Published : 10 Aug 2021 10:32 PM
Last Updated : 10 Aug 2021 10:32 PM

அரசாணை 354-ன் படி ஊதியம்: முதல்வர் ஸ்டாலினுக்கு அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு வேண்டுகோள்

அரசாணை 354-ன் படி அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்க வழி செய்யும் அறிவிப்பை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது, கரோனா மூன்றாவது அலையை எதிர்பார்த்துள்ள நிலையில், அரசு மருத்துவர்கள் இன்னும் உற்சாகமாகப் பணி செய்திட வழிவகுக்கும் என்று அந்தக் குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்:

"முதல்வர் ஆட்சிப் பொறுப்பேற்றதும் தேர்தல் வாக்குறுதிகளையும், பல மக்கள் நல திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறார். வாழ்த்துகள். அதுபோல அரசு மருத்துவர்களின் கோரிக்கையையும் விரைவாக நிறைவேற்றுவார் என எதிர்பார்த்தோம். ஆனால் இதுவரை நிறைவேற்றாதது வருத்தமளிக்கிறது.

நாம் முதல்வரிடம் எதிர்பார்ப்பதற்கு 10 காரணங்கள்:

1) தமிழக வரலாற்றில் இதுவரை எந்த முதல்வரும் சந்தித்திராத வகையில், ஆட்சி பொறுப்பேற்ற சமயத்தில், கரோனாவின் தாக்கத்தால் அசாதாரண சூழ்நிலை நிலவியது. அந்த நேரத்தில் முதல்வருக்கும், அரசுக்கும் மிகப்பெரிய பலமாக களத்தில் நின்றது 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள்தான் என்பது முதல்வருக்கு நன்றாகவே தெரியும். முதல்வரின் வழிகாட்டுதலில் உயிரைப் பணயம் வைத்து அர்ப்பணிப்போடு பணியாற்றி வருவதோடு, கரோனாவை வெகுவாகக் குறைத்துள்ளோம்.

2) 2019 அக்டோபர் மாத இறுதியில் மருத்துவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டபோது, முதல்வர் நேரடியாக வந்து ஆதரவு தெரிவித்தார். அப்போது மருத்துவர்கள் தங்களை வருத்திக் கொள்ள வேண்டாம். அடுத்து அமையும் நம் ஆட்சியில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதியளித்ததை நினைவுகூர்கிறோம்.

3) முந்தைய அதிமுக ஆட்சியில் ஊதியக் கோரிக்கைக்காக போராடியதற்காக 118 மருத்துவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டபோதும், ஊதியக் கோரிக்கைக்காக மருத்துவர் ஒருவர் உயிரையே கொடுத்தபோதும் முதல்வர் முந்தைய அரசைக் கண்டித்ததோடு, வருத்தத்தைப் பதிவு செய்ததை நினைவுபடுத்துகிறோம். நாட்டிலேயே மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கைக்காக இவ்வளவு பெரிய விலை கொடுத்த பிறகும், இன்னமும் நிறைவேறாமல் இருப்பதை நம் முதல்வர் விரும்பமாட்டார் எனக் கருதுகிறோம்.

4) கடந்த ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, நம் முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் கரோனா காலத்தில் அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணிகளை நினைவில்கொண்டு கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்து இருந்ததை நினைத்துப் பார்க்கின்றோம்.

5) தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தங்கள் ஊதியக் கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்ற ஏக்கத்துடன் உள்ள அரசு மருத்துவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதை, முதல்வர் மேலும் தாமதப்படுத்த மாட்டார் எனக் கருதுகிறோம்

6) கரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது, பிபிஇகிட் அணிந்து, கரோனா வார்டுக்குள் நுழைந்து மருத்துவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திய முதல்வர், மருத்துவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில், ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

7) இது மக்களின் அரசு மட்டுமன்றி மக்களின் உயிர் காக்கும் மருத்துவர்களின் அரசாகவும் இருக்கும் என டாக்டர்கள் தினத்தன்று சூளுரைத்த முதல்வர், நம் உணர்வுகளைப் புரிந்துகொள்வார் என நம்புகிறோம்.

8) மற்ற மாநிலங்களில் அரசு மருத்துவர்களின் சேவையை அங்கீகரித்து, உடனடியாக ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்துக்குப் பெருமை சேர்த்து வரும் அரசு மருத்துவர்களை உரிய ஊதியம் வேண்டி தொடர்ந்து போராட வைப்பதை நம் முதல்வர் விரும்ப மாட்டார் என நம்புகிறோம்.

9) அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு வருடத்துக்கு கூடுதலாக 300 கோடி ரூபாய் மட்டுமே தேவைப்படுகிறது. அதில் பெரும் பகுதியை இன்சூரன்ஸ் மூலமாகவே மருத்துவர்கள் அரசுக்கு வருமானத்தை ஈட்டித் தர முடியும்.

10) கருணாநிதி ஆட்சியில் போடப்பட்ட அரசாணையை நிறைவேற்றத்தான் நாம் வேண்டுகிறோம். அவரைப் பெருமைப்படுத்தி வரும் முதல்வர் நம் ஊதியக் கோரிக்கையை நிச்சயமாக உடனே நிறைவேற்றுவார் என முழுமையாக நம்புகிறோம்.

எனவே இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில், அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354-ன் படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்கப்படும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட வேண்டும் என முதல்வரை வேண்டி, விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம்.

இதன் மூலம் கரோனா மூன்றாவது அலையை எதிர்பார்த்துள்ள நிலையில், அரசு மருத்துவர்கள் இன்னும் உற்சாகமாக பணி செய்திட வழி வகுக்கும் என்பதை முதல்வருக்கு உறுதியுடனும், பணிவுடனும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x