Last Updated : 13 Aug, 2021 03:16 AM

 

Published : 13 Aug 2021 03:16 AM
Last Updated : 13 Aug 2021 03:16 AM

தமிழகம் முழுவதும் காவலர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள துறை ரீதியான சிறு தண்டனைகள் ரத்து: பேரவை கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியாகிறது

தமிழகம் முழுவதும் காவல்துறையில் சுமார் 1 லட்சம் போலீஸார் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் பதவிகளுக்கு தகுந்தாற்போல் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

சில நேரங்களில் பணியின்போது ஒழுங்கீனமாக செயல்படுதல், உயர் அதிகாரிகளின் உத்தரவை செயல்படுத்தாமல் இருத்தல் மற்றும் காலம் தாழ்த்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக போலீஸாருக்கு சிறு தண்டனைகள் காவல்துறை அதிகாரிகளால் துறை ரீதியில் வழங்கப்படுகின்றன. இதுபோன்ற தண்டனையில் சிக்குபவர்களுக்கு முழு சம்பளம் பெறுவதிலும், பதவி உயர்வு பெறுவதிலும் சிக்கல் ஏற்படும்.

இந்த தண்டனையில் இருந்து விடுபட தமிழகத்தின் தென் கோடியான கன்னியாகுமரி முதல் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தலைநகர் சென்னையில் உள்ள காவல்துறையின் தலைமை அலுவலகமான டிஜிபி அலுவலகத்துக்கு தொடர்புடைய போலீஸார் அலைய வேண்டும். இப்படி தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் துறை ரீதியிலான சிறு, சிறு தண்டனையில் சிக்கியுள்ளனர்.

இதுபோன்று, காவலர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள துறை ரீதியான சிறு தண்டனைகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை காவல்துறையில் வலுத்து வந்தது.

இதை பரிசீலனையில் எடுத்துக் கொண்ட தமிழக காவல்துறை சட்டம் - ஒழுங்கு டிஜிபி சி.சைலேந்திரபாபு, தண்டனையில் சிக்கிய போலீஸாரின் பட்டியலை தயாரிக்க உத்தரவிட்டார். அதன்படி, நிர்வாக பிரிவு கூடுதல் டிஜிபி எம்.ரவி, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “காவலர்கள் முதல் உதவி ஆணையர்கள் வரை சிறு தண்டனைக்கு உள்ளானோர், அது தொடர்பான விபரத்தை dgpappeal14@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் 16-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, அனைத்து விபரங்களும் சேகரிக்கப்பட்டு தற்போது நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடரில் காவலர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள துறை ரீதியான சிறு தண்டனைகள் அனைத்தும் ரத்து செய்வதற்கான அறிவிப்பு வெளியாகும் என டிஜிபி அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x