Published : 21 Feb 2016 02:53 PM
Last Updated : 21 Feb 2016 02:53 PM

மக்கள் நல கூட்டணி ஆட்சிக்கு வரும்போது மதுக்கடைகள் மூடப்படும்: வைகோ உறுதி

பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் மக்கள் நல கூட்டணி தலைவர்களின் மாற்று அரசியல் எழுச்சி பயண பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.

இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவன தலைவர் தொல்.திருமாவளவன் பேசும்போது, ‘2016-ல் ஆட்சி மாற்றத்துக்கான மனநிலை மக்களிடம் காணப்படுகிறது. மக்கள் நல கூட்டணியில் உள்ள கட்சிகள் திமுக, அதிமுகவுடன் கூட்டணி சேர காத்திருக்கவில்லை. விஜயகாந்த் மக்கள் நல கூட்டணிக்கு வந்தால் அவருக்கும், நாட்டுக்கும் நல்லது. மக்கள் நல கூட்டணி ஆட்சியை பிடிக்கும்; புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்’ என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் பேசும்போது, ‘பொள்ளாச்சியில் விவசாயம் நலிந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 35 விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் . தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் நல கூட்டணி அமைந்துள்ளது’ என்றார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசும்போது, ‘மக்கள் நல கூட்டணி ஆட்சி அமைக்கும்போது பொள்ளாச்சியில் தென்னை வளர்ச்சி வாரியம் அமைக்கப்படும், ஆனைமலை நல்லாறு திட்டம், தேங்காய் கொள்முதல் விலை நிர்ணயம் செய்து தரப்படும். தாதுமணல், கிரானைட், மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள்

சொத்துகள் பறிமுதல் செய்யப்படும். மக்கள் நல கூட்டணி ஆட்சிக்கு வரும். அப்போது மதுக்கடைகளை மூடுவோம்’ என்றார்.

கோவை

கோவையில் நேற்று நடந்த மக்கள் நல கூட்டணியின் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகள் வன்னிய அரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிவசாமி உள்ளிட்டோர் பேசினார்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் பி.சம்பத் பேசும்போது, ‘இந்த தேர்தலில் மாணவர்களிடம் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டணியை இளைஞர்கள் வரவேற்கிறார்கள். அவர்கள்தான் அடுத்த மூன்றரை ஆண்டுகளில் மத்தியில் ஆளும் பாஜக அரசை வீழ்த்தப் போகிறார்கள்’ என்றார்.

முன்னாள் கோவை எம்பியும், மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளில் ஒருவருமான பி.ஆர்.நடராஜன் பேசும்போது, ‘மோடியும் வேண்டாம், டாடியும் வேண்டாம், லேடியும் வேண்டாம் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். மரியாதைக்குரிய முறையில் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார்கள் மக்கள் நல கூட்டணி தலைவர்கள்’ என்றார்.

மதிமுக மூத்த நிர்வாகி சு.துரைசாமி பேசும்போது, ‘மாற்றப்பட்டே ஆக வேண்டிய ஆட்சி அதிமுக. திமுக ஆட்சி வேண்டுமா என்றால் அது என்ன ஊழலில்லாத கட்சியா?

அப்பழுக்கில்லாத தலைவர்கள் மக்கள் நல கூட்டணி அமைத்துள்ளனர். இது காலத்தின் கட்டாயம் அல்ல; மக்களுக்கான கட்டாயம்’ என்றார்.

கொளுத்தும் வெயிலில் தொண்டர்கள் சிகப்பு நிற தொப்பிகளை அணிந்திருந்ததை வர்ணித்த வைகோ, ‘நெருப்பு வெயிலில் செங்கொடித் தோழர்கள் ஆர்ப்பரித்து இருப்பதும், அவர்களுடன் கைகோர்த்து நிற்பதிலும் பேருவுவகை கொள்கிறேன்’ என்றார்.

கெயில் திட்டத்தில் விவசாயிகள் பலிகடா

திருப்பூர்

பல்லடத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்துக்கு மதிமுகவைச் சேர்ந்த மு.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். இக் கூட்டத்தில் சிபிஐ மாநில துணைச் செயலாளர் கே.சுப்பராயன் பேசும்போது, ‘பல்லடம் பகுதியில் விவசாயம் பொய்த்துவிட்டது. விசைத்தறியாளர்கள் பிரச்சினை மீது அதிமுக, திமுக அக்கறை கொள்ளவில்லை. மின்கட்டண சலுகையை விசைத்தறியாளர்கள் கோரியுள்ளனர். ஆனால், அதைப்பற்றி ஆட்சியாளர்களுக்கு கவலை இல்லை’ என்றார்.

தொல்.திருமாவளவன்:

ஒருகட்சி ஆட்சிமுறை ஒழிய வேண்டும். கூட்டணி ஆட்சிமுறை மலர வேண்டும். கூட்டணி ஆட்சி என்பது, நாட்டில் ஊழலை ஒழிக்கும் வழி.

ஜி.ராமகிருஷ்ணன்:

கூலிப் பிரச்சினையால் 2 லட்சம் விசைத்தறியாளர்கள் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளபோது, தமிழக அரசு தலையிடுகிறதா? இந்த தேர்தலில் ஆள் மாற்றம், ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை. கொள்கை மாற்றம் தமிழகத்தில் நடைபெற வேண்டும்.

வைகோ:

கடந்த 23 நாட்களாக இடைவிடாது போராடிவரும் 2 லட்சம் விசைத்தறி குடும்பங்களில் 6 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு, வேதனையுடன் இப் பகுதியில் உலவுகிறார்கள். முன்னாள் முதல்வர் கருணாநிதி தான், கெயில் திட்டத்துக்கு கையெழுத்து போட்டார். கெயில் போன்ற திட்டத்தால் இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்த விவசாயிகள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x