Published : 24 Jul 2021 03:12 AM
Last Updated : 24 Jul 2021 03:12 AM

வெளிநாடு வாழ் தமிழர்கள் நலனுக்கு தனி துறை, நலவாரியம் அமைக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை

வெளிநாடு வாழ் தமிழர்கள் நலனுக்காக தனி துறை மற்றும் நலவாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தலைமைச் செயலகத்தில் பொது மற்றும் மறுவாழ்வுத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் இலங்கைத் தமிழ் அகதிகள் மறுவாழ்வு, வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன், தாயகம் திரும்பியோர் மறுவாழ்வு, முன்னாள் படைவீரர்கள் நலன் உள்ளிட்ட பல்வேறு பணிகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

‘தலைநிமிரும் தமிழகம்’ தொலைநோக்குத் திட்டங்களில் அறிவுறுத்தியபடி வெளிநாடு வாழ்தமிழர்கள் நலன் பேணவும், அங்கு பாதிப்புக்கு உள்ளனவர்களுக்கு உதவவும், நாடு திரும்பிய வெளிநாடு வாழ் தமிழர்களின் வாழ்வாதாரத்துக்கு துணை நிற்கவும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை என்ற புதிய நலத் துறை அமைக்கஉடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடிப்படை வசதி மேம்பாடு

இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வழிகாட்டுதல் குழு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு வீடு கட்டவும், குடிநீர், கழிவறை வசதி, தெருவிளக்கு, மின் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் மாதாந்திர பணிக்கொடையை உயர்த்தவும், சமையல் பாத்திரங்கள், துணிகள் வாங்குவதற்கான ஒதுக்கீட்டை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலவச சமையல் எரிவாயு இணைப்பு, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெளிநாடு வாழ் தமிழர்களுக்குகாப்பீட்டுத் திட்டம், அடையாள அட்டை, கட்டணமில்லா தொலைபேசி உதவி மையம், வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தமிழ்மொழியை இணைய வழியில் கற்பிக்க தமிழ் இணைய கல்விக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், புதிதாக முன்னாள் படைவீரர் நலஅலுவலகங்கள் அமைக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன், பொதுத் துறைசெயலர் டி.ஜெகந்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x