Published : 06 Aug 2021 03:20 AM
Last Updated : 06 Aug 2021 03:20 AM

மின்தடை புகாரைத் தொடர்ந்து வட சென்னையில் நள்ளிரவில் அமைச்சர் செந்தில்பாலாஜி திடீர் ஆய்வு: மது போதையில் இருந்த ஊழியர் பணியிடை நீக்கம்

சென்னை

வட சென்னை பகுதியில் மின் தடை புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் அளித்த நிலையில், அப்பகுதியில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மின் சேவை தொடர்பாக புகார் அளிக்க வசதியாக அண்ணா சாலை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ‘மின்னகம்’ நுகர்வோர் சேவை மையத்தை புதன்கிழமை இரவு 11 மணிக்கு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில்ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களின் புகார் அழைப்புகளை அமைச்சரே கேட்டறிந்தார். அதில்,வட சென்னை பகுதியில் மின்தடை ஏற்பட்ட நிலையில், புகார்அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என புகார்கள் வந்தன.

மக்களிடம் குறைகேட்பு

இதைத்தொடர்ந்து வட சென்னையில் உள்ள, கொருக் குப்பேட்டை துணை மின் அலுவலகத்துக்கு நள்ளிரவில் அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் சென்று ஆய்வு செய்தார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத மின் வாரிய ஊழியர்கள் செய்வதறியாது விழித்தனர். அவர்களில் ஒருவர் மது போதையில் பணியில் இருப்பதையும் அமைச்சர் அறிந்தார். இதைத்தொடர்ந்து துணை மின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம், ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ ஜெ.ஜெ.எபினேசருடன் சென்று குறைகளை கேட்டறிந்தார். அப்போது அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பல இடங்களில் மின் மாற்றிகளை மாற்ற வேண்டியுள்ளது. கடந்த ஆட்சியில் முறையாக மாற்றவில்லை. தற்போது முதல்வர் ஸ்டாலின் அனுமதி பெற்று ரூ.625 கோடியில் 68 ஆயிரம் மின் மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை நிறுவும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொருக்குப்பேட்டை துணை மின்நிலையத்தில் மது போதையில் பணியில் இருந்த லைன் மேனை பணியிடை நீக்கம் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x