Last Updated : 18 Feb, 2016 08:54 AM

 

Published : 18 Feb 2016 08:54 AM
Last Updated : 18 Feb 2016 08:54 AM

கருணாநிதி அறிவிப்பும் கலக்கத்தில் அழகிரி தரப்பும்

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் ‘மு.க.அழகிரியை அலட்சியப் படுத்துங்கள்' என்ற திமுக தலைவர் கருணாநிதியின் அறிவிப்பு அழகிரி ஆதரவாளர்களை கலக்கமடையச் செய்துள்ளது.

திமுகவில் தென் மண்டல அமைப் புச் செயலாளர், மத்திய அமைச்சர் என செல்வாக்கோடு வலம் வந்த மு.க.அழகிரியும், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும் தனித்தனி அணி களாகச் செயல்பட்டு வந்தனர்.

2014 ஜனவரியில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அழகிரி, ‘‘தேமுதிகவுடன் கூட்டணி அமைத்தால் திமுக உருப்படாது'' என்றார். தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க முயற்சித்து வந்த திமுகவுக்கு இது சிக்கலை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து 2014 ஜனவரி 24-ம் தேதி திமுகவில் இருந்து மு.க.அழகிரி தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அழகிரியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் சந்தித்து தங்களுக்கு ஆதரவு கோரினர். இதுவும் திமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. 2014 தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது. அதன்பிறகு அரசியல் நடவடிக்கைகளில் இருந்து அழகிரி ஒதுங்கியிருந்தார்.

சட்டப்பேரவைத் தேர்தல் வருவதால் அவரை மீண்டும் கட்சியில் சேர்க்க முயற்சிகள் நடப்பதாகவும் இதற்காக அழகிரியின் சகோதரி செல்வி குடும் பத்தினருடன் பேசி வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால், 2014 தேர்தலில் திமுகவின் தோல்விக்கு காரணமான அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்கக் கூடாது என ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், கடந்த 13-ம் தேதி திமுக - காங்கிரஸ் கூட்டணி அறிவிக்கப்பட்டது. இதுபற்றி கருத்து தெரிவித்த அழகிரி, ‘‘திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் கொள்கையே கிடையாது. எந்தக் கூட்டணி அமைந்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது. மு.க.ஸ்டாலினின் ‘நமக்கு நாமே’ பயணம் நகைச் சுவை நேரம்'' என விமர்சித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் அவர் இப்படி பேசுவது கட்சியை பலவீனப்படுத்தும். எனவே, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கருணாநிதியிடம் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த 14-ம் தேதி அறிக்கை வெளியிட்ட கருணாநிதி, ‘‘கட்சிக் கட்டுப்பாட்டை மீறும் வகையில் நடந்து கொண்டதற்காக திமுகவில் இருந்து நீக்கப் பட்டுள்ள மு.க.அழகிரி, கட்சியின் வளர்ச்சியைக் கெடுக்கவும், எழுச்சியைக் குலைக்கவும் திட்டமிட்டு பேட்டி அளித்து வருகிறார். அவருக்கும் திமுகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் செய்து வரும் துரோகத்துக்கு என் பெயரைப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. திமுகவினர் யாரும் அவரது கருத்துக்களை பொருட்படுத்த தேவையில்லை. அவரையும், அவரது பேச்சுக்களையும் அலட்சியப்படுத்த வேண்டும்’’ என கூறியிருந்தார்.

தந்தை, தம்பியுடன் அழகிரி எப்படியாவது சமாதானமாகிவிடுவார். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்த அவரது ஆதரவாளர் களுக்கு கருணாநிதியின் இந்த கடுமையான அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தனது நெருங்கிய ஆதரவாளர்களுடன் அழகிரி ஆலோ சித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அழகிரி ஆதரவாளர் ஒருவரிடம் பேசியபோது, ‘‘சட்டப் பேரவைத் தேர்தலின் போது திமுகவில் இருப்பதுதான் அழகிரியின் எதிர்காலத்துக்கு நல்லது. இந்தத் தேர்தலில் திமுகவுக்கு எதிரான நிலையை எடுத்தாலோ, வேறு கட்சிக்கு சென்றாலோ கருணாநிதி மன்னிக்கவே மாட்டார். அவரது ஆதரவாளர்கள் அனைவரும் ஸ்டாலின் பக்கம் சென்று விடுவார்கள்'' என்றார்.

இந்நிலையில் பாஜக தலைவர்களுடன் அழகிரி பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து ‘தி இந்து'விடம் பேசிய அழகிரி,‘‘என்னை அலட்சியப்படுத்துமாறு கருணாநிதி அறிவித்திருப்பது பற்றி எதுவும் கூற விரும்பவில்லை. நான் பாஜகவில் சேரப் போகிறேன். அதிமுகவில் சேரப்போகிறேன் என்றெல்லாம் எழுதுகிறார்கள். இதுவரை நான் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இப்போதைக்கு எதுவும் கூறவிரும்பவில்லை. பொறுத் திருந்து பாருங்கள்'' என்றார்.

இதனிடையே திமுகவுக்கு எதிரான நிலையை அழகிரி எடுத்தால் என்ன செய்வது என்பது குறித்து மு.க.ஸ்டாலின் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் கூட்டணி அமைப்பதில் தீவிரமாக இருக்கும் கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் அழகிரியின் நடவடிக்கைகள் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன. அழகிரி ஆதரவாளர்களுக்கும் 'அரசியல் எதிர்காலம்' குறித்து கலக்கம் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x