Published : 14 Aug 2021 03:22 AM
Last Updated : 14 Aug 2021 03:22 AM

தமிழக பட்ஜெட்டில் 10 ஆண்டுகளுக்கு பிறகு உயிர் பெற்றது வேலூர் ‘டைடல் பூங்கா’ அறிவிப்பு: பனப்பாக்கம் சிப்காட்டில் ‘தோல் பொருட்கள் பூங்கா’

வேலூர்/ராணிப்பேட்டை

வேலூர் மாவட்டத்தில் 10 ஆண்டு களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட ‘டைடல் பூங்கா’ மீண்டும் உயிர் பெற்றுள்ளது. அத்துடன், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பனப்பாக்கம் சிப்காட்டில் அமையும் தோல் பொருட்கள் பூங்காவால் அறிவிப்பால் தோல் தொழில் மேலும் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவையின் முதல் காகிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இதில், வேலூர் மாவட்டத்தில் டைடல் பூங்காவும், ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் சிப்காட்டில் தோல் பொருட்கள் பூங்காவும் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பில் இருந்து வரவேற்பு பெற்றுள்ளது.

5 ஏக்கரில் ‘டைடல் பூங்கா’

வேலூர் டைடல் பூங்கா அறிவிப்பு கடந்த 10 ஆண்டு களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு டைடல் பூங்கா அறிவிப்பை கிடப்பில் போட்டது. திமுக ஆட்சியில் வேலூர் டைடல் பூங்கா மீண்டும் அறிவிக் கப்பட்டுள்ளதால் பொறியியல் மாணவர்களுக்கு அதிகளவில் உள்ளூரிலேயே வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் என கூறப்படுகிறது.

‘‘வேலூரில் டைடல் பூங்காவுக்கான இடம் தயாராக இருக்கிறது’’ என்று மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார். மேலும், ‘‘வேலூர் டைடல் பூங்கா 5 ஏக்கரில் அமையவுள்ளது. இதற்காக, 2, 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில்' எந்த இடம் என்பது பின்னர் முடிவாகும்’’ என மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தெரிவித்தார்.

டைடல் பூங்கா தொடர்பாக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் கூறும்போது, ‘‘சென்னை-பெங்களூருவுக்கு இடையில் வேலூர் உள்ளது. இங்குள்ள தரமான பல்கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இருந்து அறிவுஜீவி மாணவர்கள் ஐ.டி வேலைக்காக சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் செல்ல வேண்டியுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திமுக ஆட்சியில் டைடல் பூங்கா அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் கையால் டைடல் பூங்கா அடிக்கல் நாட்டி அவர் கையாலேயே தொடங்கப்படும். ஒரு கல்லூரியின் தாளாளர் என்ற முறையில் சொல்கிறேன், இந்த டைடல் பூங்கா வேலூர் மட்டுமில்லாமல் கிருஷ்ணகிரி வரையுள்ள இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்’’ என்று தெரிவித்தார்.

தோல் பொருட்கள் பூங்கா

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் சிப்காட்டில் தோல் பொருட்கள் பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கூறும்போது, ‘‘பனப்பாக்கம் சிப்காட்டுக்காக 1,207.92 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில், சுமார் 220 ஏக்கர் நிலம் அரசு புறம்போக்கு. சிப்காட்டு நிலத்துக்கான இழப்பீடு வழங்க அரசாணை வெளியானதும் விரைவில் தொடங்கும். சிப்காட் பணி பல்வேறு நிலைகளில் இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.

ராணிப்பேட்டை சிப்காட் பகுதி 2-ன் பொது சுத்திகரிப்பு நிலைய மேலாண் இயக்குநர் சீனிவாச ராகவன் கூறும்போது, ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

இதில், 10 சதவீதம் பெரிய நிறுவனங்கள். நீண்ட நாள் கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது. சுமார் 500 ஏக்கரில் தோல் பொருட்கள் பூங்கா அமைந்தால் ராணிப்பேட்டை மாவட்டத்தின் தனிநபர் வருமானம் பல மடங்கு அதிகரிக்கும். இங்கு தொழில் தொடங்க பல நிறுவனங்கள் வரும்போது வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்’’ என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x