Published : 13 Aug 2021 03:16 AM
Last Updated : 13 Aug 2021 03:16 AM

‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டம்: காஞ்சி, செங்கையில் 13 ஆயிரம் மனுக்கள் தள்ளுபடி: உயர் அதிகாரிகள் தலைமையில் மீண்டும் ஆய்வு செய்ய உத்தரவு

திமுக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தவுடன் 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தை நிறைவேற்றுவதற்காக புதிய துறை தமிழக முதல்வர் ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. அத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள், உரிய துறைகளுக்கு நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டு, தீர்வு காணப்பட்டு வருகிறது.

அந்த வகையில் செங்கை மாவட்டத்தில் இதுவரையில் 13 ஆயிரத்து 516 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 2 ஆயிரத்து 864 மனுக்கள் ஏற்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 9 ஆயிரத்து 807 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. மேலும் 845 மனுக்கள் ஏற்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8 ஆயிரத்து 169 மனுக்கள் வரப்பெற்றன. இதில், 2 ஆயிரத்து 506 மனுக்கள் ஏற்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 643 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 2 ஆயிரத்து 20 மனுக்கள் மேல் நடவடிக்கைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இரு மாவட்டங்களில் மொத்தம் சுமார் 13 ஆயிரம் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

100 நாட்களில் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால் ஏராளமான மனுக்கள் முறையாக விசாரணை செய்யப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என ஏராளமான புகார்கள் வந்தன. மேலும் அதிகாரிகள் நேரடியாக களத்தில் சென்று ஆய்வு செய்யாமல் தங்களை ‘கவனிப்பவர்களின்' மனுக்களுக்கு மட்டும் உரிய தீர்வு காண்கின்றனர். குறிப்பாக இலவச பட்டா. மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதனால் மீண்டும் முறையாக ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமையில் மறைமலை நகரில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள் மீது உயர் அதிகாரிகள் தலைமையில் மீண்டும் ஆய்வு செய்து உரிய காரணங்களை மனுதாரர்களுக்கு தெரிவிக்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து ஓய்வுபெற்ற வருவாய்த் துறை அதிகாரி ஒருவர்கூறும்போது, "வருவாய்த் துறையில் ஆட்கள் பற்றாக்குறையால் பணிகள் வேகமாக நடைபெறுவதில்லை. இத்திட்டத்தில் 100 நாட்களுக்குள் பணிகளை முடிக்க வேண்டுமென்ற நிர்பந்தத்தின் காரணமாக அதிகாரிகள் பலர் ஆய்வுகளை மேற்கொள்ளாமல் தங்கள் மனப்போக்கில் மனுக்களை தள்ளுபடி செய்துள்ளனர். தற்போது, மீண்டும் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றஅரசின் உத்தரவு வரவேற்கத்தக்கது. காலி பணியிடங்களை அரசு நிரப்பினால் மட்டுமே இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x