Published : 17 Jul 2021 03:14 AM
Last Updated : 17 Jul 2021 03:14 AM

கரோனா தொற்று பரவல் குறைந்ததும் இந்திய - இலங்கை மீனவர்களிடையே விரைவில் பேச்சுவார்த்தை: அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தகவல்

கரோனா தொற்று பரவல் குறைந்ததும் இந்திய - இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே பொட்டிதட்டி கிராமத்தில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெ ற்றது. இம்முகாமை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். எம்எல்ஏக்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர், ராமேசுவரம் அருகே பாம்பன் குந்துகால் ஆழ்கடல் மீன்பிடி துறைமுகத்தை அமைச்சர் ஆய்வு செய்தார். அப்பகுதி மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து ராமேசுவரத்தில் நடந்த மீனவர்கள் சந்திப்புக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். ராமேசுவரத்தில் புதிய மீன்பிடி இறங்குதளம் அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பரமக்குடி மற்றும் ராமேசு வரத்தில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:

தற்போது மீனவர்களின் மோட்டார் பொருத்திய நாட்டு படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் 300 லிட்டர் டீசலை, 400 லிட்டராக உயர்த்தி வழங்கும் திட்டம் உள்ளது. பெரிய மற்றும் விசைப்படகுகளுக்கு தற்போது மானிய விலையில் வழங்கப்படும் 1,800 லிட்டர் டீசலும் உயர்த்தி வழங்கப்படும். இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் முறைப்படி அறிவிப்பார். மீனவர்களுக்காக பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் வெளியிட உள்ளார்.

பாம்பன் குந்துகால் துறை முகத்தை தமிழகத்திலேயே முதன் மையான மீன்பிடித் துறைமுகமாக மாற்ற ரூ.200 கோடி ஒதுக்கப்பட உள்ளது. மத்திய அரசால் கொண்டு வரப்பட உள்ள புதிய மீன்பிடி மசோதாவால் தமிழக மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், மீனவர் உரிமை காக்க ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார்.

இந்திய - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தைக் கூட்டம் நீண்ட காலமாக நடைபெறாமல் கிடப்பில் உள்ளது. கரோனா தொற்று பரவல் குறைந்ததும் இரு நாட்டு மீனவர் களிடையே பேச்சுவார்த்தைக் கூட்டம் நடத்த விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x