Published : 24 Jul 2021 10:27 PM
Last Updated : 24 Jul 2021 10:27 PM

தமிழக டிஜிபி உத்தரவு எதிரொலி: காவலர்களிடம் பயணக் கட்டணம் வசூலிக்க நடத்துநர்களுக்கு உத்தரவு

திருவண்ணாமலை 

அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் காவலர்களிடம் பயணக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என நடத்துநர்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வதை காவல்துறையினர் வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். முதல் நிலைக் காவலர் முதல் அதிகாரிகள் வரை, ’போலீஸ்’ எனக் கூறி பயணம் செய்வது வழக்கம். உள்ளூர் பேருந்துகள் மட்டுமின்றி தொலைதூரத்துக்கு இயக்கப்படும் பேருந்துகளில் ‘இலவசப் பயணத்தை’ தொடர்கின்றனர்.

வேறு வழியின்றி பெரும்பாலான நடத்துநர்கள் அனுமதிக்கின்றனர். ஒரு சில நடத்துநர்கள் கேள்வி எழுப்பும்போது, தகராறு முற்றிவிடுகிறது. அப்போது, தனது முழு பலத்தையும் நடத்துநருக்கு எதிராக காவல்துறை சேர்ந்தவர்கள் பயன்படுத்துகின்றனர்.

காவல்துறையினரின் ‘இலவசப் பயண திட்டத்துக்கு’ டிஜிபி சைலேந்திர பாபு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அனைத்து மாவட்ட காவல்துறைக்கும் அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், “மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவைப் பின்பற்றி, அரசுப் பேருந்துகளில் சொந்தக் காரணங்களுக்காக பயணிக்கும்போது காவலர்கள் கண்டிப்பாக பயணச்சீட்டு பெற வேண்டும். பணி தொடர்பாக பயணிக்கும்போது பயணச்சீட்டு எடுக்க தேவையில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

அவரது அறிவிப்பு, சொந்த காரணங்களுக்காக நகரம் விட்டு நகரம், மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு பயணிக்கும் காவலர்களுக்குப் பேரிடியாக விழுந்துள்ளது.

இந்த நிலையில், அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் காவலர்களிடம், பயண சீட்டு கட்டணத்தை தவறாமல் கேட்டு பெற வேண்டும் என்றும், பயணச் சீட்டு இல்லாமல் காவலர்கள் பயணிப்பது குறித்து பயணச்சீட்டு பரிசோதகர்கள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் விதிக்கவும், சம்மந்தப்பட்ட நடத்துநர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழக நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை பணிமனை அதிகாரிகள் மூலமாக நடத்துநர்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து திருவண்ணாமலை மண்டல அரசுப் போக்குவரத்துக் கழக மேலாளர் தசரதன் கூறும்போது, “அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் காவலர்களிடம் கட்டணத்தை பெற்றுக் கொண்டு பயணச்சீட்டு வழங்க நடத்துநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

உள்ளூர் பேருந்து முதல் தொலைதூரத்துக்கு இயக்கப்படும் பேருந்துகளில் பயணச்சீட்டு பெறாமல் பயணம் செய்ய அனுமதிக்கக்கூடாது என தெரிவித்துள்ளோம். வாரண்ட் கொண்டு வரும் காவலர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தமிழக முதல்வர் உத்தரவுப்படி, நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண் காவலர்களிடம் பயணச்சீட்டு கட்டணம் வசூலிக்கப்படாது” எனத் தெரிவித்தார்.

வாக்குவாதம் ஏற்படும்

நடத்துநர்கள் கூறும்போது, “காவலர்களிடம் பயணக் கட்டணம் கேட்கும்போது, கண்டிப்பாக வாக்குவாதம் ஏற்படும். இதனால், எங்களது பணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பயணக் கட்டணம் எடுக்க மறுக்கும் காவலர்கள் குறித்து வீடியோ ஆதாரத்துடன் புகார் கொடுத்தால், ஒவ்வொரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், டிஜிபியின் உத்தரவு முழுமை பெறும். இல்லையென்றால், அந்த உத்தரவு காகிதத்துடன் முடிவுக்கு வந்துவிடும்” என்றனர்.

மனசாட்சி இருந்தால்

இது தொடர்பாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சிலர் கூறும்போது, “டிஜிபி உத்தரவை எடுத்துரைத்து அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் காவலர்களிடம் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், தனியார் பேருந்துகளில், அவ்வாறு செய்ய முடியாது. காவலர்களை பகைத்துக் கொண்டால், தேவையில்லாத பிரச்சினை எழும். ஏதாவது ஒரு குற்றச்சாட்டை கூறி, வழியில் பேருந்தை நிறுத்திவிடுவார்கள். இதனால், ஒரு டிரிப் பாதிக்கப்படும். ஏற்கெனவே, கரோனா ஊரடங்கால், நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். டீசல் விலை உயர்வை நினைத்து, மனசாட்சி உள்ள காவலர்கள், தாங்களாகவே முன் வந்து பயணத்துக்கான கட்டண தொகையை கொடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x