Published : 02 Aug 2021 03:15 AM
Last Updated : 02 Aug 2021 03:15 AM

பொற்பனைக்கோட்டை அகழாய்வில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மேற்கூரை ஓடுகள் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வின்போது, 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கட்டுமானத்தின் மேற்கூரைக்கு பயன்படுத்தப்பட்ட ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பொற்பனைக் கோட்டையில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தொல்லியல் துறை பேராசிரியர் இனியன் தலைமையிலான குழுவினர் கடந்த 3 நாட்களாக அகழாய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அகழாய்வுக்காக தேர்வு செய்யப்பட்ட 2 இடங்களில் மண்ணிலிருந்து பழங்கால பொருட்கள் பிரித்து எடுக்கப்பட்டு வருகின்றன.

தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் ஆ.மணிகண்டன், தொல்லியல் ஆர்வலர்கள் ஆனந்தன், இளங்கோ, அ.மணிகண்டன் உள்ளிட்டோர் பொற்பனைக்கோட்டை மேற்கு சுவரின் மீது நேற்று மேலாய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது, கட்டுமானத்தின் மேற்கூரைக்காக பயன்படுத்தப்பட்ட உடைந்த நிலையிலான ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.

இதுகுறித்து ஆ.மணிகண்டன் கூறியது: கோட்டையின் மதில் பகுதியில் பாதுகாப்பு பணிக்காக ஆயுதங்கள் தாங்கிய வீரர்கள் தங்குவதற்காக 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஓடுகளால் வேயப்பட்ட அரண்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேற்கூரையின் மீது ஓடுகளை அடுத்தடுத்து பொருத்துவதற்கு ஏற்ப ஒவ்வொரு ஓட்டிலும் காடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சங்க காலத்திலேயே இவ்வாறு நேர்த்தியாக வடிவமைத்து இருப்பது வியக்கும் வகையில் உள்ளது.

மேலும், சில ஓடுகள் துளையிடப்பட்டு உள்ளதால், இப்பகுதியில் இருந்த உருக்கு ஆலையில் இருந்து கம்பிகள் தயாரித்து துளையில் பொருத்தப்பட்டிருக்கலாம் எனவும் தெரிகிறது. இதுபோன்ற ஓடுகள் இந்த மாவட்டத்தில் இதுவரை கிடைத்ததாகத் தெரியவில்லை. இது மாதிரியான ஓடுகள் இங்கு ஏராளமாக புதைந்துள்ளன. 3 அடி ஆழத்துக்கு அகழாய்வு செய்த பிறகே கட்டுமானங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர் என்றார்.

இந்நிலையில், அகழாய்வு பணியை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் நேற்று முன்தினம் இரவு சென்று பார்வையிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x