Published : 13 Feb 2016 08:01 PM
Last Updated : 13 Feb 2016 08:01 PM

திமுக ஆட்சிக்கு வந்தால் அத்திக்கடவு- அவினாசி திட்டம் நிறைவேற்றப்படும்: ஸ்டாலின் உறுதி

திமுக ஆட்சிக்கு வந்தால் அத்திக்கடவு- அவினாசி திட்டம் நிறைவேற்றப்படும் என்று அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் எழுதியுள்ள முகநூல் பதிவில், ''அத்திக்கடவு- அவினாசி வெள்ளக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பில்லூர் அணையிலிருந்து மழை காலங்களில் நிரம்பி வழியும் 30 டி.எம்.சி.க்கும் மேற்பட்ட தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது என்பதால், இத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையாக இப்பகுதி மக்கள் முன் வைத்து வருகிறார்கள்.

கடலில் வீணாகும் இந்த தண்ணீரை பில்லூர் அணை அருகில் உள்ள அத்திக்கடவு என்னுமிடத்தில் கால்வாய்கள் அமைக்கும் இத்திட்டத்தால் கோவை மண்டலத்தில் உள்ள எட்டுக்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகள் பயனடையும், இப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் நிரம்பும், 36 லட்சம் மக்களுக்கு குடிநீர் வசதி கிடைக்கும் என்பது உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இத்திட்டத்தில் இருக்கிறது. இது தவிர ஏறக்குறைய 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வாய்ப்புள்ள திட்டமாகவும் இந்த அவினாசி- அத்திக்கடவு திட்டம் கொங்கு மண்டல மக்களால் கருதப்படுகிறது.

புதிய திட்டங்கள், புதிய குடிநீர் திட்டங்கள் எல்லாமே பெரும்பாலும் திமுக ஆட்சி காலத்தில்தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. எந்த முறை ஆட்சிக்கு வரும் போதும், அதிமுக அரசு இது போன்ற முக்கிய திட்டங்களை நிறைவேற்றுவதில்லை. திமுக ஆட்சி இருந்த போது ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றி வரலாற்று சாதனை படைத்தது.

இந்த முறை தனி மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, கோவை மக்களின் குடிநீர் தேவை மற்றும் விவசாயத் தேவைக்குத் தேவையான அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை நிறைவேற்ற துளியும் அக்கறை காட்டவில்லை. ஓடாத மிக்ஸி, மின்விசிறி, கிரைண்டருக்கு 8667 கோடி ரூபாய் செலவழித்து கமிஷன் அடித்தள்ள அதிமுக அரசு, சுமார் 1800 கோடி ரூபாய் தேவைப்படும் இந்த அவினாசி- அத்திக்கடவு திட்டத்தை இந்த ஐந்து வருட காலத்தில் நிறைவேற்றியிருக்க முடியும்.

ஆனால் மக்களுக்கான நீண்ட கால திட்டங்கள் எதிலும் அக்கறை இல்லாத அரசை எதிர்த்து இன்று அந்தப் பகுதி மக்களே போராடும் நிலைக்கு வந்திருக்கின்றனர். காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்பவர்கள் மிகவும் கவலைக்கிடமான நிலைக்கு வந்தும் அதிமுக அமைச்சர்களோ, முதல்வர் ஜெயலலிதாவோ போராட்டக்காரர்களை அழைத்துப் பேசி ஆறுதல் சொல்லவும் இல்லை. அவர்களுக்கு அத்திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து வாக்குறுதியும் கொடுக்கவில்லை.

இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதி விட்டு தன் பணி முடிந்து விட்டதாக ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. அவருக்குப் பெயர்தான் மக்கள் நல முதல்வர். அதிமுக அமைச்சரவையில் அரை டஜனுக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கொங்கு மண்டலத்திலிருந்து இடம்பெற்றிருந்தும், இப்பகுதிக்கு முக்கியமான இத்திட்டத்தை கொண்டு வருவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக நதிநீர் இணைப்புத் திட்டங்களில் அதிமுக அரசுக்கு எந்த வித அக்கறையும் இல்லை.

திமுக அரசு கொண்டு வந்த கருமேனியாரு- நம்பியாறு- தாமிரபரணி நதி நீர் இணைப்புத் திட்டத்தையே முடக்கி வைத்துள்ள அரசுதான் அதிமுக அரசு. அப்படிப்பட்ட அரசுக்கு இது போன்ற அவினாசி- அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மனசும் இல்லை. மார்க்கமும் இருக்காது.

ஆட்சியின் இறுதிக் கட்டத்திற்கு வந்து விட்ட அதிமுக ஆட்சியில் அத்திக்கடவு- அவினாசி திட்டம் நிறைவேறுதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு சாத்தியமில்லை.

இன்னுமொரு அறிவிப்பு வேண்டுமென்றால் விட்டு போராடும் மக்களை ஏமாற்றலாம். அதே நேரத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கும் மக்களின் உயிர் மிக முக்கியம். ஆகவே உண்ணாவிரதம் இருப்போரை உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் சந்தித்துப் பேசி இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அமைச்சர்களால் இயலா விட்டால் முதல்வரே தலையிட்டு போராடும் மக்களை சமாதானம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

2011 சட்டமன்ற தேர்தலுக்காக வெளியிட்ட கழக தேர்தல் அறிக்கையின் 19 ஆம் பக்கத்தில் “பவானி ஆற்றில் உள்ள உபரி நீரை கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காகவும், விவசாயப் பணிகளுக்குப் பயனுறும் வகையிலும் அத்திக்கடவு- அவினாசி வெள்ளக் கால்வாய் திட்டத்தை நடைமுறைப்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொள்வோம்” என்று திமுக ஏற்கனவே தேர்தல் வாக்குறுதி கொடுத்திருக்கிறது.

திமுக ஆட்சி அமைந்தவுடன் அந்த வாக்குறுதிப்படி கோவை பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அத்திக்கடவு- அவினாசி திட்டம் நிறைவேற்றப்படும் என்ற உத்தரவாதத்தை காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கும் மக்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x