Last Updated : 07 Feb, 2016 11:04 AM

 

Published : 07 Feb 2016 11:04 AM
Last Updated : 07 Feb 2016 11:04 AM

விவசாயியின் கண்ணீரும் புலம்பலும் தேசத்தின் முகத்தில் விழுந்த தேமல்கள்: இந்த ரணங்கள் யார் தந்தவை..? - இனியும் இது தேவையா?

இது, 2 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். இப்போது இதை நினைவூட்டுவதற்கு காரணம், கெயில் எரிகுழாய் பதிக்கும் திட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் அனுமதி. இந்த 2 நிகழ்வுக்கும் என்ன சம்பந்தம்?

உச்சிமேடு கிராமத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகத்துக்கு சொந்த மான குழாயில் இருந்து கசிந்த எரிவாயு, பரிசோதனை ஓட்டத்துக்கானது. அதிக அளவோ, அடர்த்தியோ, வேகமோ அதில் இல்லை. அந்த எரிவாயு கசிவே ஒரு மாணவனின் உடலை தீயில் கோடு போட்டதுபோல் இந்தளவுக்கு ரணமாக்கி இருக்கிறது என்றால்.. கொச்சியில் இருந்து பெங்களூருவுக்கு மிகக் கடுமையான அழுத்தத்தில் அனுப்பப்பட இருக் கும் எரிவாயு குழாயில் ஏதேனும் கசிவு ஏற்பட்டால், அதன் பாதிப்பு எப்படி இருக்கும் என்பதை நீங்களே அனுமானித்துக் கொள்ளுங்கள்.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட திரவ வடிவிலான பெட் ரோலிய வாயு, கொச்சியில் கம்ப்ரஸ் செய்யப்பட்டு வாயு வடிவமாகி மிகக் கடுமையான அழுத்தத்தோடும் வேகத் தோடும் பெங்களூருவுக்கு அனுப்பப் படுகிறது. ரூ.3,500 கோடி திட்ட மதிப்பீட்டில் 871 கி.மீ. தொலைவுக்கு குழாய்கள் மூலமாக அனுப்பப்படும் இந்த எரிவாயு, எந்த இடத்திலாவது கசிவுக்கோ வெடிப்புக்கோ ஆளானால், நினைத்துப் பார்க்கவே முடியாத சேதங்கள் நிகழும்.

‘ஒரு திட்டத்தை தொடங்கும்போதே அபசகுனமான கற்பனையா? எந்தத் திட்டத்தில்தான் பாதிப்பு இல்லை? உலக அளவில் குழாய் மூலமாக எரிவாயு அனுப்பும் திட்டங்கள் வெற்றிகரமாக நடந்து கொண்டுதானே இருக்கின்றன.. இப்படி சில கேள்விகள் எழலாம்.

உலகளாவிய அளவில் குழாய்களின் மூலமாக எரிவாயு எடுத்துச் செல்வது சகஜமாக நடக்கிறதுதான். ஆனால், உலகத்தின் எந்த திசையிலும், அது விவ சாயிகளின் முதுகை முறித்துப் பாதை போட்டுப் பயணிக்கும் திட்டமாக இல்லை. எந்தத் திட்டத்தைத் தொடங்கி னாலும் எதிர்ப்பு என கிளம்புகிற வழக் கமான போராட்டங்களில், கெயில் திட்டத்துக்கு எதிரான உணர்வுகளை ஒன் றிணைக்க முடியாது. மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் எப்படி ஒருங் கிணைந்த சோழ தேசத்தையே காவு வாங்க காத்திருக்கிறதோ, அதற்கு கொஞ்சமும் குறைவில்லாதது கெயில் எரிவாயு எடுத்துச் செல்லும் திட்டம்.

சேலம், கோவை, தருமபுரி, நாமக் கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய 7 மாவட்ட விவசாய நிலத்தைத் துளைத்துக்கொண்டு போகும் எரிவாயு குழாய் திட்டம், விவசாயிகளின் வாழ்க் கையை சூறையாடப் போவது கண்கூடு. அவர்களை தங்கள் நிலத்திலேயே கால் வைக்க முடியாத அளவுக்கு கட்டிப்போட பெட்ரோலிய, கனிமவள குழாய் பதிப்புச் சட்டம் ஏகப்பட்ட திருத்தங்களோடு காத்திருக்கிறது.

கடந்த 2014-ல் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் நகரம் என்ற கிராமத்தில் அதிகாலையில் எரி வாயு குழாய் வெடித்து 21 பேர் இறந் தனர். இதை வழக்கமான வாகன விபத் துகளில் ஒன்றாகக்கூட வைத்துக் கொள் வோம்.

ஆனால், அதிகாரத் தரப்பும் ஆயில் நிறுவன தரப்பும் இன்றுவரை விபத்துக்கு விளக்கம்கூடச் சொல்லாமல் மவுனம் காப்பதை மறந்துவிடக் கூடாது. இந்த தேசத்தின் ஒடுங்கிப்போன முது கெலும்புகளான விவசாயிகளை, அத் தனை திட்டங்களுக்குமான பரி சோதனை எலிகளாக்கியதுதான் நாம் செய்திருக்கும் சாதனை; செஞ்சோற்றுக் கடன்.

தமிழகத்தில் எரிவாயு குழாய் பய ணிக்கும் 310 கி.மீ. தூரத்தை மட்டும் விவசாய பாதிப்பு பகுதியாக பார்க்க முடி யாது. குழாய் பயணிக்கும் இருபுறமும் 6 மீட்டர் தூரத்துக்கு விவசாயம் செய்யக்கூடாது. அது மட்டுமல்ல, குழாய் செல்லும் இருபுறமும் குறைந்தது ஒரு கி.மீ. தூரம் பாதுகாக்கப்பட்ட பகுதி யாக அறிவிக்கப்படும். எரிவாயு குழாய் செல்லும் பாதையிலோ அதனரு கிலோ ஆழமாக ஊடுருவும் வேர் கொண்ட பயிர்களை பயிரிடக் கூடாது. மரப்பயிர்கள் அறவே கூடாது. பாது காக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட வரைவுக்குள் கிணறோ, வாய்க்காலோ வெட்டக்கூடாது என்கிறார்கள்.

அத்துடன் நிற்கவில்லை.. ஆழமாக உழவே கூடாதாம். அப்படி உழுதால் எரிவாயு குழாய்க்கு பாதிப்பு ஏற்படு மாம். அகல உழுவதைவிட, ஆழ உழு வதே நன்று என்பார்கள். ஆனால், எரிவாயு குழாய் பதிக்கப்பட்டால் ஆழ உழ முடியாது. அப்படியானால், கலப்பையை தூக்கிப் போட்டுவிட்டா, விவசாயம் செய்ய முடியும்?

எரிவாயு குழாயில் எங்கே கசிவு, வெடிப்பு ஏற்பட்டாலும் சம்பந்தப்பட்ட நிலத்தின் விவசாயியே அதற்கு பொறுப்பாவார். அவர் மீது கிரிமினல் வழக்கு போட்டு 7 முதல் 10 ஆண்டுகள் வரை உள்ளே தள்ள ஆவண செய் திருக்கிறது திருத்தப்பட்ட எரிவாயு குழாய் பதிப்புச் சட்டம். விவசாயிகளை ஒடுக்கவும் அடக்கவும் மட்டும் இந்த மண் ணில் எத்தனை எத்தனைச் சட்டங்கள்? ஒரு விவசாயியை பிடிக்காதவர்களோ பழி வாங்க நினைப்பவர்களோ அவர் வயல் வழியே செல்லும் எரிவாயு குழாய் மீது சிறு கீறலை ஏற்படுத்தினால்போதும். சம்பந்தப்பட்ட விவசாயி விசாரணை, நடவடிக்கை என அதிகார வர்க்கத்தால் பிழிந்து எடுக்கப்படுவார்.

கேரளத்திலோ, கர்நாடகத்திலோ பெரிதாக விவசாய பரப்பை காவு வாங்காமல் நெடுஞ்சாலை வழியே பயணிக்கும் எரிவாயு குழாய்க்கான பாதை, தமிழகத்தில் மட்டும் விவசாயப் பரப்பை மொத்தமாகக் குறிவைக்கிறது.

1962-ல் கொண்டு வரப்பட்ட பெட்ரோலிய கனிமவள குழாய் பதிப்புச் சட்டத்தில் 3 முக்கிய அம்சங்கள் இருக் கின்றன. திட்டத்தின் மொத்த பரப்பில் 10 சதவீதம் மட்டுமே விவசாயப் பரப்பாக இருக்க வேண்டும். 5 கி.மீ. தொலைவுக்குமேல் தொடர்ச்சியாக விவசாயப் பரப்பில் எரிவாயு குழாய் செல்லக் கூடாது. குழாய் பதிப்புக்குப் பிறகு சீரமைக்கப்படும் நிலம், மாநில அதிகாரி ஒருவரின் முன்னிலையில் சம்பந்தப்பட்ட விவசாயியின் நேரடிப் பார்வைக்குக் காட்டப்பட்டு, அவருக்கான அத்தனைத் தெளிவையும் ஏற்படுத்த வேண்டும் என்கிறது அந்தச் சட்டம்.

இப்போதைய கெயில் திட்டத்தில் இந்த நடைமுறைகள் ஏதேனும் பின்பற் றப்படுகிறதா? திட்டத்துக்கான பரப்பில் முக்கால்வாசி விவசாய நிலமே குறிவைத்துக் குதறப்பட்டிருக்கிறது. சட்டம் என்பது மக்களுக்கு மட்டும்தானா? அரசாங்கத்துக்கு இல்லையா?

கெயில் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு மூலமாகப் போராடப் போவ தாக அறிவித்திருக்கிறது. ‘எரிவாயு குழாய் பதித்தால் உடைத்தெறிவோம்' என 7 மாவட்ட விவசாயிகளும் கொந்த ளிக்கின்றனர். ஆனால், நீதிமன்றத்தில் இடைக்கால தடை வாங்க வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்திருக்கும் கெயில் நிறுவனம், சில நாட்களிலேயே குழாய் பதிப்புப் பணியை மீண்டும் தொடங்கப் போவதாகக் கிளப்புகிற கிலி, விவசாயிகளை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

வயிற்றைக் கிழித்து, முகத்துக்கு பவுடர் போடுவதே வளர்ச்சித் திட்டங் களாக அறியப்படும் இந்தத் தேசத்தில், சாவின் தலைமாட்டில் அமர்ந்திருக்கி றான் ஒவ்வொரு விவசாயியும். அவனு டைய கண்ணீரும் புலம்பலும் இந்த வளர்ச்சி தேசத்தின் முகத்தில் விழுந்த தேமல்கள் இல்லையா? விவசாயிகளைக் கொன்றுவிட்டு எதனை வளர்த்துவிடப் போகிறோம் நாம்?

- இரா.சரவணன்,திரைப்பட இயக்குநர், எழுத்தாளர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x