Published : 17 Jul 2021 03:14 AM
Last Updated : 17 Jul 2021 03:14 AM

போக்குவரத்து தொழிலாளர்களின் புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக விரைவில் பேசி தீர்வுகாண வேண்டும்: ஏஐடியுசி தொழிற்சங்கம் வலியுறுத்தல்

தமிழக போக்குவரத்து தொழிலாளர்களின் புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக விரைவில் பேசி தீர்வு காண வேண்டுமென ஏஐடியுசி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளன (ஏஐடியுசி) பொதுச்செயலாளர் ஆர்.ஆறுமுகம், போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

பொதுத்துறை பயணிகள் போக்குவரத்து கழகங்களை பாதுகாத்திட, போக்குவரத்து கழகங்களின் வரவு செலவு நிதிப்பற்றாக்குறையினை ஈடுகட்ட நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கிட வேண்டும். நிலுவையில் இருக்கும் ஊதிய ஒப்பந்தம் குறித்து விரைவில் பேசி தீர்வு காண வேண்டும்.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டம் முடிந்துவிட்டது. புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் தாய் தந்தையரையும் இணைத்து குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ வசதி ஏற்படுத்திட வேண்டும்.

ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு அரசு பணியாளர்களை போன்று மருத்துவ காப்பீடு வசதி ஏற்படுத்திட வேண்டும். விபத்து, எப்.சி., ஒழுங்கு நடவடிக்கை பழிவாங்குதல் அடிப்படையில் ஊர் மாற்றம், இடமாறுதல் என தொழிலாளர்களையும் அவர்களது குடும்பங்களையும் துன்புறுத்தும் வகையில் செய்துவரும் நடைமுறை கைவிடப்பட வேண்டும்.

கடந்த ஆட்சியின்போது தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக போராட்டத்தில் பங்குபெற்றவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் கைவிடப்பட வேண்டும். பணி ஒதுக்கீடு சீனியாரிட்டி சுழற்சி முறையில் அமைந்திட வேண்டும்.

கரோனாவால் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு, முன்கள பணியாளர்களைப் போல ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும். பெண்கள் இலவச பயணம் என்ற தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கக் கூடியது. அதற்கு ஈடுகட்டும் தொகையை போக்குவரத்து கழகங்களுக்கு உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும்.

நடத்துநர் இல்லா பேருந்துவால் வருமான இழப்பு ஏற்படுகிறது. எனவே, அந்த பேருந்து இயக்கத்தை தவிர்த்திட வேண்டும். உடல்நலம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மட்டுமே இலகுபணி அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x