Published : 06 Aug 2021 03:20 AM
Last Updated : 06 Aug 2021 03:20 AM

குளிர்பானம் குடித்த சிறிது நேரத்தில் மயக்கமடைந்து சிறுமி உயிரிழந்ததால் குளிர்பான ஆலை மூடல்: உணவுத் துறை அதிகாரிகள் நடவடிக்கை

குளிர்பானம் குடித்த சிறிது நேரத்தில் சிறுமி உயிரிழந்ததால், அந்த குளிர்பான ஆலையை மூடி உணவுத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்தவர்கள் சதீஷ் - காயத்ரி தம்பதி. இவர்களின் மகள்கள் அஸ்வினி(16), தரணி(13). வீ்ட்டின் அருகில் உள்ள மளிகைக் கடையில் 10 ரூபாய்க்கு விற்கப்படும் குளிர்பானத்தை, தரணி வாங்கிக் குடித்துள்ளார். பின்னர் வீட்டுக்கு வந்த தரணி, வாந்தி எடுத்து, மயங்கி விழுந்து விட்டார். சிறுமியின் மூக்கிலிருந்து ரத்தத்துடன் சளி வந்துள்ளது. உறவினர்கள் சிறுமியை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் சிறுமியை மீண்டும் வீட்டுக்கு கொண்டு சென்றபோது, அவரது உடல் முழுவதும் நீல நிறமாக மாறியுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த சாஸ்திரி நகர் போலீஸார் சிறுமியின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், சிறுமி குடித்த குளிர்பானத்தின் சிறு அளவை, ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். சிறுமியின் உடற்கூறு ஆய்வின் முதற்கட்ட அறிக்கையில், மூச்சுக்குழலில் உணவுத் துகள்கள் இருந்ததாகவும், அதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் எனவும் மருத்துவர்கள் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் உடலில் குளிர்பானத்தால் விஷம் ஏறி இருக்கிறதா என்பதைக் கண்டறிய சிறுமியின் உடல் உறுப்பு மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் உடற்கூறாய்வு அறிக்கை முழுமையாக வந்த பின்னரே சிறுமியின் திடீர் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் எனவும் போலீஸார் கூறியுள்ளனர்.

சட்டப்படி நடவடிக்கை

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை அடுத்த ஆத்தூரில் உள்ள இக்குளிர்பான நிறுவனத்துக்கு பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் செல்வம் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ஜெகதீஷ்சந்திரபோஸ் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட உணவுப் பாதுகாப்புதுறை நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ், “சிறுமி குடித்தகுளிர்பானத்தின் மாதிரி ஆய்வுமுடிவுகள் வரும் வரை குளிர்பானஆலையை தற்காலிகமாக மூடஉத்தரவிடப்பட்டுள்ளது. குளிர்பான மாதிரி ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சிறுமி குடித்த குளிர்பானம் தயாரித்த பேட்ஜ் எண் கொண்டகுளிர்பான பெட்டிகள் அனைத்தையும் கடைகளில் இருந்து உடனடியாக திரும்பப் பெறுமாறு தொழிற்சாலை நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் அறிவுரையின் பேரில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x