Published : 21 Jul 2021 03:17 AM
Last Updated : 21 Jul 2021 03:17 AM

வந்தவாசி அருகே ஏரி கல்வெட்டு கண்டெடுப்பு

பாறையில் உள்ள ஏரி கல்வெட்டு.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டம் வந்தவாசி அடுத்தராமசமுத்திரம் கிராமத்தில் உள்ள பாறையில் எழுதப்பட்டிருந்த ‘7 வரிகள்’ கொண்ட கல்வெட்டு இருப்பதைஆசிரியர்கள் ஜெயவேல், பாரதிராஜா ஆகியோர் கண்டறிந்துள்ளனர்.

பின்னர், அந்த கல்வெட்டை அரியலூர் அரசு கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வரும், தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் தியாகராஜன் ஆய்வு செய்து கூறியதாவது, ‘‘மதிரை கொண்ட பரகேசரி பரகேரிவர்மன் என்ற பட்டம் கொண்ட முதலாம் பராந்தக சோழர் கி.பி.907 முதல் 958 வரை ஆட்சி செய்தார். அவருடைய 35-வது ஆட்சியாண்டில் கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. அதன்படி, இது கி.பி.942 காலமாகும். 1078 ஆண்டுகளுக்கு முன்பு, சாத்தனூர் ஏரி பராமரிப்புக்காக காடிவாய் நாழி நெல் கொட்டப்பட்டதாக கல்வெட்டு வாசகங்கள் கூறுகின்றன.

ராமசமுத்திரம் கிராமத்தின் பழைய பெயராக சாத்தனூர் இருக்கலாம். சமுத்திரம் என்ற சொல், பெரிய ஏரியைகுறிக்கும் சொல்லாக விஜயநகர காலத்தில் மிகுந்த அளவில் பயன்பாட்டில் இருந்துள்ளது. காடி என்ற சொல் தானிய மூட்டை அளவில் களம் என்ற அளவுக்கு இணையாக, தொண்டை நாட்டில் புழக்கத்தில் இருந்தது. ஒரு களம் நெல் விளைந்தால், ஒரு நாழி நெல் வீதம் ஏரி பராமரிப்புக்கு வரியாக கொடுக்க வேண்டும் என்பதுதான் கல்வெட்டு வாசகத்தின் பொருளாகும். நாழி நெல் வீதம் ஒதுக்கி ஆணையிட்டவர் வைதும்ப பாடி பகுதியை ஆட்சி செய்த சிற்றரசர் குமரன் என்பரவராவார்.

இந்த தர்மத்தை ரட்சித்தவர்களின் திருப்பாதம் என் தலைமேல் என்று, இத்தர்மத்தை இறக்குபவர்கள் கங்கையிடை, குமரியிடை, எழுநூற்று காதம் இடையே செய்வர்கள் பாவத்தில் போக கடவர்கள் என எழுதப்பட்டுள் ளது’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x