Published : 24 Jul 2021 03:12 AM
Last Updated : 24 Jul 2021 03:12 AM

அரசியல்வாதி ஆளுநராகலாம், ஆளுநர்தான் அரசியலில் ஈடுபடக் கூடாது; கரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தயார்: தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தகவல்

சென்னை

கரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்கள் தயார் நிலையில் இருப்பதாக அவ்விரு மாநிலங்களின் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அரசியல்வாதி ஆளுநராகலாம், ஆளுநர்தான் அரசியலில் ஈடுபடக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ‘தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

மகப்பேறு மருத்துவரான நான்ஒற்றைக் குழந்தைகளின் பிரசவத்தையும், இரட்டைக் குழந்தைகளின் பிரசவத்தையும் கையாண்டிருக்கிறேன். எனவே, எனக்கு அளிக்கப்பட்டுள்ள தெலங்கானா, புதுச்சேரி என்று இரு மாநில ஆளுநர் பொறுப்பையும் கையாள்வது எனக்கு எளிதாகவே உள்ளது. மருத்துவராகவும், ஆளுநராகவும் இருப்பதால் கரோனா நெருக்கடி காலத்தில் இரு மாநிலத்துக்கும் என்னால் உதவ முடிந்தது.

‘ரெம்டெசிவிர்' மருந்துக்கு புதுச்சேரியில் தட்டுப்பாடு ஏற்பட்டபோது தெலங்கானா முதல்வரிடம் பேசி உடனடியாக 1,000 குப்பிகள் வரவழைக்க முடிந்தது. அதுபோல கரோனா சிகிச்சை முறைகளில் புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையின் ஆலோசனைகள் தெலங்கானாவுக்கு உதவியாக இருந்தன.

நான் இப்போது புதுச்சேரியில் 4 நாட்களும், தெலங்கானாவில் 3 நாட்களும் செலவிடுகிறேன். இருமாநிலத்துக்கும் சமமான முக்கியத்துவம் அளித்து வருகிறேன். எனது முதல் தவணை தடுப்பூசியை புதுச்சேரியிலும், 2-வது தவணை தடுப்பூசியை தெலங்கானாவிலும் எடுத்துக் கொண்டேன்.

தெலங்கானா மாநில ஆளுநராக நான் பொறுப்பேற்ற காலகட்டத்தில் அங்கு டெங்கு காய்ச்சல் அதிகமாக இருந்தது. நான் குழந்தை நல மருத்துவர் என்ற முறையில் டெங்குவைகட்டுப்படுத்த எனது ஆலோசனைகளை கூறினேன். ஆனால், அரசியல் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்து நேரடியாக ஆளுநராக வந்தவர் என்பதால் எனது கருத்தை கேட்க தெலங்கானா அரசு முதலில் தயங்கியது. அரசியல்வாதியை ஆளுநராக்கக் கூடாது என்றெல்லாம் பேசினார்கள்.

அரசுடன் இணக்கமான உறவு

அரசியல்வாதி ஆளுநராகலாம். ஆனால், ஆளுநர்தான் அரசியல் செய்யக் கூடாது. மக்கள் நலனுக்காகவே என் அனுபவத்திலிருந்து பல ஆலோசனைகளை வழங்குவதாக எடுத்துக் கூறினேன். அதன்பிறகு தெலங்கானா அரசுடன் இணக்கமான உறவு இருந்து வருகிறது.

கரோனா பரவல் தொடங்கியதும் தொடர்ந்து மாநில அரசுக்கு கடிதங்கள் அனுப்பினேன். எனது பரிந்துரைகளை தெரிவித்தேன். ஆனால், அதனை நான் விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை. தெலங்கானா முதல்வர் ஆளுநர் மாளிகைக்கு வந்து என்னுடன் கலந்துரையாடினார். அதன்பிறகு நடைபெற்ற ஒரு ஆலோசனைக் கூட்டத்துக்கு சுகாதாரத் துறை செயலாளரை அனுப்பியிருந்தார். கரோனா சிகிச்சைக்கு மாவட்டந்தோறும் மருத்துவமனை, பரிசோதனைகள் அதிகப்படுத்த வேண்டும் என்பது போன்ற ஆலோசனைகளை வழங்கினேன்.

குடியுரிமைச் சட்டம் போன்ற பல்வேறு பிரச்சினைகளில் தெலங்கானா மாநில அரசுக்கு மாற்று கருத்து இருந்தது. மத்திய அரசின் ‘ஆயுஷ்மான் பாரத்' மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்தெலங்கானாவில் இல்லை. தெலங்கானா மக்கள் மற்ற மாநிலங்களில் சிகிச்சைப் பெற மாநில அரசின் ‘ஆரோக்கிய ஸ்ரீ ' காப்பீட்டுத் திட்டம் போதாது என்று எடுத்துக் கூறினேன்.

பொதுமக்களுக்கு நல்ல பயன்

பொது விநியோகத் திட்டப் பயனாளிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தும் திட்டம் பொதுமக்களுக்கு நல்ல பயனைத் தந்துள்ளது. இத்திட்டம் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் செயல்படுத்த வேண்டும். நேரடி பணப் பரிமாற்றத் திட்டம் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்.

புதுச்சேரியில் தகுதிவாய்ந்த அனைவருக்கும் ஆகஸ்ட் 15-ம்தேதிக்குள் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறேன். இது சாத்தியமா என்று கேட்கிறார்கள். உண்மையில் இது கடினமான பணிதான். புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நான் பொறுப்பேற்றபோது 4 ஆயிரம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டிருந்தது.

கடந்த 3 மாதங்களில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளால் 6 லட்சம் பேருக்கு அதாவது 55சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி மக்களை எப்படி பாதுகாக்கிறது என்பதை எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம்.

கரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தெலங்கானா, புதுச்சேரி இருமாநிலங்களுமே தயார் நிலையில்உள்ளன. இப்போது தெலங்கானா முதல்வரே சுகாதாரத் துறையைகையாள்கிறார். இதனால் நல்லமுன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் உள்கட்டமைப்பு வசதிகள்மேம்படுத்தப்பட்டுள்ளன. 3-வது அலையை எதிர்கொள்ள போதுமானஆக்சிஜன் படுக்கைகள், வெண்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன.

கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் பிரதமர் அலுவலகம், மத்திய உள்துறை, சுகாதாரத் துறை அமைச்சகங்களின் வழிகாட்டுதல் எங்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது. புதுச்சேரியில் ஒரு ரூபாய்க்கு முகக் கவசம், ரூ.10-க்கும் சானிட்டைசர் விற்பனை போன்ற முயற்சிகளை மேற்கொண்டோம். காரைக்காலில் ரூ. 5-க்கு சானிட்டைசர் விநியோகிக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து என்பது மத்திய அரசும், புதுச்சேரி அரசும் எடுக்க வேண்டிய கொள்கை முடிவு. புதுச்சேரி மக்கள் அனைத்து வசதிகளையும் பெற வேண்டும் என்பதே எனது விருப்பம். அதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறேன்.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x