Published : 22 Jul 2021 07:39 PM
Last Updated : 22 Jul 2021 07:39 PM

கரோனாவும் பள்ளிக் குழந்தைகளும்: இடைநிற்றல் 10%, ஆன்லைன் கல்வி கிடைக்காதோர் 51%, ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகள் 38%: அறிவியல் இயக்க ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

சென்னை

தமிழகத்தில் கரோனா தொற்றுக் காலத்தில் பள்ளிகள் மூடியுள்ள நிலையில் பள்ளி மாணவர்கள் நிலை குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய ஆய்வில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆன்லைன் கல்வி கிடைக்காதோர் 51% பேர் உள்ளனர். சத்துணவு கிடைக்காததால் 38% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் வாடுகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“கோவிட்-19 பெருந்தொற்று பள்ளிக் கல்வியில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய நேரடிக் கள ஆய்வு முடிவுகள் அடிப்படையில் தமிழக அரசுக்கு கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறது.

2021 ஜூலை மாதம் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தன்னார்வலர்கள் மூலம் 35 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டது.

இந்தக் கள ஆய்வு 2137 மாணவர்களிடம் நடத்தப்பட்டது. மொத்தம் 202 தன்னார்வலர்கள் கண்டறியப்பட்டு முதல் கட்டமாக ஜூலை 3 மற்றும் 4 ஆகிய இரண்டு நாட்கள் பயிற்சியளிக்கப்பட்டது. பின்பு கல்வியாளர்களால் 60க்கும் மேற்பட்ட கேள்விகள் உருவாக்கப்பட்டு கள முன்பரிசோதனை செய்யப்பட்டது. ஒரு மாவட்டத்திற்கு 2 முதல் 3 ஒன்றியங்கள், அப்பகுதியில் உள்ள கிராமம் மற்றும் நகரப் பகுதிகளைத் தேர்வு செய்து ஆய்வு நடத்தப்பட்டது.

ஒரு கிராமத்திற்கு 10 முதல் 20 மாணவர்களிடம் ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. தன்னார்வலர்களாக அறிவியல் இயக்க ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், இளம் ஆய்வாளர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 121 கிராமங்களிலும் 41 நகரங்களிலும் ஆய்வு நடத்தப்பட்டது.

ஜூலை 10, 11 தேதிகளில் 162 பகுதிகளில் 202 தன்னார்வலர்கள் 2137 மாணவர்களிடம் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஒரு மாணவரை ஆய்வு செய்ய 25 நிமிடங்கள் என்ற அடிப்படையில் 800 மணி நேரம் ஆய்வுப் பணி நடைபெற்றுள்ளது.



ஆய்வுச் சுருக்கம் :

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை- 2137 மற்றும் அவர் தம் பெற்றோர். ஆண் குழந்தைகள்- 1177. பெண் குழந்தைகள்- 957, பிற 3.

31% மாணவர்கள் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 32% பிற்படுத்தப்பட்ட சமூகப் பிரிவினர். 30% மிகவும் பின்தங்கிய பிரிவினர். பொதுப் பிரிவினர் 2%. சாதி தேவையில்லை என்று கூறியவர்கள்- 2%.

ஆய்வில் பங்கேற்ற மாணவர்கள், ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை 20%.

ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 69%.

எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மட்டுமே 89%.

ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாணவர்கள் 11%.

2019-20 தொடங்கி 2021 -2022 வரையுள்ள காலத்தில் அரசுப் பள்ளிகளில் 5% மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 7% குறைந்துள்ளது.

மேல் வகுப்புக்குச் செல்லாமல் 11%. இது பள்ளி இடைவிலகல். ஆனால், பள்ளிகள் திறந்த பிறகு இந்த எண்ணிக்கை குறைய வாய்ப்பு இருக்கிறது.

2.96 % மாணவர்கள் தற்காலிக குழந்தைத் தொழிலாளர்களாக மாறியுள்ளனர். 60% மாணவர்கள் ரூபாய் 100க்கும் கீழே சம்பளம் வாங்குபவர்கள்.

8 மணி நேரத்திற்கும் மேல் வேலை செய்யும் மாணவர்கள் / குழந்தைத் தொழிலாளர்கள் 10%.

அதிகபட்சமாக சேவைத் துறை பணிகளில்தான் 54% மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வீட்டில் வேலைக்குச் செல்லாமல் உள்ள குழந்தைகளில் தாய் தந்தையர் மற்றும் பாதுகாவலருக்கு உதவி புரியும் குழந்தைகள் 28%.

வீட்டில் இருக்கும்போது பெரும்பகுதி நேரத்தை விளையாட்டில் கழிக்கும் குழந்தைகள் 72%.

தொலைக்காட்சி பார்ப்பதில் 39 % மாணவர்கள் தங்கள் நேரத்தை செலவிடுகின்றனர்.

வீடியோ விளையாட்டுகளில் ஈடுபட்டு வருபவர்கள் 18 %.

பள்ளிகளில் சத்துணவு வழங்கப்படாமல் இருப்பதால் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு இருப்பதாக உணர்வோர் 38%.

படிப்பறிவு உள்ள பெற்றோர்களில் தங்கள் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்போர் 47%.

தாய், தந்தை இருவரும் வேலைக்குச் செல்லும் சூழ்நிலையில் பள்ளி செல்லாவிட்டால் தங்கள் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கருதும் பெற்றோர்கள் 45%.

ஆன்லைன் வகுப்புகளில் பங்கு பெற்ற மாணவர்கள் விகிதம் 49%.

ஆன்லைன் வகுப்புகளுக்கு 60% மாணவர்கள் செல்போன் மூலம் மட்டுமே பங்கேற்க முடிகிறது.

கல்வித் தொலைக்காட்சியை மட்டுமே பார்ப்போர் 41%.

கல்வித் தொலைக்காட்சியில் நடத்தும் பாடங்கள் புரிகிறது என்று கூறியவர்கள் 44%.

இணைய வழியில் கற்க முயற்சி செய்தும் தொடர் இணைப்பு கிடைக்காமல் பாதிக்கப்படுவோர் 54%.

65% மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களை கடந்த ஓராண்டில் சந்தித்துள்ளனர். 75% மாணவர்கள் பாடப் பொருள் சார்ந்தும், விலையில்லாப் பொருட்களுக்காகவும் தங்கள் ஆசிரியர்களைச் சந்தித்ததாக 52% மாணவர்கள் கூறியுள்ளனர்.

10% மாணவர்கள் விலையில்லாப் பொருட்களை வாங்க இயலவில்லை. காரணம் வெளியூர் சென்றதும் தகவல் கிடைக்கப் பெறாமையும் ஆகும்.

அரசு வழங்கியுள்ள பாடப் புத்தகங்களை 69 % மாணவர்கள் படித்துப் பார்த்துள்ளனர்.

இன்றைய பெற்றோர்கள் 11% மட்டுமே எழுத்தறிவு அற்றவர்கள்.

64% பெற்றோர்கள் கூலி வேலை செய்பவர்கள்.

பெருவாரியான பெற்றோர்களுக்கு வாரத்தின் எல்லா நாட்களிலும் வேலை கிடைக்கிறது.

வாரத்தின் 7 நாட்களும் வேலை செய்யும் ஆண்கள் 18%. பெண்கள் 8%.

பெருவாரியான ஆண்கள் மற்றும் பெண்கள் மாதம் ஒன்றுக்கு 5000 ரூபாய்க்கும் கீழே வருவாய் ஈட்டுகின்றனர்.‌

வருவாய் பற்றிய தகவல் தர விரும்பாதோர் 56%.

பெருந்தொற்றால் பள்ளி செல்ல இயலாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது என்று 82% மாணவர்கள் கூறுகின்றனர்.

பள்ளி திறந்ததும் செல்லத் தயாராக உள்ள மாணவர்கள் 95%.

பள்ளி செல்ல விரும்பாத மாணவர்கள் 5%.

பள்ளிகள் திறக்கப்படும்போது பள்ளி செல்லத் தடைகள் இருப்பதாகத் தெரிவிக்கும் மாணவர்கள் 12%. அதில் கரோனா அச்சம் பெரும்பங்கு வகிக்கிறது. அடுத்து வீட்டின் பொருளாதார நிலை.

பள்ளியே மகிழ்ச்சி தரும் இடமாக இருக்கிறது என்று 77% மாணவர்கள் கூறியுள்ளனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படும்போது, குறைந்த பாடங்களே இருக்க வேண்டும் என 41% மாணவர்கள்.

விளையாட்டுகள் அதிகம் இடம் பெற வேண்டும் என 28% மாணவர்கள்.

கொஞ்சம் நாட்கள் பாடம் இல்லாத வகுப்புகள் என 14% மாணவர்கள்.

கரோனா பாதிப்புக்குத் தக்க பாதுகாப்பு வசதிகள் வேண்டும் என்று 26% மாணவர்கள்.

இணைப்பு வகுப்பு பயிற்சிகள் வேண்டும் என 12% மாணவர்கள்.

மகிழ்ச்சியான போதனை முறைமைகள் வேண்டும் என்று 26% மாணவர்கள்.

இந்த எல்லாம் சேர்ந்து இருக்க வேண்டும் என 39%.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்கள் 5%.

கோவிட் தொற்று பாதிப்பில் இறப்பு ஏற்பட்ட குடும்பங்கள் 1.1%.

கோவிட் 19 பெருந்தொற்று பள்ளிக் கல்வியில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய நேரடிக் கள ஆய்வு முடிவுகள் அடிப்படையில் தமிழ்நாடு அரசுக்கு முன்வைக்கும் கோரிக்கைகள் :-

1.கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் பள்ளி மேல் வகுப்பிற்குச் செல்லாமல் 10% மாணவர்கள் விடுபட்டுள்ளனர். தற்போதைய நிலையில் இதனைப் பள்ளி இடை விலகல் என்றே கருத இடமுள்ளது.

2. அதேபோல், 14 வயதுக்குக் கீழே குழந்தைத் தொழிலாளியாக மாறிவிட்ட மாணவர்கள் எண்ணிக்கை 13 %.

3. பள்ளிகள் திறக்கப்படும்போது பள்ளி செல்லத் தடையேதும் உள்ளதா என்ற கேள்விக்கும் ஆம் இருக்கிறது என்று 12% மாணவர்கள் பதிலளித்துள்ளனர். குழந்தைத் தொழிலாளியாக இருக்கும் மாணவர்கள், தற்காலிக இடைநிறுத்தம் ஆன மாணவர்கள், மீண்டும் பள்ளி செல்வதில் பிரச்சினை இருக்கிறது என்று கூறும் மாணவர்கள் ஆகிய அனைவரையும், பள்ளிகள் திறக்கப்படும்போது, பள்ளியில் சேர்ந்து விட்டார்களா? என்பதை உத்தரவாதம் ஏற்படத் தக்க உத்திகளை அரசு வகுக்க வேண்டும்.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலை அல்லது ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாறிச் செல்ல வேண்டும் என்பது கூட அறியாமல் பள்ளி இட விலகல் உள்ளனர். 14 வயதுக்குக் கீழே உள்ளவர்களேனும் வயதுக்கு ஏற்ற வகுப்பில் இணைக்கப்பட்ட வேண்டும்.

4. எங்கள் கள ஆய்வு முடிவுகளின் படி, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 5% அதிகரித்துள்ளது. அதேசமயம், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 7% மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது. தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு வந்துள்ள மாணவர்கள், மீண்டும் தனியார் பள்ளிகளுக்குத் திரும்பாத வண்ணம், பள்ளிக் கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் மாணவர் விகிதம், தரமான கல்விக்கான கற்றல், கற்பித்தல் முறைகள் ஆகியவற்றில் பள்ளிச் செயல்பாடுகளை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்போதுதான், தற்போது நம்பிக்கையோடு பள்ளியில் சேர்ந்துள்ள குழந்தைகள் மற்றும் புதிதாக அரசுப் பள்ளிகளுக்கு வருவோருக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும். எனவே, அரசு இது விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

5. ஆன்லைன் வகுப்புகளில் 49% மாணவர்கள் மட்டுமே பங்கு பெறுகிறார்கள். அதுவும் கூட எப்போதாவது பங்கேற்பவர்களையும் உள்ளடக்கியதே. கல்வித் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகள் 41%. அதிலும் 44% மாணவர்களுக்கு அது புரியவில்லை.

எனவே, இணையவழிக் கல்வி, கல்வித் தொலைக்காட்சி கல்வி ஆகியவை எல்லா மாணவர்களுக்கும் சென்று சேரும் வகையில் இதனை அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும்.

6. பள்ளியில், முட்டையோடு தொடர்ச்சியாக சத்துணவு சாப்பிட்டு வந்த குழந்தைகளின் பெற்றோரில் 38 %, சத்துணவு சாப்பிடாமையால் தங்கள் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைந்து இருக்கலாம் என்ற கருத்தை ஒப்புக் கொள்கின்றனர்.

கற்றல் கற்பித்தல் நடைபெறாவிட்டாலும், முட்டையோடு கூடிய சமைத்த சத்துணவு குழந்தைகளுக்குச் சென்று சேர்வதை அரசு உத்தரவாதம் செய்ய வேண்டும். இதனை ஆங்காங்கே இருக்கும் அங்கன்வாடி மையங்கள் மூலம் கூட அரசு நடைமுறைப்படுத்தத் திட்டமிடலாம்.

7. மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் காலகட்டத்தில், தொடக்க நிலையில் குறைந்த அளவிலான பாடங்கள், விளையாட்டு வழிச் செயல்பாடுகள், திட்டமிட்ட பாடங்கள் இல்லாத வகுப்புகள், பாதுகாப்பான வகுப்பறைகள், இணைப்பு வகுப்புகள் இப்படிப் பல ஆலோசனைகளை மாணவர்கள் கூறியுள்ளனர். இதனைப் பள்ளிக் கல்வித்துறை கல்வியாளர்கள் கல்விச் செயற்பாட்டாளர்களை அழைத்துப் பேசி ஒரு புதிய வடிவத்தை முடிவு செய்யலாம்.

8. கரோனா தொற்று காரணமாக 1.1 % மாணவர்கள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர். அரசு கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் குடும்பங்களுக்குக் கொடுக்கும் நிவாரணத்தோடு, இந்தக் குழந்தைகள் படிப்பை முடிக்கும்வரை ஒரு சிறப்பு கல்வித் உதவித்தொகை மூலம் படித்து முன்னேற்றம் அடைய அரசு உதவி செய்ய வேண்டும்.

9. கோவிட்-19 பெருந்தொற்று முதல் அலை தொடங்கி தற்போது வரை பாதிக்கப்படாத கிராமங்கள் ஏராளமாக இருக்கின்றன. அங்கு செயல்படும் பள்ளிகள் இருக்கின்றன. எனவே, பள்ளித் திறப்பை மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான அளவீட்டை கைக்கொள்ளாமல், மாவட்டம், வட்டாரம் என பகுப்பாய்வு செய்து அதன் அடிப்படையில் பகு பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்ற ஆலோசனையை அரசுக்கு முன்வைக்கிறோம். மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதலும் இதில் முக்கியம் என்பதையும் உணர்ந்து இருக்கிறோம்.

10. பள்ளி ஆசிரியர்களுக்கு கரோனா தடுப்பூசியில் முன்னுரிமை அளிப்பது பள்ளித் திறப்பு மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு உறுதுணையாக அமையும் என்பதையும் அரசுக்கு வேண்டுகோளாக முன்வைக்கிறோம்”.

இவ்வாறு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x