Last Updated : 10 Feb, 2016 08:18 AM

 

Published : 10 Feb 2016 08:18 AM
Last Updated : 10 Feb 2016 08:18 AM

சாரங்கபாணி கோயில் தீர்த்தவாரி மண்டபத்தில் பழமை மாறாமல் ஓவியங்கள் புதுப்பிப்பு

மகாமகத்தை முன்னிட்டு பழமை மாறாமலும், அதே நேரத்தில் சுற்றுச்சூழல் கெடாத வகையிலும் காவிரி ஆற்றின் கரையில் சாரங்கபாணி கோயில் தீர்த்தவாரி மண்டபத்தில் பழங்கால ஓவியங் கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

மகாமக திருவிழாவின்போது, வைணவத் தலங்களான சக்கரபாணி, சாரங்கபாணி, ராஜகோபால சுவாமி, ராம சுவாமி, ஆதிவராக பெருமாள் ஆகிய கோயில்களில் உள்ள உற்சவ பெருமாள் தாயாருடன் கும்ப கோணம் காவிரி ஆற்றில் சக்கர படித்துறையில் எழுந்தருள்வது வழக்கம்.

இப்படித்துறையில் 1930-ம் ஆண்டு உபயதாரர்களால் தீர்த்த வாரி மண்டபம் கருங்கல்லால் கட்டப்பட்டது. இந்த மண்டபத்தில் உள்ள சுவர்களில் தீர்த்தவாரிக்கு வரும் 5 கோயில்களின் சுவாமிகளின் உருவங்கள் ஓவியமாகத் தீட்டப்பட்டன. ஆண்டுதோறும் நடைபெறும் மாசிமகத்தின்போதும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத்தின்போதும் தாயாருடன் 5 கோயில் பெருமாள் இந்த மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பது வழக்கம்.

அப்போது பெருமாளின் பிரதிநிதியான தீர்த்தபேரர் காவிரியில் நீராடிய பின்னர் லட்சக்கணக்கான பக்தர்கள் நீராடுவார்கள்.

இந்தாண்டு நடைபெறும் மகாமகத்தையொட்டி கும்ப கோணத்தில் காவிரி ஆற்றின் கரையில் சாரங்கபாணி தீர்த்தவாரி மண்டபம் ரூ.3.5 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு, முதன் முறையாக மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, தீர்த்தவாரி மண்டபத்தில் வரையப்பட்டிருந்த ஓவியங்கள் நிறம் மங்கியிருந் ததால், அதை மீண்டும் பழமை மாறாமலும், அதே நேரத்தில் சுற்றுச்சூழல் கெடாத வகையிலும் புதிதாக பஞ்சவர்ணம் கொண்டு தத்ரூபமாக தீட்டப்பட் டுள்ளன.

மேலும், பொதுப்பணித் துறை சார்பில் ரூ.7.5 லட்சம் மதிப்பீட்டில் காவிரிப் படித்துறைகள் சுத்தம் செய்யப்பட்டு, பக்தர்கள் எளிதில் ஏறி இறங்கும் வகையில் கைப்பிடிகளும் அமைக்கப்பட்டுள்ளது. அப் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு தீர்த்தவாரிக்கு தயார் நிலையில் படித்துறை உள்ளது.

‘பக்தர்களுக்கு இடையூறின்றி பாதுகாப்பு’

பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற வழிகாட்டும் நெறிமுறைக் கூட்டம் கும்பகோணத்தில் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய மண்டல ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன் பேசியபோது, “25 மாவட்ட எஸ்.பி.க்கள் தலைமையில் சுமார் 25 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். போலீஸாரின் பணிகள் அனைத்தும் மக்களின் உதவிக்காக மட்டுமே இருக்க வேண்டும். காவல் துறையினர் மனித நேயத்துடனும், மக்களுக்கு உதவும் வகையிலும் செயல்பட வேண்டும். குறிப்பாக பக்தர்களுக்கு இடையூறு இல்லாமலும், அதிருப்தி மற்றும் புகார் இல்லாத வகையிலும் நடந்துகொள்ள வேண்டும்” என்றார்.

கூட்டத்தில், ஆயுதப்படை ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், அமலாக்கப் பிரிவு ஐ.ஜி.அபய்குமார்சிங், தஞ்சை சரக டி.ஐ.ஜி. செந்தில்குமார், தஞ்சை எஸ்.பி. மயில்வாகணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திருப்பணியில் முதலும், கடைசியும்

மகாமகத்தையொட்டி, கும்பகோணம் மற்றும் சுற்றுவட் டாரத்தில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 69 கோயில்களில் ரூ.12 கோடியில் திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்று வருகிறது. இதில், முதன்முதலாக மகாமகம் தொடர்புடைய ராஜகோபால சுவாமி கோயிலில் 19.6.2014-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருப்பணியின் இறுதியாக மகாமகக் குளம் அருகே உள்ள வீரசைவ மடத்துக்குச் சொந்தமான வீரபத்திர சுவாமி கோயிலில் வரும் 12-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

மகாமக குளத்தில் ஆட்சியர் ஆய்வு

மகாமகக் குளத்தில் சோதனை அடிப்படையில் தண்ணீர் விடப்பட்டு வரும் நிலையில், கும்பகோணத்துக்கு நேற்று வந்த ஆட்சியர் என்.சுப்பையன், மகாமக குளத்தில் நேற்று ஆய்வு செய்தார்.

கிழக்கு கரையிலிருந்து மகாமகக் குளத்தில் இறங்கிய அவர், குளத்தில் உள்ள 20 கிணறுகள் வழியாகச் சென்று பக்தர்கள் செல்வதற்கான மேற்கு கரை வரை பார்வையிட்டார்.

அப்போது, சோதனை அடிப்படையில் விடப்படும் தண்ணீரில் குளோரினேசன் செய்யப்படுவது குறித்து ஆய்வு செய்தார். மேலும், 2 கேன்களில் தண்ணீரின் மாதிரியை எடுத்துச் சென்று பரிசோதனைக் கூடத்தில் வைத்து ஆய்வு செய்யுமாறு அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

பிப்.13-ல் நீராடும் ஆதீனகர்த்தர்கள்

மகாமகப் பெருவிழாவின் தொடக்க நாளாக கருதப்படும் கொடியேற்றத்தன்று (பிப்ரவரி 13) ஆதிகும் பேஸ்வரர் கோயிலில் நடைபெறும் கொடியேற்ற விழாவுக்குப் பின்னர், மகாமகக் குளத்தில் நீராடும் நிகழ்வு தொடங்குகிறது.

இதில் தருமபுரம் ஆதீனகர்த்தர் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார், திருப்பனந்தாள் காசி மடம் அதிபர் காசிவாசி முத்துக்குமாரசுவாமி தம்பிரான் உள்ளிட்ட பல்வேறு மடங்களைச் சேர்ந்த மடாதிபதிகள், துறவிகள் மகாமகக் குளத்தில் புனித நீராடவுள்ளனர்.

4 ஹெலிகாப்டர் தளங்கள் தயார்

கும்பகோணம் அரசு ஆடவர் கலைக் கல்லூரி மைதானத்தில் 4 ஹெலிகாப்டர் தளங்கள் உள்ளன. மகாமகப் பெருவிழாவையொட்டி முக்கிய சிறப்பு விருந்தினர்கள், தொழிலதிபர்கள் ஹெலிகாப்டர் மூலம் வருகை தரலாம் எனக் கருதி, மாவட்ட நிர்வாகத்தினர் ஹெலிகாப்டர் இறங்கும் தளங்களை தயார் நிலையில் வைத்துள்ளனர்.

சிறப்பு ரயில்கள் இயக்கம்

மகாமகத்தையொட்டி கும்பகோணம் வழித்தடத்தில் பிப்ரவரி 13 மற்றும் 14, 15, 16 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

* வண்டி எண் 07682: திருச்சி- மயிலாடுதுறை சிறப்பு எக்ஸ்பிரஸ் பிப்ரவரி 13-ம் தேதி திருச்சியில் இருந்து காலை 5.15 மணிக்குப் புறப்பட்டு, 8.10-க்கு மயிலாடுதுறையைச் சென்றடையும். இந்த ரயில் திருவெறும்பூர், பூதலூர், தஞ்சாவூர், திட்டை, பண்டாரவாடை, பாபநாசம், சுந்தரப்பெருமாள் கோவில், கும்பகோணம், ஆடுதுறை, குத்தாலம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

* வண்டி எண் 07685: மயிலாடுதுறை- தஞ்சாவூர் எக்ஸ்பிரஸ் ரயில் பிப்ரவரி 13-ம் தேதி காலை 9.15 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டு, 11 மணிக்கு தஞ்சாவூரைச் சென்றடையும். இந்த ரயில் மயிலம், குத்தாலம், நரசிங்கப்பேட்டை, ஆடுதுறை, திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், கும்பகோணம், தாராசுரம், சுவாமிமலை, சுந்தரப்பெருமாள் கோவில், பாபநாசம், பண்டாரவாடை, திட்டை ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

* வண்டி எண் 07686: தஞ்சாவூர்- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் பிப்ரவரி 13-ம் தேதி தஞ்சாவூரில் இருந்து பிற்பகல் 12.35 மணிக்குப் புறப்பட்டு, 2.45 மணிக்கு மயிலாடுதுறையைச் சென்றடையும்.

* வண்டி எண் 07691: மயிலாடுதுறை- தஞ்சாவூர் எக்ஸ்பிரஸ், பிப்ரவரி 13-ம் தேதி மயிலாடுதுறையில் இருந்து மாலை 4.25 மணிக்குப் புறப்பட்டு, 6.45 மணிக்கு தஞ்சாவூரைச் சென்றடையும்.

இந்த ரயில்கள் தஞ்சாவூர்- மயிலாடுதுறை இடையேயுள்ள அனைத்து நிலையங்களிலும் நின்று செல்லும்.

* வண்டி எண் 07684: தஞ்சாவூர்- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ், பிப்ரவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் தஞ்சாவூரில் இருந்து காலை 9.40 மணிக்குப் புறப்பட்டு முற்பகல் 11.25 மணிக்கு மயிலாடுதுறையைச் சென்றடையும்.

* வண்டி எண் 07685: மயிலாடுதுறை- தஞ்சாவூர் எக்ஸ்பிரஸ், பிப்ரவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறையில் இருந்து காலை 9.35 மணிக்குப் புறப்பட்டு, முற்பகல் 11.50 மணிக்கு தஞ்சாவூரைச் சென்றடையும்.

* வண்டி எண் 07688: தஞ்சாவூர்- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ், பிப்ரவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் தஞ்சாவூரில் இருந்து பிற்பகல் 2.15 மணிக்குப் புறப்பட்டு, மாலை 4.20 மணிக்கு மயிலாடுதுறையைச் சென்றடையும்.

* வண்டி எண் 07689: மயிலாடுதுறை- தஞ்சாவூர் எக்ஸ்பிரஸ், பிப்ரவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் தஞ்சாவூரில் இருந்து பிற்பகல் 3.35 மணிக்குப் புறப்பட்டு, மாலை 5.25 மணிக்கு தஞ்சாவூரைச் சென்றடையும்.

இந்த 4 ரயில்களும் தஞ்சாவூர்- மயிலாடுதுறை இடையேயுள்ள அனைத்து நிலையங்களிலும் நின்று செல்லும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x