Published : 07 Aug 2021 03:17 AM
Last Updated : 07 Aug 2021 03:17 AM

கரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கான சிகிச்சையை பரிந்துரைக்க சிறப்புக் குழு: அரசு மருத்துவமனைகளில் அதிநவீன சிகிச்சை பிரிவுகள்

கரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கான சிகிச்சை குறித்து பரிந்துரைக்க மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் சுகாதாரத் துறை செயலர் தலைமையில் 13 பேர் கொண்ட சிறப்பு பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், கரோனா 3-வது அலையில் குழந்தைகளுக்கு அதிகபாதிப்பு ஏற்படும் என கருதப்படுவதால் அரசு மருத்துவமனைகளில் அதிநவீன சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலையில் இளைஞர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். தினசரி தொற்று எண்ணிக்கை 36 ஆயிரம் வரை சென்று, படிப்படியாக குறையத் தொடங்கியது. தினசரி பாதிப்பு 1,750 ஆக இருந்த நிலையில், சில தினங்களாக பாதிப்பு அதிகரித்து 2 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. குறிப்பாக, சென்னை, கோவை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.

இதனிடையே, அண்டை மாநிலமான கேரளாவில் தினசரி தொற்றுபாதிப்பு 20 ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது. இதனால், கேரளாவில் இருந்து தமிழகம் வருவோர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்குகரோனா நெகட்டிவ் சான்றிதழ்,2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கட்டாயம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ்கள் இல்லாதவர்களுக்கு கரோனாபரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கரோனா மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கையை உலக சுகாதார நிறுவனம் மற்றும்மருத்துவ வல்லுநர்கள் விடுத்துள்ளனர். அதனால், தமிழகம் முழுவதும் தேவையான படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.மருந்துகள், ஆக்சிஜன் போன்றவற்றை தயாராக வைக்கும்படி மருத்துவமனைகளின் நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, 3-வது அலையில் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என கூறப்படுவதால் அதற்கான முன்னேற்பாடுகளை மத்திய,மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. கரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகளை பரிந்துரைக்க சிறப்புக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

இதுகுறித்து தமிழக சுகதாரத்துறை நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் மற்றும் சுகாதாரத் துறை கூடுதல் செயலர் அறிவுறுத்தல்படி, கரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் பாதுகாப்பு, சிகிச்சை குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை செயலர் தலைமையிலான இந்தக் குழுவில், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் உறுப்பினர் - செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சென்னையில் உள்ள தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநர், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக மேலாண் இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக மருத்துவ சேவைகள் இயக்குநர், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து இயக்குநர், ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிகளின் குழந்தைகள் சிகிச்சை பிரிவு துறைத் தலைவர்கள், இந்திய குழந்தைகள் நல மருத்துவ அகாடமியின் தமிழக கிளைதலைவர், செயலாளர், திருச்சி மாவட்ட கிளை செயலாளர் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழுவினர் தேவைப்படும் நேரத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தி, அரசுக்கு தேவையான பரிந்துரைகளை வழங்குவர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சிறப்பு படுக்கைகள்

இதனிடையே, கரோனா 3-வது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான சிறப்பு படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியார் பங்களிப்புடன் 15 படுக்கைகள் கொண்ட அதிநவீனசிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிகிச்சை பிரிவை ஆய்வு செய்த பின்னர் மருத்துவமனை டீன் ஜெயந்தி கூறும்போது, ‘‘குழந்தைகளுக்கான சிகிச்சைப் பிரிவில்நவீன படுக்கைகள், வெண்ட்டிலேட்டர் கருவிகள், அதிவேக ஆக்சிஜன் செலுத்தும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு தாய்மார்கள் பாலுட்ட பிரத்யேக அறை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பயமின்றி சிகிச்சைக்கு ஒத்துழைக்க வண்ணமயமான கார்ட்டூன் பொம்மைகள் வரையப்பட்டுள்ளன’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x