Published : 12 Aug 2021 03:21 AM
Last Updated : 12 Aug 2021 03:21 AM

இளவயதில் பேருந்துக்கு பணமில்லாமல் நடந்தே சென்றதை மறக்க முடியாது: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உருக்கம்

இளவயதில் பேருந்துக்கு பணமில்லாமல் நடந்தே சென்றதை வாழ்நாளில் மறக்க முடியாது என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி உருக்கமாகத் தெரிவித்தார்.

மெட்ராஸ் பார் அசோசியேஷன் சாரி்ட்டபிள் மற்றும் வெல்பேர் சங்கம் சார்பில் 103 ஜூனியர் வழக்கறிஞர்களுக்கு இலவச இருசக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று உயர் நீதிமன்ற கலையரங்கில் நடந்தது. மெட்ராஸ் பார் அசோசியேஷன் சார்பில் வழக்கறிஞர் வி.ரெங்கபாஷ்யம் வரவேற்றார். அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் மற்றும் மூத்த வழக்கறிஞர் எஸ்.ரவீந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.பார்த்தசாரதி மற்றும் பி.ஆர்.ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதிகள் என்.கிருபாகரன், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று ஜூனியர் வழக்கறிஞர்களுக்கு இலவச இருசக்கர வாகனங்களுக்கான சாவியை வழங்கினர்.

பின்னர் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பேசும்போது, “இளவயதில் பேருந்துக்கு பணம்இல்லாமல் நடந்தே சென்றதை வாழ்நாளில் மறக்க முடியாது. பணத்தின் அருமை தெரிந்ததால் தான் இளவயதில் பட்ட கஷ்டங்களை இப்போதும் உணர முடிகிறது. தற்போதுள்ள இக்கட்டான சூழலில் நாங்கள் பட்ட கஷ்டம் நீங்கள் படக்கூடாது என்பதற்காக ஜூனியர் வழக்கறிஞர்களுக்கு வழங்கியிருப்பது பெருமைக்குரியது. இதை ஜூனியர் வழக்கறிஞர்கள் தங்களது தொழிலுக்கான மூலதனமாக நினைத்து வாழ்வில் முன்னேற வேண்டும்” என்றார்.

நீதிபதி என்.கிருபாகரன் பேசும்போது, ‘‘ஒவ்வொரு சீனியர் வழக்கறிஞர்களும், ஜூனியர்களை தத்து எடுத்துக்கொண்டு குடும்பத்தில் ஒருவராக நினைத்து அவர்களது நலனிலும் அக்கறை காட்ட வேண்டும். அப்போதுதான் இந்த வழக்கறிஞர் தொழிலின் புனிதம் காக்கப்படும். இந்த இருசக்கர வாகனங்களின் அருமை என்ன என்பது ஏழ்மை நிலையில் உள்ள கிராமப்புறங்களில் இருந்து வந்துள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு நன்றாகப் புரியும். அதேப்போல இந்த வாகனங்களை வழங்குவதில் அனைத்து சங்க உறுப்பினர்களுக்கும் பங்குள்ளது என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்” என்றார்.

இந்நிகழ்வில் தமி்ழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் எஸ்.அமல்ராஜ், மெட்ராஸ் பார் அசோசியேஷன் முன்னாள் தலைவர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், முன்னாள் செயலாளர் வி.ஆர்.கமலநாதன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார், உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் லுாயிசால் ரமேஷ், லா அசோசியேஷன் செயலாளர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x