Published : 13 Aug 2021 03:18 AM
Last Updated : 13 Aug 2021 03:18 AM

திருவண்ணாமலை அருகே கி.பி. 10-ம் நூற்றாண்டு ஐயனார் சிற்பம் கண்டெடுப்பு

காட்டுவாநத்தம் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட ஐயனார் சிலை.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அடுத்த காட்டுவாநத்தம் கிராமத்தில் வேடியப்பன் எனும் பெயரில் வழிபாடு செய்யப்பட்டு வந்த கி.பி. 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஐயனார் சிற்பத்தை கண்டெடுத் துள்ளதாக மரபு சார் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து திருவண்ணா மலை மரபு சார் அமைப்பு தலைவர் ராஜ் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “திருவண்ணாமலை அடுத்த காட்டுவாநத்தம் கிராமம் ஏரிக்கரையில் உள்ள வேடியப்பன் கோயிலில் ஆய்வு செய்யப்பட்டது. 3 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட சிலையில், கையில் செண்டு ஏந்திய நிலையில் ஐயனார், புடைப்பு சிற்பமாக இருப்பது கண்டறியப்பட்டது. ஐயனாரை, வேடியப்பன் என கிராம மக்கள் வழிபட்டு வந்துள்ளனர்.

பரந்துவிரியும் விரிசடையுடன் வட்ட முகமும், இரு காதுகளில் பத்ர குண்டலம் அணிந்து தடித்த உதட்டுடன் சுகாசன கோலத்தில், இடது காலை பீடத்தில் அமர்த்தியும், வலது காலை கீழே தொங்கவிட்டும் அமர்ந்துள்ளார். வலது கையில் கடக முத்திரையில் செண்டையை ஆயுதமாகவும், இடது கையை தனது தொடையின் மீது வைத்துக் கொண்டு காட்சித் தருகிறார். கழுத்தில் கண்டிகை, சவடி ஆகிய அணிகலன்களுடன் முப்புரி நூலும் கைகளில் கைவளையும் அணிந்து கம்பீரமாக உள்ளார்.

ஐயனாரின் பாதத்தின் அருகே வேடன் ஒருவன் வேட்டையாடும் காட்சி இடம்பெற்றுள்ளது. நீண்ட தாடியுடன் தொடை வரை உடையணிந்துள்ள வேடன், ஒரு கையில் வில்லும், மற்றொரு கையில் அம்பையும் தாங்கிக் கொண்டு நிற்க, வேட்டை நாய் ஒன்று இரண்டு மான்களை துரத்துவது போல் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஒரு மான் பயந்து பின்னோக்கி ஓட மற்றொரு மான் நாயின் வாயில் அகப்பட்டு, அதன் தலை மட்டும் திரும்பிய நிலையில் தத்ரூபமாக காட்சிப்படுத்தியுள்ளனர். அதே போல், ஐயனாரின் வாகனமான யானை, அவரது இடது பக்க தோள் அருகே வடிவமைக்கப்பட் டுள்ளது.

இவரது மனைவிகளாக பூர்ணாவும், பூஷ்கலாவும் வலமும் இடமும் நின்ற கோலத்தில் உள்ளனர். அவர்கள் இருவரும், கரண்ட மகுடம் தரித்து காதுகளில் பத்ர குண்டலங்களுடன் தத்தமது ஆயுதங்களுடன் காட்சி தருகின்றனர். சிற்பத்தில் காட்டப்பட்டுள்ள அணிகலன்கள் மற்றும் வேட்டை காட்சிகளை பார்க்கும்போது, கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து ஐயனார் சிற்பம் என கூறலாம்.

மேலும், ஏரிக்கரை அருகே உள்ள புதரில் மற்றொரு சிற்பம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை ஆய்வு செய்ததில் கி.பி.9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால விஷ்ணு சிற்பம் என தெரியவருகிறது. 4 அடி உயரம் உள்ள விஷ்ணு சிலையை வழிபாடின்றி கைவிடப் பட்டுள்ளதால், முகம் மற்றும் உடல் பகுதி மிகவும் தேய்ந்த நிலையில் உள்ளது.

அதனை முறையாக அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாத்திட தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x