Published : 26 Jul 2021 05:12 PM
Last Updated : 26 Jul 2021 05:12 PM

புதுச்சேரியில் தூய்மைப் பணியாளர்களுக்கான ஊதியத்தை அரசே வழங்க வேண்டும்: எம்.வெங்கடேசன் கருத்து

புதுச்சேரியில் தூய்மைப் பணியாளர்களுக்கான ஊதியத்தை அரசே நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூலை 26) நடைபெற்ற கூட்டத்தில், தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசன், நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், பணியாளர் சங்கத்தினர், ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் குறைகளைக் கேட்டறிந்தார். மேலும் மாவட்ட துணை ஆட்சியர்கள் எம்.ஆதர்ஷ், எஸ்.பாஸ்கரன், மண்டல காவல் கண்காணிப்பாளர் ஆர்.ரகுநாயகம் மற்றும் தொடர்புடைய பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ”காரைக்காலில் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஏராளமான பிரச்சினைகளை கூறியுள்ளனர். கிட்டதட்ட அகதிகள், கொத்தடிமைகள் போல காரைக்கால் பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் வாழ்ந்துகொண்டுள்ளனர். இது வருந்தத்தக்கது. கடந்த 5 ஆண்டுகளாக மாதம் தோறும் முறையாக ஊதியம் வழங்கப்படாமல் 6 மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்டுளது. தற்போது கடந்த 5 மாதங்களாக ஊதியம் தரப்படாமல் உள்ளது. ஆனால் உள்ளாட்சி அமைப்புகளில் தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட சலுகைகள் தடையின்றி கிடைக்கிறது. இது அதிர்ச்சியாகவும், முரண்பாடாகவும் உள்ளது.

நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் வரி வசூல் வருவாய் மூலம் ஊதியம் வழங்கப்படுவது என்ற முறையை அகற்றி, நிரந்தர தூய்மைப் பணியாளர்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்குவதற்கு துணை நிலை ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பணியாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனை முகாம்கள் நடத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடை, முகக்கவசம், கையுறை, கவச உடை, சோப்பு போன்ற பொருட்களை அரசு தடையின்றி தரவேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும்.

தூய்மைப் பணியாளர்களுக்கு சிவப்பு நிற குடும்ப அட்டை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நல அதிகாரி நியமிக்கவேண்டும்.

கரோனா பணியில் ஈடுபட்டு உயிரிழந்த தூய்மைப் பணியாளர்கள் குடும்பத்துக்கு குறைந்தபட்சம் ரூ.25 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். ஊக்கத்தொகை வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கென ஆணையம் அல்லது நல வாரியம் அமைக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x