Published : 05 Aug 2021 03:16 AM
Last Updated : 05 Aug 2021 03:16 AM

மண் வளத்தை மீட்டெடுக்காவிட்டால் பெரும் உணவு தட்டுப்பாடு ஏற்படும்: சத்குரு

கோவை

மண்வளத்தை மீட்டெடுக்காவிட்டால், இந்தியாவில் பெரும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்தார்.

நதிகளை மீட்போம் இயக்கம் மற்றும் காவேரி கூக்குரல் இயக்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர்களின் கூட்டம் கடந்த 2-ம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவும், நதிகளை மீட்போம் இயக்கத்தின் நிர்வாக குழு உறுப்பினரும், இஸ்ரோ முன்னாள் தலைவருமான ஏ.எஸ்.கிரண் குமார் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது சத்குரு கூறும்போது,‘‘விவசாயம் நல்ல படியாக நடப்பதற்கும், நல்ல மகசூல் எடுப்பதற்கும் மண்ணில் குறைந்தபட்சம் 4 முதல் 6 சதவீதம் கரிம வளம் இருக்க வேண்டும். ஆனால், தற்போது இந்தியாவில் இருக்கும் மொத்த விவசாய நிலங்களில் 42 சதவீத மண்ணில் கரிம வள அளவு அரை சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. குன்றிய மண் வளத்தை சில ஆண்டுகளுக்குள் மேம்படுத்த முடியாது. மண்ணில் கரிம வளம் அரை சதவீதத்துக்கும் கீழ் சென்றால், அதை மீண்டும் வளமாக்க கிட்டதட்ட 150 ஆண்டுகள் தேவைப்படும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். மண் வளத்தை மீட்டெடுக்க விவசாயிகளின் ஒத்துழைப்பு அவசியம். ஆகவே, மண்வளம் காக்கும் சுற்றுச்சூழல் பணியில் முதல் முறையாக விவசாயிகள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

பல நூறு ஆண்டுகளாக இயற்கை வழியில் விவசாயம் செய்த நம் விவசாயிகள் கடந்த 40 ஆண்டுகளில் செயற்கை விவசாயத்துக்கு மாறினர். இது மண்ணின் வளத்தை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது. அதை சரிசெய்ய விவசாய நிலங்களில் மரங்களும், விலங்குகளின் கழிவுகளும் தேவை. அதற்காக தான் நாம் காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் விவசாயிகளை மரம் சார்ந்த விவசாய முறைக்கு மாற்றி வருகிறோம். மண் வளத்தை மீட்டெடுக்காவிட்டால் பெரும் உணவு தட்டுப்பாடு ஏற்படும். முன்னரே, ஈஷாவின் 20 ஆண்டு கால களப் பணியால் சுமார் 1 லட்சம் விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்துக்கு மாறி உள்ளனர். அதன்மூலம் மண் வளம் மேம்படுவதும் விவசாயிகளின் பொருளாதாரம் அதிகரித்து இருப்பதும் கண்கூடாக நிரூபணமாகி உள்ளது” என்றார்.

இஸ்ரோ முன்னாள் தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார் கூறும்போது,‘‘ காவேரி கூக்குரல் திட்டம் வெற்றி பெற்றால், அது ஒட்டுமொத்த உலகிற்கே முன்மாதிரி திட்டமாக மாறும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x