Published : 22 Feb 2016 07:56 AM
Last Updated : 22 Feb 2016 07:56 AM

கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி அமைந்தே தீரும்: உறுதி முழக்கப் பேரணியில் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

தமிழகத்தில் கருணாநிதி தலைமை யில் திமுக ஆட்சி அமைந்தே தீரும் என்று காஞ்சிபுரத்தில் நடந்த உறுதி முழக்கப் பேரணி பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் உறுதி தெரிவித்தார்.

நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்ட ஸ்டாலின் அதைச் சில தினங்களுக்கு முன்பு நிறைவு செய்தார். இதன் நிறைவு நிகழ்ச்சியாகக் காஞ்சிபுரம் அடுத்த ஆப்பூரில் உறுதி முழக்கப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் சிறப்புரையாற்றிய அவர் மேலும் பேசியதாவது:

அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு துயரத்தில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களை மீட்கும் யாழ் இசையாகத் திமுக இன்றைக்கும் உள்ளது. திமுக மக்கள் இயக்கம் என்பது இங்குக் கூடியிருக்கும் மக்கள் சமுத்திரமே சாட்சியாகும். தொண்டை மண்டல மண்ணில் இப்படி ஒரு பிரம்மாண்டமான பேரணியில் பங்கேற்பது பெருமையாகவுள்ளது. பல்லவர் கள், சோழர்கள், கிருஷ்ண தேவராயர் ஆட்சி செய்த மண்ணில் குறிப்பாக அண்ணா பிறந்த மண்ணில் பேசுவது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

உறுதி முழக்கப் பேரணியில் நான் மட்டுமல்ல நீங்களும் உறுதியெடுக்கத்தான் இங்கு வந்துள்ளீர்கள். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நமக்கு நாமே பயணத்தை மேற்கொண்டு 11 ஆயிரத்து 100 கி.மீ. சென்று 4 லட்சத்து 5 ஆயிரம் மனுக்களைப் பெற்றிருக்கிறேன். இதையடுத்துத் தான் நான் இன்று உங்கள் முன் நிற்கிறேன். மாற்றுக்கட்சியினர் வெளிப்படையாக பாராட்டாவிட் டாலும், உள்ளத்தால் பாராட்டு கிறார்கள்.

இன்னும் சில மாதங்களே முதல்வராக இருக்கப் போகிற முதல்வர் ஜெயலலிதாவையே பீதியடைய வைத்துள்ளது. மாற்றம் நிச்சயம் ஏற்படப் போகிறது என்பதைத் தெளிவாக உணர்ந்திருக்கிறோம். விவசாயி கள், நெசவாளர்கள், அரசு ஊழியர்கள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பு மக்களையும் நான் சந்தித்திருக்கிறேன். இந்த ஆட்சியின் கொடுமைகளையும், பாதகங்களையும் சொல்லப் பல வருடங்கள் ஆகும்.

ஏன் தமிழகத்துக்கு இப்படி யொரு நிலை. தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பில் உயரத்தில் இருந்த தமிழகத்தில் கொலை கொள்ளைக்குப் பேர்போனதாக மாறிவிட்டது. இந்த 5 ஆண்டு அதிமுக ஆட்சி தான் இதற்கெல் லாம் காரணம். தமிழக மக்களை ஜெயலலிதா முழுமையாக வஞ்சித்துவிட்டார். பல்வேறு கொடுமைகளில் சிக்கித் தமிழகம் தவிக்கிறது.

சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர் மாவட்டங்கள் அண்மையில் பெய்த மழையால் பாதிக்கப்பட்டன. இந்த ஆட்சியின் அலட்சியத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. எனவே, அது செயற்கை பேரிடர். ஆனால், பெயருக்கு ஹெலிகாப்டரில் பயணித்தார் முதல்வர்.

முதல்வன் படத்தில் அர்ஜுன் ஒரு நாள் முதல்வராக நடித்திருப்பார். அதைப் போலத்தான், இன்றைக்கு ஜெயலலிதா அரை நாள் முதல்வராகச் செயல்பட்டு வருகிறார். ஜெயலலிதாவுக்கு 68-வது பிறந்த நாள் வரப்போகிறது. எனவே, அவருக்கு நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், அவரது பிறந்த நாளையொட்டி அரசு செலவில் 68 லட்சம் மரக்கன்றுகளை ஏன் நட வேண்டும்.

வெள்ள நிவாரணப் பொருட் களில் முதல்வரின் ஸ்டிக்கரை ஒட்டினார்கள். சொத்துக்குவிப்பு வழக்கு என்னும் கத்தி தலைக்கு மேல் தொங்குவதால், தன்னுடைய நலனுக்காகத் தமிழகத்தை ஜெயலலிதா அடகு வைத்துள்ளார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகள் இல்லை என்றார் முதல்வர். தன்மேல் உள்ள வழக்குக்காகக் கூட்டணி அமைக்கலாமா என்று பொதுக் குழுவில் பேசுகிற நிலைக்கு வந்துவிட்டார்.

நீதி விசாரணை

செம்பரம்பாக்கம் ஏரியை முறையின்றித் திறந்துவிட்டனர். இதனால், எவ்வளவு பேர் இறந்தனர், எப்படி பேரழிவு ஏற்பட்டது. இது தொடர்பாக நீதி விசாரணை வைக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் வலியுறுத்தினர். ஆனால், இதுவரை ஆளுங்கட்சியினர் எந்தப் பதிலையும் சொல்லவில்லை. இந்த முறை கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி அமையத்தான் போகிறது. அப்போது, செம்பரம் பாக்கம் ஏரி திறப்பு குறித்து நீதி விசாரணை நடத்திக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தக்க தண்டனை வழங்குவோம்.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் கொண்டு வந்தது திமுக ஆட்சி. ஆனால், அதனைத் தற்போதைய ஆட்சியினர் முடக்கியுள்ளனர். அதிமுக தேர்தல் அறிக்கையில் 53 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஆனால், 50 வாக்குறுதிகள் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.

சட்டப்பேரவையில் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பேசவே 110 விதி உள்ளது. ஆனால், முதல்வர் ஜெயலலிதா கடந்த 5 ஆண்டுகளில் 110 விதியின் கீழ் 600-க்கும் அதிகமான அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், 550 அறிவிப்புகள் கானல் நீராகவே உள்ளன.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு 20 லிட்டர் குடிநீர் இலவசமாக வழங்கப்படும் என்று வாக்குறுதி தந்தார்கள். ஆனால், அந்தத் திட்டம் சென்னைக்கு மட்டும் தேர்தல் நேரத்தில் இப்போது செயல்படுத்துவோம் என்கிறார்கள். அதுவும் வெத்து வெட்டு அறிவிப்பு தான்.

இப்படி அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற முடியாத ஆட்சி தான் அதிமுக ஆட்சி. 21 ஆயிரத்து 140 மெகாவாட் தயாரிப்பேன் என்று முதல்வர் கூறினார். ஆனால், இன்றைக்கு 1 மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தியாகவில்லை. உங்களை எல்லாம் சாட்சியாக வைத்துக் கொண்டு சொல்கிறேன், 1 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் கூறினால், நான் மன்னிப்பு கேட்கத் தயாராகவுள்ளேன்.

காவல்துறைக்கு 31 ஆயிரம் வீடுகள் வழங்கப்படும் என்று ஜெயலலிதா கூறினார். அதுவும் செயல்படுத்தப்படவில்லை. உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 2.42 லட்சம் கோடிக்கு முதலீடு வந்தது என்றார். 24 என்பது அவரது பிறந்த தேதி 2 என்பது அவர் பிறந்த மாதம், அதைத்தான் அவர்கள், 2.42 லட்சம் கோடி முதலீடு வந்தது என்றார்கள். அதுவும் ஆட்சி முடியப் போகிற நேரத்தில்தான் அந்த மாநாட்டை நடத்தினார்கள். 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டதாகச் சொன்னார்கள். அது தொடர்பான வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யச் சொன்னோம். இதுவரை அப்படிச் செய்யவில்லை.

சவால்

இந்த மேடையிலிருந்து நான் சவாலாக ஒரு கேள்வி கேட்கிறேன். எத்தனை நிறுவனங்கள் தமிழகத் தில் தொழில் தொடங்கியுள்ளன, எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்று விவாதிக் கலாமா? நீங்கள் மேடை போடுங்கள் நான் வந்து பேசுகிறேன். தேர்தல் அறிக்கையில், 110 விதியில் என நீங்கள் வெளியிட்ட அறிவிப்புகள் பற்றி விவாதிக்க நான் தயார், நீங்கள் தயாரா?

கர்நாடக முதல்வர் சித்தராமையா, மத்தியப் பிரதேச முதல்வர் சவுகன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஹரியாணா முதல்வர் கட்டார் எனப் பலர் நம் மாநிலத்துக்கு வந்து தொழில் தொடங்க அழைப்பு விடுத்தனர். நமது முதல்வர் எந்த மாநிலத்துக்காவது சென்று தொழில் தொடங்க அழைப்பு விடுத்தது உண்டா என்றால், இல்லை. இந்தியாவிலேயே தேர்தல் நேரம் தவிர மற்ற நேரங்களில் மக்களைச் சந்திக்காத ஒரு தலைவர் உண்டென்றால் அது ஜெயலலிதா மட்டும்தான். சொந்தத் தொகுதி மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது காரை விட்டு இறங்காமல், வாக்காளப் பெருமக்களே என்று பேசியவர் தான் நமது முதல்வர்.

நெம்மேலியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் 16.4.2013 அன்று அறிவித்தார். தரமணி முதல் மாமல்லபுரம் வரை 45 கிமீ உயர்மட்டச் சாலை அமைப்போம் என்று 1.4.13 அன்று அறிவித்தார். சிறுசேரியில் 2 ஆயிரம் வாகனங்கள், 50 பேருந்து நிறுத்த பல்லடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படும் என்று 1.4.13 அறிவித்தார். 23.2.13 அன்று விஷன் 2023, திட்டம் அறிவித்தார்.

திமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சி பற்றி ஒரு பன்னாட்டு நிறுவனம் சர்வே ஒன்றை வெளியிட்டது. உட்கட்டமைப்பு, அரசு நிர்வாக அமைப்பு ரீதியில் அந்நிய முதலீட்டுக்கு ஏற்ற மாநிலம் தமிழகம்தான் என்று கூறியது. ஆனால், இப்போது அதிமுக ஆட்சியில் உலகப் பொருளாதார மையம், ஒரு சர்வே நடத்தியது. தமிழகம் தொழில் தொடங்கச் சரியான இடம் இல்லை என்று கூறியுள்ளது.

வேளாண் அதிகாரி, முத்துக் குமாரசாமி, பெண் போலீஸ் அதிகாரி விஷ்ணுபிரியா, போலீஸ் அதிகாரி ஹரீஷ் எனப் பலர் மாண்டனர். இதன் பின்னணி யாரென்று திமுக ஆட்சியில் நிச்சயம் கண்டுபிடிப்போம். அது வெளிவரத்தான் போகிறது. செம் பரம்பாக்கம் பிரச்சினை, ஊழலுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டும்.

என்னைப் பார்த்துத் திமுக என்ன செய்தது என்று கேட்க லாம். ‘தமிழகத்துக்கு 33 ஆயிரம் கோடி 4 வழி, 6 வழி பாதைகளை, மேம்பாலங்களைக் கொண்டு வந்தது திமுக ஆட்சி. சென்னை, தூத்துக்குடி, எண்ணூர் துறை முகங்களில் ரூ.23 ஆயிரம் கோடி யில் விரிவாக்கப்பட்டது திமுக ஆட்சியில் தான். சேலத்தில் உருக் காலை, நோக்கியா நிறுவனம், ரூ.1400 கோடி மதிப்பீட்டில் வாகனச் சோதனை மையம், தேசியக் கடல் சார் பல்கலைக்கழகம், மெட்ரோ ரயில் திட்டம் எனப் பல திட்டங் களைக் கொண்டு வந்தது திமுக ஆட்சிதான் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x