Published : 03 Aug 2021 03:15 AM
Last Updated : 03 Aug 2021 03:15 AM

பொது போக்குவரத்து மூலம் நாடு முழுவதும் 35 ஆயிரம் கி.மீ. பயணித்து இளைஞர்கள் சாதனை

ராமேசுவரம் வந்தடைந்த திலீபன், ஆடம்சன் ராஜ் ஆகியோருக்கு வரவேற்பு அளித்த தமிழக சுற்றலாத் துறை அதிகாரிகள்.

ராமேசுவரம்

பொதுப் போக்குவரத்தில் நாடு முழுவதும் 35 ஆயிரத்து 583 கிலோ மீட்டர் தூரம் பயணித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த திலீபன்(29) இவர் புதுச்சேரிப் பல்கலைக்கழக சுற்றுலாத் துறையில் முனைவர் பட்ட ஆய்வு மாணவராக (பி.எச்டி.) பயின்று வருகிறார். இவரது நண்பர் புதுச்சேரியை சேர்ந்த ஆடம்சன் ராஜ் (26) இவர்கள் இருவரும் சுற்றுலா விழிப்புணர்வு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் விதமாக கடந்த பிப்ரவரி 7-ம் தேதி புதுச்சேரியிலிருந்து புறப்பட்டு நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களுக்குப் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி பயணம் செய்து விட்டு ஞாயிற்றுக்கிழமை பேருந்து மூலம் ராமேசுவரம் பேருந்து நிலையத்தில் தங்களின் பயணத்தை நிறைவு செய்தனர்.

பொதுப் போக்குவரத்து மூலம் நாடு முழுவதும், 23 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களை, 43 ரயில்கள், 34 பேருந்துகள், 8 விமானங்களில் 35 ஆயிரத்து 583 கிலோ மீட்டர் தூரத்தைப் பொதுப் போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்தி கடந்து உள்ளனர்.

தங்களின் பயண நிறைவு குறித்து திலீபன், ஆடம்சன் ராஜ் ஆகியோர் ராமேசுவரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியர் 29 ஆயிரத்து 119 கிமீ தூரத்தை பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி கடந்ததே உலக கின்னஸ் சாதனையாக இருந்தது. தற்போது அந்தச் சாதனையை 35 ஆயிரத்து 583 கி.மீ தூரத்தைப் பொதுப் போக்குவரத்து மூலம் பயணித்து கடந்து சாதனை படைத்துள்ளோம்.

பிப்ரவரி 7 அன்று தொடங்கிய பயணம் ஏப்ரல் முதல் வாரத்தில் கரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. பின்னர் ஜூலை 16-ம் தேதி தொடங்கி ராமேசுவரத்தில் நிறைவு செய்துள்ளோம்.

இந்தப் பயணத்தில் டெல்லி, ஆக்ரா, அமிர்தசரஸ், சிம்லா, வாரணாசி, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, ஆக்ரா, ஜெய்சால்மர், புனே, ஷிர்டி, மதுரை, புவனேஸ்வர், திருவனந்தபுரம், நெல்லூர், ஆகிய முக்கிய நகரங்களை பார்வையிட்டுள்ளோம், என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x