Published : 04 Aug 2021 03:19 AM
Last Updated : 04 Aug 2021 03:19 AM

காவிரிக் கரைகள், கடற்கரைகள் வெறிச்சோடின: டெல்டா மாவட்டங்களில் 2-வது ஆண்டாக களையிழந்த ஆடிப்பெருக்கு விழா

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆடிப்பெருக்கு நாளில் முக்கிய கோயில்களில் தரிசனம் செய்யவும், நீர்நிலைகளில் வழிபாடு நடத்தவும் தடை விதிக்கப்பட்டதால், டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து 2-வது ஆண்டாக ஆடிப் பெருக்கு விழா நேற்று களையிழந்தது.

தமிழ் மாதங்களில் பெண் தெய்வங்களுக்கு உகந்ததாகக் கருதப்படும் ஆடி மாதத்தின் முக்கிய நிகழ்ச்சியான ஆடி 18-ம் தேதி ஆடிப் பெருக்கு விழா சிறப்பாகக் கொண்டாடப்படும்.

இந்நாளில் டெல்டா மாவட்டங்களில் காவிரியாற்றின் கரைகள் மற்றும் நீர்நிலைகளில் பெண்கள். பொதுமக்கள் வாழை இலையில் பழம், பூ, பனை ஓலை, மஞ்சள் கயிறு உள்ளிட்டவற்றை வைத்து காவிரித் தாய்க்கு வழிபாடு நடத்துவர்.

கடந்த ஆண்டு ஆடிப் பெருக்கு அன்று தமிழகத்தில் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமலில் இருந்ததால், டெல்டா மாவட்டங்களில் காவிரி ஆற்றங்கரையில் ஆடிப் பெருக்கு விழா கொண்டாடப்படவில்லை.

தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நடப்பு ஆண்டும் ஆடிக் கிருத்திகை, ஆடிப் பெருக்கு ஆகிய நாட்களில் கோயில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்தவும், காவிரிக் கரையில் ஆடிப் பெருக்கு விழா கொண்டாடவும் தடை விதிக்கப்பட்டது.

இதனால், ஆடிப் பெருக்கு விழா டெல்டா மாவட்டங்களில் வழக்கமான உற்சாகமின்றி நேற்று களையிழந்தது. வழக்கமாக ஆடிப்பெருக்கு அன்று களைகட்டி இருக்கும் திருச்சி அம்மா மண்டபத்துக்கு நேற்று பொதுமக்கள் அனுமதிக்கப்படாததால், களையிழந்து காணப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றின் புஷ்பப் படித் துறை, சுவாமிமலை தீர்த்தவாரி படித் துறை, கும்பகோணம் பகவத், சக்கர, டபீர் படித் துறைகள், திருவாரூர் கமலாலயக் குளம் மற்றும் நாகை, வேதாரண்யம், கோடியக்கரை, தரங்கம்பாடி, பூம்புகார் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூடுவதை தடுக்க நேற்று ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வீடுகளில் கொண்டாட்டம்

இருப்பினும், எச்சரிக்கையையும் மீறி போலீஸ் பாதுகாப்புஇல்லாத காவிரிக் கரையோரங்களில் பொதுமக்கள் சிலர் வழிபாடு நடத்தினர்.

மேலும், பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள கிணறு, குடிநீர் குழாய்களிலும், கிராமப்புறங்களில் குளக்கரை, வாய்க்கால் கரைகளிலும் ஆடிப் பெருக்கு விழாவை கொண்டாடினர்.

காரைக்காலில் உற்சாகம்

காரைக்கால் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட தடை விதிக்கப்படாததால், அரசலாற்றங்கரையில் மக்கள் உற்சாகத்துடன் ஆடிப்பெருக்கு விழாவை நேற்று கொண்டாடினர். அங்கு பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டபொதுமக்கள் முகக்கவசம் அணிந்து கருகமணி, வளையல், காப்பரிசி, கண்ணாடி, பேரிக்காய், பழவகைகள் உள்ளிட்டவற்றை வைத்து படையலிட்டு வழிபட்டனர். தொடர்ந்து பெண்கள் கழுத்திலும், ஆண்கள் கைகளிலும் மஞ்சள் கயிற்றை கட்டிக் கொண்டனர். கரோனா பரவல் அச்சம் காரணமாக வழக்கமான அளவில் மக்கள் கூட்டம் காணப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x