப்பட்டது. இதில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த கோபிநாத் என்பவரது மனைவி சுகாஞ்சனா என்ற பெண், ஓதுவாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தற்போது தாம்பரம் சேலையூரில் வசித்து வருகிறார். இவரது கணவர் கோபிநாத் டிசைனிங் இன்ஜினியராக பணி புரிந்துவருகிறார். ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது இவர் இந்துசமய அறநிலையத் துறையின்கட்டுப்பாட்டில் உள்ள மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயிலுக்கு ஓதுவாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறுவயதில் பாடல்களை நன்றாக பாடுவார் என்பதால் இவரது பெற்றோர் கரூர் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேர்த்துள்ளனர். பள்ளியில் பாடல்களை சிறப்பாக பாடி பயிற்சியை சிறப்பாக முடித்துள்ளார். தமிழகத்தில் முதன்முறையாக பெண் ஓதுவாராக இவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

நேற்று முதல் பணியில் சேர்ந்த சுகாஞ்சனா காலையில் பஞ்ச புராணம், தேவாரம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணப் பாடல்களை பாடினார். இதைத் தொடர்ந்து மாலையும் பூஜைகள் முடிந்த பிறகு பாடல்களைப் பாடி பக்தர்களை பக்தியில் ஆழ்த்தினார். பெண் ஒருவர் ஓதுவாராக மாடம்பாக்கம் கோயிலில் நியமிக்கப்பட்டுள்ள செய்தி வேகமாகப் பரவியது. இதனால் ஏராளமான பக்தர்கள் இவர் பாடுவதைக் கேட்டு பக்திப் பரவசம் அடைந்து செல்கின்றனர்.

இதுகுறித்து சுகாஞ்சனா கூறும்போது, "கரூரில் அரசு இசைப் பள்ளியில் பயிற்சி பெற்றுஒரு பள்ளியில் இசை ஆசிரியராக பணிபுரிந்து வந்தேன். சமீபத்தில் பத்திரிகைகளில் விளம்பரத்தைக் கண்டு ஓதுவார் பணிக்கு விண்ணப்பித்தேன்; பணி ஆணையை பெற்றுள்ளேன். எனக்கு வாய்ப்பளித்த தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பணி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் இறைவன் முன்பு பாடல்களைப் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஒரு வீட்டில் பெண் படித்து இருந்தால் அந்த குடும்பமே முன்னேறும் என்பார்கள். அதுபோல் பெண் பக்தி நெறியில் சிறந்து இருந்தால், அந்த குடும்பத்தினரும் பக்தி நெறியில் வளருவார்கள். இதனால் சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். வாய்ப்பு கிடைக்கும் போது குழந்தைகளுக்கு இறை பாடல்கள் பாட பயிற்சி அளிப்பேன்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x