Last Updated : 20 Jul, 2021 03:14 AM

 

Published : 20 Jul 2021 03:14 AM
Last Updated : 20 Jul 2021 03:14 AM

கோவையில் கரோனாவால் பெற்றோரை இழந்த 160 குழந்தைகளில் முதல்கட்டமாக 35 குழந்தைகளுக்கு ரூ.1.15 கோடி நிவாரண நிதி ஒதுக்கீடு

கோவையில் கரோனாவால் பெற்றோரை இழந்த 160 குழந்தைகளில், முதல்கட்டமாக 35 குழந்தைகளுக்கு அரசு சார்பில் ரூ.1.15 கோடிநிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் கூறியதாவது: மாவட்டத்தில் கரோனாவால் பெற்றோர் இருவரையும் இழந்த 9 குழந்தைகள், பெற்றோரில் ஒருவரை இழந்த151 குழந்தைகள் என மொத்தம் 160 குழந்தைகளுக்கு நிவாரணம் கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பியிருந்தோம். அதில், இரு பெற்றோரையும் இழந்த 5 குழந்தைகள், தாய் அல்லது தந்தையை இழந்த 30 குழந்தைகள் என 35 பேருக்கு இதுவரை மொத்தம் ரூ.1.15 கோடி நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் உத்தரவுப்படி, கரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யப்படும். குழந்தைக்கு 18 வயது நிறைவடையும்போது, அந்தத் தொகை வட்டியுடன் வழங்கப்படும். பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த குழந்தையுடன் இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு ரூ.3 லட்சம் உடனடி நிவாரணம் வழங்கப்படும். பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம், பட்டப்படிப்பு வரை கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும்.

உதவிக்கு 1098-ல் அழைக்கலாம்

பெற்றோர் இருவரையும் இழந்து, உறவினர் அல்லது பாதுகாவலர் ஆதரவில் வளரும் குழந்தையின் பராமரிப்பு செலவாக மாதம் ரூ.3 ஆயிரம் உதவித் தொகை, குழந்தைக்கு 18 வயது நிறை வடையும் வரை வழங்கப்படும். கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை நாங்களே கண்டறிந்து அரசின் நிவாரணத்தொகை கிடைக்க வழிவகை செய்து வருகிறோம். இருப்பினும், இதுபோன்ற குழந்தைகள் தங்கள் பகுதியில் இருப்பது தெரியவந்தால், குழந்தை களுக்கான இலவச உதவி தொலைபேசி எண்ணான 1098-ல் தொடர்பு கொண்டு பெயர், முகவரியை தெரிவித்தால் விசாரணை நடத்தி நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கோவை சிவானந்தா காலனியைசேர்ந்த சகோதரர்கள் விபின் ஜெயராஜ் (15), சாமுவேல் எபினேசர் (8) ஆகியோரின் பெற்றோர்தன்ராஜ், ஜெயந்தி மற்றும் ஜெயந்தியின்தாய் ஆகியோர் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்ததால், இரு குழந்தைகளுக்கும் உதவ வேண்டும் என தன்ராஜின் தாய் வேண்டுகோள் விடுத்திருந்த செய்தி ‘இந்துதமிழ் திசை’ நாளிதழில் கடந்த மே 30-ம் தேதி வெளியானது. அதைத்தொடர்ந்து, சிறுவர்களின்விவரம் குறித்து உறவினர்களிடம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் கேட்டறிந்தனர்.

இந்நிலையில், அந்த இருகுழந்தைகள் உட்பட 35 குழந்தைகளுக்கு நிவாரணத் தொகை ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x