Published : 20 Jul 2021 03:16 AM
Last Updated : 20 Jul 2021 03:16 AM

கே.வி.குப்பம் சந்தையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஒரு ஜோடி ஆடு ரூ.1.30 லட்சத்துக்கு விற்பனை

கே.வி.குப்பம் சந்தையில் ஆந்திராவில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்த நெல்லூர் ஒயிட் வகை கிடாக்கள். உள்படம்: ஆடு வியாபாரி சின்னப்பன். படங்கள்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் 100 ஆண்டுகள் பழமையான கே.வி.குப்பம் ஆட்டுக் கிடா சந்தைக்கு நேற்று அதிகாலை 3 மணியில் இருந்தே சித்தூர், பலமநேர் உள்ளிட்ட ஆந்திர மாநிலங்களில் இருந்தும் வேலூர் மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் விற்பனைக்காக ஆடுகளை கொண்டு வந்தனர்.

பொங்கல், தீபாவளி, பக்ரீத்பண்டிகைக் காலமாக இருந்தால் கிடாக்களின் விற்பனை 1 மணி நேரத்தில் 10 லட்சம் ரூபாயை கடந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை பக்ரீத் தினம் என்பதால் வழக்கம்போல், கே.வி.குப்பம் சந்தை நேற்று அதிகாலையில் இருந்தே கூட்டம் களை கட்டியது. பக்ரீத் பண்டிகைக்கு ஒரு நாள் மட்டுமே இருப்பதால் நேற்று விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட ஆடுகளின் எண்ணிக் கையும் அதிகமாக இருந்தது.

மாவட்டத்தில் அதிகமாக விற்பனையாகும் வெள்ளாடு, செம்மறி ஆடுகளுடன் அதிக எடைகொண்ட ‘நெல்லூர் ஒயிட்’ வகை ஆடுகள் பக்ரீத் பண்டிகைக்காகவே அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. இந்த வகை ஆடு ஒவ்வொன்றும் சுமார் 45 கிலோ எடை இருந்ததால், ஒரு ஜோடி நெல்லூர் ஒயிட் ஆட்டின் விலை சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் வரை பேரம் பேசப்பட்டது.

ஆந்திர மாநிலத்தில் இருந்து நெல்லூர் ஒயிட் ஆடுகளை விற்ப னைக்காக கொண்டு வந்திருந்த சின்னப்பன் என்பவர் கூறும்போது, ‘‘சித்தூர் மாவட்டம் செங்கரகொண்டா ஊரில் இருந்து வந்துள்ளேன். நெல்லூர் ஒயிட் வகையில் 70 ஆடுகளை வளர்த்து வருகிறேன். பெரும்பாலும் வீட்டுக்கே வந்து ஆடுகளை வாங்கிச் சென்று விட்டார்கள். 10 கிடாக்கள் மட்டும் விற்பனையாகாமல் இருந்தது.

ஆந்திராவில் கரோனாவால் சந்தை திறக்கவில்லை என்பதால் இங்கு வந்தோம்.

நாங்கள் எதிர்பார்த்த விலை கிடைக்காவிட்டாலும் கடைசியில் ரூ.1.20 லட்சத்துக்கு 2 ஜோடியையும், ரூ.1.10 லட்சத்துக்கு 2 ஜோடி, ரூ.50 ஆயிரத்துக்கு ஒரு ஜோடியை விற்றுவிட்டேன். என்னுடன் வந்த ஒருவர் நெல்லூர் ஒயிட் வகை ஆட்டு ஜோடியை ரூ.1.30 லட்சத்துக்கு விற்றார்’’ என்று தெரிவித்தார்.

பக்ரீத் பண்டிகையால் கே.வி.குப்பம் ஆட்டுக் கிடா சந்தையில் நேற்று மட்டும் சுமார் ரூ.50 லட்சத்துக்கு வியாபாரம் நடைபெற்றிருக்கும் என்று தரகர்கள் தரப்பில் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x