Published : 23 Jul 2021 07:13 AM
Last Updated : 23 Jul 2021 07:13 AM

இலங்கை தமிழர்கள் 100 பேருக்கு தலா ரூ.4 ஆயிரம் கரோனா நிவாரணம்: அமைச்சர்கள் சேகர்பாபு, செஞ்சி மஸ்தான் வழங்கினர்

சென்னை

சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் முகாமுக்கு வெளியே வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் 100 பேருக்கு கரோனா நிவாரண நிதியாக தலா ரூ.4 ஆயிரத்தை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, செஞ்சி மஸ்தான் ஆகியோர் நேற்று வழங்கினர்.

தமிழகத்தில் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படுகிறது.

இலங்கைத் தமிழர்கள் பலர் முகாம்களுக்கு வெளியேயும் வசித்து வருகின்றனர். அவ்வாறு கணக்கிடப்பட்ட 13 ஆயிரத்து 553 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கும் தலா ரூ.4 ஆயிரம் வீதம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு, கடந்த ஜூன் 16-ம் தேதி அத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட அகதிகள் முகாம்களுக்கு வெளியில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களில் முதல்கட்டமாக 100 குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, செஞ்சி மஸ்தான், மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயராணி ஆகியோர் பங்கேற்று நிவாரணத் தொகைகளை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியதாவது:

இலங்கைத் தமிழர் மீது கொண்ட பற்று காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின், முகாம்களுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழர்களுக்கும் நிவாரணம் வழங்க ரூ.5 கோடியே 42 லட்சத்து 12 ஆயிரம் நிதி ஒதுக்கியுள்ளார். தற்போது தமிழகம் முழுவதும் பயனாளிகளுக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்காக குடிநீர், சாலை, மின்விளக்கு போன்ற வசதிகளை ஏற்படுத்துவது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்கு விரைவில் தீர்வு காணப்படும். இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது தொடர்பாக மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x