Last Updated : 10 Feb, 2016 08:04 AM

 

Published : 10 Feb 2016 08:04 AM
Last Updated : 10 Feb 2016 08:04 AM

சென்னையில் 12-ம் தேதி கருணாநிதியை சந்திக்கிறார் குலாம்நபி ஆசாத்: கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்குகிறது

தமிழகம், புதுச்சேரியில் திமுக வுடன் கூட்டணி குறித்து பேச்சு நடத்துவதற்காக காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரும், மாநிலங் களவை எதிர்க்கட்சித் தலைவரு மான குலாம்நபி ஆசாத் வரும் 12-ம் தேதி சென்னை வருகிறார்.

கடந்த 2004 மக்களவைத் தேர்தலில் இருந்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றிருந்தது. ஐ.மு. கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியதைத் தொடர்ந்து 2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு 4.3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது.

இந்நிலையில், மீண்டும் திமுகவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவராக ஈவிகேஎஸ் இளங்கோவன் பொறுப் பேற்றது முதல் திமுகவுடன் இணக்கமான போக்கையே கடைபிடித்து வருகிறார். திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கும் இடம் உண்டு என கருணாநிதி பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். இதையடுத்து, காங்கிரஸ் தேசிய துணைத் தலைவர் ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவர்களை டெல்லிக்கு வரவழைத்து தேர்தல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் தமிழகம், புதுச் சேரியில் திமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சு நடத்துவதற்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம்நபி ஆசாத், வரும் 12-ம் தேதி சென்னை வருகிறார்.

அன்று காலை 11.30 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரைச் சந்தித்து கூட்டணி தொடர்பாக குலாம்நபி ஆசாத் பேசுவார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக ‘தி இந்து’ விடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ஒருவர், ‘‘திமுக - காங்கிரஸ் கூட்டணி என்பது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவர திமுக தீவிரமாக முயன்று வருகிறது. தேமுதிகவுடன் கூட்டணி இறுதியான பிறகு திமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சு நடப்பதாக இருந்தது. தேமுதிகவுடன் எந்த முடிவும் எட்டப்படாததால் காங்கிரஸுடன் பேச்சு நடத்த திமுக முடிவு செய்துள்ளது. எனவே, வரும் 12-ம் தேதி சென்னை வரும் குலாம்நபி ஆசாத், திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து பேசுகிறார்’’ என்றார்.

40 கேட்கும் காங்கிரஸ்

கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு 63 தொகுதிகளை திமுக ஒதுக்கியது. தற்போது காங்கிரஸில் பிளவு ஏற்பட்டு, ஜி.கே.வாசன் தலை மையில் தமாகா என்ற தனிக்கட்சி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸுக்கு 20 முதல் 25 தொகுதிகளை தர திமுக சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படு கிறது. ஆனால், குறைந்தது 40 தொகுதிகளாவது வேண்டும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x