Published : 16 Jul 2021 03:13 AM
Last Updated : 16 Jul 2021 03:13 AM

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் இடங்கள் ஆய்வு: வரைபடம், திட்ட மதிப்பீடு தயாரிப்பு பணி தீவிரம்

வேலூர் மாவட்டத்தில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை மற்றும் தரைகீழ் தடுப்பணை கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள இடங்களை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார். விரைவில், திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு இறுதி செய்யப்படவுள்ளது.

கர்நாடக மாநிலம் சிக்பெல்லாபூர் மாவட்டத்தில் உள்ள நந்திமலையில் உற்பத்தியாகும் பாலாறு தமிழகத்தில் மட்டும் சுமார் 222 கி.மீ பயணித்து வயலூர் அருகே வங்கக் கடலில் கலக்கிறது. இதில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் சுமார் 127 கி.மீ தொலைவுக்கு பாய்ந்தோடும் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி மழைக்காலத்தில் வீணாகும் தண்ணீரை சேமிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

தற்போது, பாலாற்றின் குறுக்கே 5 தடுப் பணைகள் கட்ட பொதுப்பணி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் இறைவன்காடு அருகே பாலாறு இரண்டாக பிரியும் இடத்திலும், பொய்கை கிராமம் அருகே தடுப்பணையும் வேலூர் சேண்பாக்கம் பகுதியில் தரைகீழ் தடுப்பணையும், அகரம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் தடுப்பணை மற்றும் தரைகீழ் தடுப்பணை கட்டப்பட உள்ள இடங்களை ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று மேற்கொண்டார். இறைவன்காடு பகுதியில் பாலாறு இரண்டாகப் பிரிந்து 7 கி.மீ பயணித்து காட்பாடி-திருமணி அருகே மீண்டும் பாலாற்றுடன் இணைகிறது.

பாலாற்றில் நீர்வரத்து ஏற்படும் போதெல்லாம் கொட்டாற்றுக்கு நீர்வரத்து இல்லாமல் இருப்பதாக விவசாயிகளும் பொதுமக்களும் கூறி வருகின்றனர். எனவே, பாலாறு பிரியும் இடத்தில் 680 மீட்டர் நீளமும், சுமார் 1.50 மீட்டர் உயரமும் கொண்ட தடுப்பணை கட்டப்பட உள்ளது. பொய்கை பகுதியில் 200 மீட்டர் நீளமும் 1.50 மீட்டர் உயரம் கொண்ட தடுப்பணை கட்டப்பட உள்ளது. சேண்பாக்கம் பகுதியில் 675 மீட்டர் நீளம் கொண்ட தரைகீழ் தடுப்பணை கட்டப்பட உள்ளது. தரைகீழ் தடுப்பணையால் வேலூர் சேண்பாக்கம், கருகம்பத்தூர், விருதம்பட்டு, தண்டலம் கிருஷ்ணாபுரம் கிராமங்களில் நிலத்தடி நீர் செறிவூட்டப்படும்.

தடுப்பணை கட்டப்படவுள்ள இடங் களை நேரில் ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கூறும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட உள்ள தடுப்பணை மற்றும் தரைகீழ் தடுப்பணை தொடர்பான வரைபடம் தயாரிப்பு பணிக்காக சமர்ப்பிக்கப் பட்டுள்ளது’’ என தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர்கள் ரமேஷ், குமரன், உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x