Last Updated : 12 Aug, 2021 06:10 PM

 

Published : 12 Aug 2021 06:10 PM
Last Updated : 12 Aug 2021 06:10 PM

மருத்துவக் காப்பீடு; வீடுகளுக்கு சென்று பதிவு செய்ய புதுச்சேரியில் வாகனம்

புதுச்சேரியில் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் வீடுகளுக்கே சென்று பதிவு செய்வதற்கான நடமாடும் வாகனத்தை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி மருத்துவ காப்பீடு திட்டம் இந்தியாவில் 50 கோடி பயனாளிகளை இலக்காக கொண்டுள்ள உலகின் மிகப்பெரிய அரசு நிதியுதவி அளிக்கும் மருத்துவ காப்பீடு திட்டமாகும். இத்திட்டத்தில் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வரை ஒரு வருடத்துக்கு காப்பீடு வழங்கப்படுகிறது.

இத்திட்டம் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் செலவுகளை உள்ளடக்கும். புதுச்சேரி அரசு இத்திட்டத்தின் கீழ் அனைத்து சிவப்பு அட்டைதாரர்களுக்கும் காப்பீடு வழங்க அங்கீகரிக்கபட்டது. இதனிடையே ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி மருத்துவ காப்பீடு திட்டப் பதிவுகள் புதுச்சேரியின் பல பகுதிகளில் பதியப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் பிரதான் மந்திரி ஆயுஷ்மான் பாரத் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பொதுமக்கள் சிரமமின்றி பதிவு செய்யும் வகையில், அவர்களது வீடுகளுக்கே சென்று பதிவு செய்வதற்கான நடமாடும் வாகனம் அறிமுகம் செய்யப்பட்டள்ளது.

இதன் தொடக்க நிகழ்ச்சி இன்று(ஆக. 12) புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்றது. முதல்வர் ரங்கசாமி கொடியசைத்து வாகனத்தை தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சந்திர பிரியங்கா, சுகாதாரத்துறை செயலர் அருண், இயக்குநர் ஸ்ரீராமலு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதேபோல் புதுச்சேரி மாநிலத்திலுள்ள காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு சிறுநீரகக் கோளாறு உள்ள நோயாளிகளுக்கு பயன்பெறும் விதமாக இரண்டு டயலிஸிஸ் கருவிகளை சட்டப்பேரவை வளாகத்தில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் சந்திரபிரியங்காவிடம் காரைக்கால் மக்கள் நலனுக்காக இன்று ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x