Published : 20 Jun 2014 11:51 AM
Last Updated : 20 Jun 2014 11:51 AM

எழுத்தாளர் ஜெயமோகன் மீது பெண் எழுத்தாளர்கள், பெண்ணியவாதிகள் தாக்கு!

பிரபல எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எதிராக பெண் எழுத்தாளர்களும், பெண்ணியவாதிகள் சிலரும் கண்டன அறிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, தமிழ் இலக்கிய உலகில் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

பெண் இலக்கியவாதிகளை, அவர்கள் பாலினம் சார்ந்து வெறுப்புக் கண்ணோட்டத்துடன் எழுத்தாளர் ஜெயமோகன் விமர்சித்திருப்பதாக அந்த அறிக்கையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எழுத்தாளர் ஜெயமோகன் தனது இணையதளத்தில் பெண் எழுத்தாளர்கள் தன் மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளதோடு, தனது எழுத்தின் அடிப்படையைப் புரிந்து கொள்ளாததே இத்தகைய விமர்சனங்கள் எழக் காரணம் எனவும் கூறியுள்ளார்.

அண்மையில், ‘நம்பிக்கை நட்சத்திரங்கள்’ என்ற தலைப்பில் வெளியான படைப்பாளிகளது பட்டியலைக் குறித்து ஜெயமோகன் தன் கருத்தினை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அந்த பதிவில், "பட்டியலில் உள்ள ஆண்படைப்பாளிகளில் அனைவரும் சிறப்பாக எழுதக்கூடியவர்கள்தான். இன்னும் அதிகமாக அவர்களிடம் எதிர்பார்க்கிறேன்.

ஆனால், பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பலவகை உத்திகள் மூலம் ஊடகப்பிம்பங்களாக ஆனவர்கள். பலரை ஏன் எழுத்தாளர்கள் அல்லது கவிஞர்கள் என்று சொல்கிறார் நாஞ்சில் என்றே புரியவில்லை.

இது ஒரு முக்கியமான அம்சம். இன்று ஆண்கள் எழுதித்தான் நிற்கவேண்டியிருக்கிறது. பெண்களுக்கு பெண்களாக தங்களை முன்வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது" என தெரிவித்திருந்தார்.

இந்த இரு பதிவுகள் தற்போது தொடரும் பிரச்சினைகளுக்கு வித்திட்டுள்ளது.

ஜெயமோகனுக்கு எதிராக பெண் எழுத்தாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயமோகன் சில முடிந்த முடிபுகளைக் கொண்டிருக்கிறார். பெண் படைப்பாளிகள்மீது இவருக்கு ஆழமான வெறுப்பு இருப்பதை அவர் எழுத்துப்பூச்சினால் என்னதான் மறைக்கமுயன்றாலும் அவரையும் மீறிக்கொண்டு அந்த வெறுப்புணர்வு வெளிப்பட்டுவிடுகிறது என குறிப்பிட்டுள்ளதோடு. அவரது பல்வேறு படைப்புகளில் இருந்து மேற்கோள் காட்டி குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்களே உயர்ந்தவர்கள் என்ற ஆண் ஆதிக்க சிந்தனை ஆழமாக வேரூன்றிய ஒருவரால் மட்டுமே பெண்களுக்கு எதிராக இத்தகைய இழிவான கருத்துகளை முன்வைக்க முடியும் எனவும் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

எழுத்துரு மாற்றம் இன்னபிற விடயங்களில் தனது “மேலான” கருத்துக்களைச் சொல்லி சர்ச்சைகளின்மூலம் “மஞ்சள் ஒளி வட்ட“த்தில் இருந்துகொண்டே இருக்கப் பிரியப்படுகிற அவரது மனச்சிக்கலைப் புரிந்துகொள்கிறோம். ஆனால், எழுதும் பெண்கள்மீது அவரால் பிரயோகிக்கப்படும் கருத்து வன்முறையை இனியும் புறந்தள்ளிக் கடந்துசெல்வதற்கில்லை.

அவரது கருத்து வன்முறைக்கு எதிராக குரல் கொடுக்காவிட்டால் இந்த சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமையில் இருந்து பின்வாங்கியதாகிவிடும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்க அதில் எழுத்தாளர்கள் அம்பை, குட்டி ரேவதி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

தற்போது வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை எழுத்தாளர் ஜெயமோகனை மட்டுமே குறிப்பிட்டிருந்தாலும், இதுபோன்று பெண்களை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும், அவர்கள் நடத்தையை சிதைக்கும் வகையில் விமர்சனங்களை முன்வைக்கும் சில வெளியீட்டாளர்கள், இலக்கியவாதிகள் நிலைப்பாடுகளை அவ்வப்போது ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் கூறுகின்றனர் பெண் எழுத்தாளர்கள்.

தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு இணையதளத்தில் பதில் அளித்துள்ள ஜெயமோகன், "இந்த விமர்சனங்களை படிக்கும் போதே இதை பதிவு செய்தவர்கள் என் படைப்புகளை ஆழமாக படிக்கவில்லை என தெரிகிறது. இந்த அறிக்கை மட்டுமே போதும், அவர்கள் இலக்கியச் சிவையையும், வாதத் திறனையும் எடுத்துக்காட்டுவதற்கு" என குறிப்பிட்டுள்ளார்.

தன் பதிவுகள் எவரையேனும் புண்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்பதாக கூறியுள்ள ஜெயமோகன், தன்னை விமர்சித்தவர்கள் சிக்கிக் கொண்டிருக்கும் 'அற்ப உலகத்தில்' தான் சிக்கிக்கொள்ளவில்லை என்றும், எந்த ஒரு எழுத்தாளரின் விமர்சனமும் அறிவுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x