Published : 16 Jul 2021 03:12 AM
Last Updated : 16 Jul 2021 03:12 AM

முதல்வரின் கார் முன் அமர்ந்து கோஷமிட்ட நபரால் தலைமைச் செயகத்தில் பரபரப்பு

சென்னை

கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அதன் நிர்வாகிகள் நேற்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியை சந்தித்தனர். அதன்பின் அவர்கள் தலைமைச் செயலக கட்டிடத்தின் 10-ம் எண் நுழைவு வாயில் அருகில் வந்தனர்.

அப்போது, அவர்களுடன் வந்த ஒருவர், திடீரென அங்கு நிறுத்தப்பட்டிருந்த முதல்வரின் கார் முன் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியதுடன், தனது நிலம் தொடர்பான பிரச்சினையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோஷமிட்டார். அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார், உடனடியாக அவரை அப்புறப்படுத்தினர்.

விசாரணையில் அவரது பெயர் அருள்தாஸ் என்று தெரியவந்தது. நந்திவரம் நெல்லிக்குப்பம் சாலையில் அருள்தாஸ்க்கு சொந்தமாக 305 சதுரடி நிலத்தில் கடை உள்ளதாகவும், அந்த மனையை அருகில் உள்ள சிலரிடம் பணம் வாங்கிக் கொண்டு அளந்த சர்வேயர் ஒருவர் 132 சதுரடி மட்டும்தான் உள்ளது என்று கூறியதால், தனது கடையின் சுவரை அவர்கள் இடித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த மனையை அளந்து தரும்படி முதல்வர் தனிப்பிரிவில் தான் மனு அளித்துள்ளதாகவும். அதில் விரைவாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்த முதல்வரின் கார் முன் அமர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவரை போலீஸார் விடுவித்தனர். இந்த சம்பவத்தால் தலைமைச் செயலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x