Last Updated : 19 Feb, 2016 10:36 AM

 

Published : 19 Feb 2016 10:36 AM
Last Updated : 19 Feb 2016 10:36 AM

மகாமக குளத்தில் மகா ஆரத்தி வழிபாடு: 6-ம் நாளில் 1.80 லட்சம் பக்தர்கள் நீராடினர்

மகாமகப் பெருவிழாவின் 6-ம் நாளான நேற்று ஒருநாள் மட்டும் அதிகாலை முதல் இரவு 10 மணி வரை 1 லட்சத்து 80 ஆயிரம் பக்தர்கள் மகாமகக் குளத்தில் புனித நீராடினர்.

கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகப் பெருவிழாவின் தொடக்கமாக கடந்த 13-ம் தேதி ஆதிகும்பேஸ்வரர் கோயில் உள்ளிட்ட 6 சைவத் தலங்களிலும், 14-ம் தேதி சாரங்கபாணி சுவாமி கோயில் உள்ளிட்ட 5 வைணவத் தலங்களிலும் கொடியேற்றம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தினமும் காலை மற்றும் இரவில் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது.

விழாவின் 6-ம் நாளான நேற்று இரவு ஆதிகும்பேஸ்வரன் கோயி லில் கைலாச வாகனத்திலும், காசிவிஸ்வநாதர் கோயிலில் அதிகாரநந்தி காமதேனு வாகனத்திலும், அபிமுகேஸ்வரர் கோயிலில் காமதேனு கற்பகவிருட்ச வாகனத்திலும், வியாழ சோமேஸ்வரர் கோயிலில் இந்திர விமானத்திலும், வைணவத் தலங்களான சாரங்கபாணி, சக்கரபாணி கோயில்களில் வெள்ளி ஹனுமந்த வாகனத்திலும் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

மகாமகக் குளத்தில், கடந்த 5 நாட்களில் இருந்ததைவிட நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் குடும்ப சகிதமாக வந்து மகாமக குளத்தில் உள்ள 20 தீர்த்தக் கிணறுகளிலும் நீராடிய பின்னர், நீண்ட வரிசையில் நின்று, தென் கரையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் வழிபட்டனர். தொடர்ந்து, பொற்றாமரைக் குளம் மற்றும் காவிரியாற்றின் பல்வேறு படித்துறைகளிலும் நீராடினர்.

காலையில் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் மகாமகக் குளம், பொற்றாமரைக் குளம் மற்றும் காவிரி ஆற்றின் பகவத் படித்துறையில் நீராடினார்.

நேற்று மட்டும் சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் மகாமகக் குளத்தில் புனித நீராடியதாகவும், மகாமகம் தொடங்கியது முதல் நேற்று வரை 6 நாட்களில் 9 லட்சம் பேர் புனித நீராடியதாகவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் நாளை முதல் 2 நாட்கள் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும்.

மகா ஆரத்தி வழிபாடு

கும்பகோணம் அருகில் உள்ள கோவிந்தபுரத்தில் நடைபெற்றுவரும் அகில இந்திய துறவியர் மாநாட்டின் ஒருபகுதியாக பாலக்கரை காவிரிப் படித்துறையில் இருந்து நேற்று மாலை ஆன்மிக, கலாச்சார ஊர்வலம் தொடங்கியது. அங்கிருந்து ஊர்வலமாக வந்த துறவிகள் பொற்றாமரைக் குளத்தில் நீராடி மகா ஆரத்தி வழிபாடு நடத்தினர். தொடர்ந்து மகாமகக் குளத்தில் நீராடி மகா ஆரத்தி வழிபாடு நடத்தினர். இதில், திரளான துறவிகள் பங்கேற்றனர்.

மகாமக கோயில்களில் இன்று...

மங்களாம்பிகை உடனாய ஆதிகும்பேஸ்வரர் கோயில்: வெள்ளிப் பல்லக்கு, வெண்ணெய்த்தாழி, காலை 8, சுவாமி- அம்பாள் குதிரை வாகனத்தில் புறப்பாடு, இரவு 7, திருத்தேருக்கு எழுந்தருளல், இரவு 9.48.

சோமசுந்தரி அம்பிகை உடனாய வியாழசோமேஸ்வரர் கோயில்: பல்லக்கு, காலை 8, திருக்கல்யாணம், சுவாமி- அம்பாள் திருவீதியுலாக் காட்சி, இரவு 7.

ஞானாம்பிகா உடனாய காளஹஸ்தீஸ்வரர் கோயில்: பல்லக்கு, காலை 8, திருக்கல்யாணம் முடித்து ஏகாந்த படிச்சட்டம், மாலை 6.

பிரகன்நாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில்: சுவாமி- அம்பாளுக்கு திருக்கல்யாணம், மாலை 6, சேஷ வாகனத்தில் திருவீதியுலா, இரவு 8.

விசாலாட்சி அம்மன் உடனாய காசிவிசுவநாதர்- நவகன்னிகைகள் கோயில்: பல்லக்கு, காலை 8, திருக்கல்யாண திருவிழா, இரவு 7.

ராஜகோபால சுவாமி கோயில்: வெள்ளிப் பல்லக்கு, காலை 8, யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடு, இரவு 7.

சக்கரபாணி சுவாமி கோயில்: பல்லக்கு, காலை 8, யானை வாகனத்தில் வீதியுலா, இரவு 7.

சாரங்கபாணி கோயில்: வெள்ளிப் பல்லக்கில் பெருமாள் புறப்பாடு, காலை 8, வெள்ளி யானை வாகனம் இரவு 7.

ராம சுவாமி கோயில்: பல்லக்கு, காலை 9, யானை வாகனம், இரவு 7.

விழாத் துளிகள்:

கிழக்கு படித்துறையில் கவனம் தேவை

கும்பகோணம் மகாமகத்துக்கு ரயிலில் வரும் பக்தர்கள் லால்பகதூர் சாஸ்திரி சாலை வழியாகவும், பேருந்தில் வரும் பக்தர்கள் காமராஜர் சாலை - காசிவிஸ்வநாதர் கோயில் கீழவீதி வழியாகவும் வந்து மகாமகம் குளத்தின் வடகிழக்கு மூலையில் நுழைந்து, கிழக்குப் படித்துறையில் இறங்கி, மேற்குப் படித்துறையில் வெளியேறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதே, கிழக்குப் படித்துறையில் உள்ள அபிமுகேஸ்வரர் கோயிலில் விழாக்கள் நடைபெறுவதாலும், கோயிலின் தேர் அங்கு நிற்பதாலும், அங்கேயே மருத்துவ முகாம், அறிவிப்பு மையம் செயல்படுவதாலும் எப்போதும் மக்கள் நெருக்கடியில் அப்பகுதி உள்ளது. நிலைமையை மேலும் சிக்கலாக்கும் வகையில், கிழக்குப் படித்துறையில் இறங்கும் பக்தர்களில் கால்வாசிக்கு மேல், அதே படித்துறையில் மேலேறி, கரையோரம் உடை மாற்றுவதால் நெருக்கடி மேலும் அதிகமாகி, எப்போது என்ன நிகழுமோ என்ற அச்சம் கலந்த சூழல் காணப்படுகிறது.

எனவே, தென் கிழக்கு மூலை வழியாக கிழக்குப் படித்துறைக்கு வரும் வகையில் மேலும் ஒரு வழியை ஏற்படுத்த வேண்டும். கிழக்குப் படித்துறையில் மேலேறுவதை தடை செய்ய வேண்டும்.

மேற்கு கரையில் அறிவிப்பு மையம் வேண்டும்

மகாமகக் குளத்தின் கிழக்கு கரை அபிமுகேஸ்வரர் கோயில், தெற்கு கரை ஹரிதா மகாலில் காவல் அறிவிப்பு மையங்கள் செயல்படுகின்றன. இங்கிருந்தே காணாமல் போனவர்கள் குறித்த தகவலும் தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போனவர்கள், அபிமுகேஸ்வரர் கோயிலுக்கு வரும்படி அவ்வப்போது அறிவிப்பு செய்யப்படுகிறது.

கிழக்குக் கரையில் இறங்கும் பக்தர்களில் பெரும்பாலோர், குளத்தின் அனைத்து தீர்த்தங்களுக்கும் சென்றுவிட்டு, மேற்கு கரையில் ஏறிய பின்னரே தங்களுடன் வந்தவர்கள் காணாமல் போனது குறித்து அறிகின்றனர்.

அவர்கள் மீண்டும், கிழக்குப் பகுதிக்கு சென்று தகவல் தெரிவிக்கவும், அந்த அறிவிப்பைக் கேட்டு காணாமல் போனவர் தடைசெய்யப்பட்ட பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு தடைகளைத் தாண்டி, சுற்றிச் செல்வதற்குள், இரு தரப்பிலும் பெரும் பதற்றம் ஏற்பட்டு விடுகிறது.

எனவே, மேற்கு கரையிலும் ஒரு அறிவிப்பு மையத்தை ஏற்படுத்தி, காணாமல் போய் மீட்கப்பட்டவரை அங்கேயே ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்கின்றனர் பக்தர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x