

புதுச்சேரிக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு வழங்க முன்வர வேண்டும். விமான விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்த மத்திய அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என நிதி ஆயோக் குழுக் கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நிதி ஆயோக் குழுக் கூட்டம் காணொலி மூலம் இன்று (ஆக. 6) நடைபெற்றது. இதில் புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்தபடி முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டார். அவருடன் தலைமைச் செயலர் அஸ்வனி குமார் மற்றும் அரசு செயலர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
‘‘மத்திய நிதியுதவி இதுவரை ஒரே நிலையாகவே இருந்து வந்துள்ளது. 2021-22ஆம் நிதியாண்டிலும் 1.58 விழுக்காடாக உள்ளது. மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவான 4 முதல் 5 விழுக்காடு என்ற நிலையிலேயே உள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசமானது மத்திய நிதிக் குழுவிலோ அல்லது யூனியன் பிரதேசங்களுக்கான நிதிக் குழுவிலோ சேர்க்கப்படவில்லை. எனவே, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் நலத் திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசானது, உரிய வழிமுறைகளை ஆராய்ந்து நிதி வழங்க ஆவன செய்யவேண்டும்.
மத்திய அரசானது, அதன் திட்டங்களை நிறைவேற்ற 60:40 என்கிற சதவிதத்தில் நிதி வழங்குகிறது. இதை 2016-ம் ஆண்டுக்கு முன்பு இருந்தது போலவே 90:10 என்ற சதவிதத்தில் நிதி வழங்க வேண்டும். தற்போது ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்தபிறகு வருவாய் வெகுவாகக் குறைந்து புதுச்சேரி பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறது. மத்திய அரசு வழங்கும் ஜிஎஸ்டி இழப்பீடும் குறைந்துள்ளது. இந்த இழப்பீட்டை மத்திய அரசு வழங்க முன்வர வேண்டும்.
மேலும், சுற்றுலாவை மேம்படுத்த விமான விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்த மத்திய அரசு நிதியுதவி வழங்க வேண்டும். வர்த்தகம் மற்றும் வணிகத்தை மேம்படுத்த சென்னை, புதுச்சேரி மற்றும் காரைக்காலை இணைத்து கடலோரக் கப்பல் சேவையை ஊக்கப்படுத்த வேண்டும். புதுச்சேரி யூனியன் பிரதேசக் காவல்துறையில் பனியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு டெல்லியைப் போல ஓய்வூதியம் வழங்க வேண்டும்”.
இவ்வாறு ரங்கசாமி பேசினார்.